மனிதரில் எத்தனை நிறங்கள்! (85)

The beginning of wisdom is found in doubting; by doubting we come to the question, and by seeking we may come upon the truth.
– Pierre Abelard

டாக்டர் ப்ரசன்னா கேட்டான். "அந்த சிரிப்பை எங்கே நேர்ல கேட்டாய்?"

"பார்க்ல. நான் அம்மா கூட பார்க் போய் தூரமா வெளாடிட்டு இருந்தேன். அப்ப அந்தப் பொம்பள சிரிச்சது கேட்டுச்சு. திரும்பிப் பாத்தேன்….அம்மா கிட்ட பேசிட்டிருந்தா"

"அம்மா கிட்ட என்ன பேசிட்டு இருந்தா தெரியுமா?"

"எனக்குக் கேக்கல…."

"அப்ப அவள் கூட வேற யாராவது இருந்தாங்களா?"

"இல்ல…"

"உங்க அம்மா கூட அவளைத் தவிர வேற யாராவது இருந்தாங்களா?"

"இல்ல…"

"அந்தப் பொம்பள யாருன்னு தெரியுமா?"

"தெரியில…. ஆனா அவ பேட் கர்ல் (bad girl)…."

"அந்த பேட் கர்ல் பார்க்க எப்படியிருந்தாள்?"

"அவ பேடா இருந்தா"

மூன்று வயதுக் குழந்தைக்கு அதை விட அதிகமாய் வர்ணிக்கத் தெரியாதது இயல்பே என்று ப்ரசன்னா நினைத்தான்.

"அவ உன் அம்மா கிட்ட ரொம்ப நேரம் பேசினாளா…."

"இல்ல. கொஞ்ச நேரம் தான். நான் ஓடிப் போய் அம்மா காலைப் புடிச்சுகிட்டேன். அப்ப அவ சிரிச்சுட்டே போயிட்டா…"

"உங்கம்மா என்ன செஞ்சாங்க?"

"அம்மா தலையில கை வச்சு உக்காந்துட்டாங்க…."

"அந்த பேட் கர்ள நீ மறுபடி எப்பவாவது பாத்தியா?"

ஆர்த்தியிடமிருந்து பதில் உடனே வரவில்லை. ஒரு நிமிட மௌனத்திற்குப் பிறகு ஆர்த்தி சொன்னாள். "ம்…."

"எங்கே"

ஆர்த்தி பதில் சொல்லவில்லை. அவள் முகம் வெளுத்துப் போனது. கண்ணிமைகள் படபடத்தன. மூச்சு சீரில்லாமல் விட ஆரம்பித்தாள். இனி இந்த செஷனில் அதிகம் எதையும் அறிய முடியாது என்று உணர்ந்த ப்ரசன்னா அவளை அமைதிப்படுத்தும் குரலில் சொன்னான்.

"ஓகே. ஆர்த்தி போதும்…. நோ ப்ராப்ளம்….. எல்லாமே ஃபைன்.. ரிலாக்ஸ்… ரிலாக்ஸ்… உன் மனம் இப்ப அமைதியா இருக்கு. எந்தக் கவலையும், பயமும் உனக்கு இல்லை. நீ பாதுகாப்பாய் இருக்கிறாய். நான் ஐந்து வரை எண்ணப் போகிறேன். ஐந்து எண்ணி முடிக்கிறப்ப நீ முழிச்சுக்கப் போகிறாய். ரிலாக்ஸா இரு….ஒன்னு….."

சில வினாடிகள் கழித்து சொன்னான். "ரெண்டு…"

ஆர்த்தியின் மூச்சு சீராகியது.

"மூணு"

ஆர்த்தியின் முகம் அமைதிக்குத் திரும்ப ஆரம்பித்தது.

"நாலு"

ஆர்த்தி ஹிப்னாடிச தூக்கத்திலிருந்து விடுபட ஆரம்பித்தது தெரிந்தது.

"அஞ்சு"

ஆர்த்தி விழித்துக் கொண்டாள். தான் இருக்கும் இடம் இன்னது என்று அறிய அவளுக்குச் சிறிது நேரம் தேவைப்பட்டது. ப்ரசன்னாவைப் பார்த்து சிறிது நேரம் விழித்தவள் எல்லாம் நினைவுக்கு வர ஆர்வமாகக் கேட்டாள். "சக்ஸஸ் ஆச்சா. ஏதாவது தெரிஞ்சுதா?"

"சக்ஸஸ் தான் ஆர்த்தி. ஒருசில விஷயங்கள் தெரிஞ்சுது. மீதியை அடுத்த செஷனில் பார்க்கலாம்"

"என்ன தெரிஞ்சுதுன்னு தெரிஞ்சுக்கலாமா?"

"அதை மொத்தமா நீங்க கடைசியில் தெரிஞ்சுக்கறது தான் நல்லது ஆர்த்தி" என்று சொன்ன ப்ரசன்னா அந்த டேப்பை ஆஃப் செய்தான்.

*************

பஞ்சவர்ணத்திற்குக் கண்ணாடியில்லாமல் படிக்கவோ, டீவி பார்க்கவோ முடிவதில்லை. ஆனால் கண்ணாடி இருந்தும் அவள் அதைப் போட்டுக் கொள்வதைப் பெரும்பாலும் தவிர்த்தாள். அது அவள் வயதைக் கூட்டிக் காண்பிக்கும் என்பது அவள் கவலை. ஆனால் ஆர்த்தியின் பிறந்த நாள் வீடியோவை பவானியிடமிருந்து வாங்கியவள் அதைத் தனியாகப் பார்க்கத் தனதறைக் கதவைச் சாத்திக் கொண்டு கண்ணாடி அணிந்து கொண்டாள். திரையில் ஓடிய நிகழ்ச்சிகளை ஆரம்பத்தில் பெரிய ஆர்வம் இல்லாமல் பார்த்தாள். போகப் போகக் கூர்ந்து பார்த்தாள். முழுவதும் முடிந்த பிறகு மீண்டும் போட்டுப் பார்த்தாள். இரண்டாவது முறை பார்த்த போது அவள் மூளையில் ஆயிரம் கேள்விகள் எழுந்தன. மீண்டும் மூன்றாவது முறையாகப் போட்டுப் பார்த்தாள். அதை ஆஃப் செய்து விட்டு கண்ணாடியைப் பத்திரமாக உள்ளே வைத்து விட்டு குறுக்கும் நெடுக்குமாக நடக்க ஆரம்பித்தாள்.

கதவு தட்டப்பட்டது. தட்டும் விதத்தில் இருந்தே மூர்த்தி தான் என்பதை ஊகித்த பஞ்சவர்ணம் கதவைத் திறந்தாள்.

"வாடா. அந்த அசோக் கிட்ட ஞாபகப்படுத்தினாயா?"

அசோக்கின் பெயரைக் கேட்டதும் மூர்த்தி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. "நீங்க சொன்னீங்கன்னு சொல்லி நான் அவன் கிட்ட வாங்கிக் கட்டிகிட்டேன். எதையும் ரெண்டாவது தடவை சொல்லி தொந்திரவு செய்ய வேண்டாம்னு மூஞ்சியில் அடிச்ச மாதிரி சொல்லிட்டான்."

பேரன் கோபம் பஞ்சவர்ணத்தைப் பாதிக்கவில்லை. "அறிவு இருக்கிற இடத்துல ஆங்காரம் கண்டிப்பா இருக்கும்டா. அதை விடு. ஆர்த்தியோட பிறந்த நாள் வீடியோவைப் பார்த்தாயா?"

"இல்லை"

"பார்" என்றவள் அவனைப் பார்க்க விட்டு விட்டு தான் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள். அவன் பார்த்து முடித்தவுடன் "எப்படிடா இருக்கு?" என்று கேட்டாள்.

"நல்லா தான் இருக்கு?"

பஞ்சவர்ணம் முகம் சுளித்தாள். "வித்தியாசமா எதுவும் தெரியலையா?"

சிறிது யோசித்து விட்டு மூர்த்தி சொன்னான். "ஆர்த்தியையே அதிகம் காமிச்சிருக்கான். அவளுக்கு சரிசமமா அந்தக் கொலைகாரியையும் காமிச்சிருக்கணும். அப்படித் தான் பொதுவா நடக்கும். இந்தத் தடவை அவள் கூட ஆர்த்தி பக்கத்துல வர்றப்ப தான் தெரியறாள். ஆச்சரியமாயிருக்கு"

ஓரளவு உண்மையை நெருங்கி விட்டான் என்று நினைத்த பஞ்சவர்ணம் கேட்டாள். "அப்படி ஏன் எடுத்திருப்பாங்கன்னு ஊகிக்க முடியுதாடா?"

"அந்தக் கொலைகாரி சொல்லி தான் அப்படி எடுத்திருப்பாங்க?"

"சரியா சொன்னாய். அந்தக் கொலைகாரி அப்படி எடுக்கச் சொல்லி இருப்பாள். அதனால் அந்த வீடியோக்காரன் அப்படி எடுத்திருப்பான். ஓகே. அந்த சிவகாமி அப்படி சொல்லி இப்படி வீடியோ எடுக்கக் காரணம் என்னவாய் இருக்கும்னு நினைக்கிறாய்?"

மூர்த்திக்கு சத்தியமாய் காரணம் தெரியவில்லை. பாட்டியும், சிவகாமியும் ஏன் ஒன்றைச் செய்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமல்ல என்பது அவன் கருத்து. ஆனால் சிவகாமி ஏன் ஒன்றைச் செய்கிறாள் என்பதைப் பாட்டியால் ஊகிக்க முடியும் என்பதால் மூளையைக் கசக்க முற்படாமல் "நீங்களே சொல்லுங்கள்" என்றான்.

"எனக்குத் தோணுது. அவள் ஒரு டூப்ளிகேட் ஆர்த்தியை எங்கேயாவது ரெடி செஞ்சு வச்சிருக்கணும். ஓரளவு சுமாரா பார்க்க ஒரே மாதிரி உடல்வாகு இருந்தால் போதுமேடா. அந்த நேபாளத்துக்கு இப்ப ப்ளாஸ்டிக் சர்ஜரி செஞ்சு முகத்தை மாத்தற மாதிரி அந்தப் பொண்ணோட முகத்தையும் மாத்தறதுக்கு இவளுக்கு என்னடா கஷ்டம். இந்த வீடியோவைப் பார்த்தா ஆர்த்தி எப்படி நிப்பா, பேசுவா, யார் யார் கிட்ட எப்படி நடந்துக்குவான்னு அந்த டூப்ளிகேட் ஆர்த்திக்குக் கத்துக் கொடுக்கத்தான் இப்படி எடுத்துருக்கற மாதிரி தெரியுது….."

பாட்டி நிறைய தமிழ் சினிமா பார்த்து இப்படிக் கற்பனை செய்கிறாள் என்று மூர்த்திக்குத் தோன்றியது. அதை அவன் முகபாவனையில் இருந்தே கண்டுபிடித்த பஞ்சவர்ணம் எரிச்சலுடன் சொன்னாள். "உனக்கு நம்பக் கஷ்டமாயிருந்தா அவள் இப்படி வீடியோ எடுத்ததுக்கு நீயே காரணம் சொல்லு பார்க்கலாம்…."

மூர்த்திக்குக் காரணம் எதுவும் தெரியவில்லை.

"யோசிச்சுப் பாருடா. ஆர்த்தியை ஆரம்பத்தில் இருந்தே தேட சிவகாமி ஆர்வம் காட்டலை…."

மூர்த்தி கேட்டான். "அப்படி ஒரு டூப்ளிகேட் ஆர்த்தியை ரெடி செய்திருந்தால் அவளையே ஆர்த்தியா இந்த வீட்டுக்குக் கூட்டிகிட்டு வந்திருக்கலாமே பாட்டி"

"ஆர்த்தி மாதிரி ஆளை ரெடி பண்ணலாம். ஆனா அந்தக் கிழவன் கிழவியையுமா அப்படி ஒரே நேரத்துல ரெடி செய்ய முடியும். அந்தக் கிழங்களோட வந்தால் தாண்டா அவளை ஒரிஜினல் ஆர்த்தின்னு நம்புவாங்க"

மூர்த்திக்கு அவள் சொல்வதில் உள்ள லாஜிக் புரிய ஆரம்பித்தது.

"அப்படின்னா பாட்டி, இனி அந்தக் கொலைகாரி என்ன செய்வாள்னு நினைக்கிறீங்க"

"ஒரு நாள் ஒரிஜினல் ஆர்த்தியை அப்புறப்படுத்திட்டு அந்த டூப்ளிகேட் ஆர்த்தியை இங்கே வரவழைச்சுடுவான்னு தோணுதுடா. அதனால் தான் இவளை அவள் பெருசா கண்டுக்காம இருக்கிறாள்னு தோணுதுடா"

பாட்டி அதீதமாய் கற்பனை செய்கிறாளா இல்லை நிஜமாகவே சிவகாமி தன் விருப்பப்படி ஆடுகிற ஒரு டூப்ளிகேட் ஆர்த்தியை தயார் செய்து விட்டு தக்க சமயத்தில் ஆள் மாறாட்டம் செய்யக் காத்திருக்கிறாளா என்பதைக் கண்டுபிடிக்க முடியாத மூர்த்திக்குத் தலை சுற்றியது.

(தொடரும்)”

About The Author