மனிதரில் எத்தனை நிறங்கள்! (90)

Had we never loved so kindly
Had we never loved so blindly
Never met, or never parted
We had never been broken hearted.
– Burns

டாக்டர் ப்ரசன்னா தனது க்ளினிக்கில் நுழைந்தவுடன் ஒரு வித்தியாசத்தை உணர்ந்தான். யாரோ வந்து விட்டுப் போயிருக்கிறது போல் அவனுக்குத் தோன்றியது. ஆனால் அறையில் எந்த ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. எல்லாம் அந்தந்த இடத்திலேயே இருந்தன. எதுவும் இடம் மாறவில்லை. அவன் பீரோ, மேசை எல்லாம் பூட்டி தான் இருந்தன. திறந்து பார்த்தான். உள்ளேயும் எல்லாம் வைத்தது வைத்தபடி தான் இருந்தன. எதுவும் காணாமல் போகவில்லை. எத்தனையோ பெரிய மனிதர்களின் வெளியே தெரியாத ஆழ்மன ரகசியங்கள் இங்கு இருக்கின்றன. அவற்றில் எதுவும் திருட்டுப் போனது போல் தெரியவில்லை. ஆனாலும் அந்த உணர்வு அவனை விட்டுப் போகவில்லை.

பிரமையாகத் தான் இருக்க வேண்டும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டாலும் ஒரு நெருடல் அவன் மனதில் இருந்து கொண்டே இருந்தது….

*********

"ஹாய் ஆகாஷ்"

அதிகாலையில் ஜாகிங் போய்க் கொண்டிருந்த ஆகாஷை வழிமறித்து லிஸா சொன்னாள். ஆகாஷ் நின்றான். "ஹாய்"

"நான் இன்னிக்கு ஈரோடுக்குக் கிளம்பறேன் ஆகாஷ். போகிறதுக்கு முன்னால் உன்கிட்ட கொஞ்சம் பேசணும். பேசலாமா"

அவன் தலையசைத்தான். இருவரும் சேர்ந்து லேசாய் பனி பெய்யும் பாதையில் நடக்க ஆரம்பித்தார்கள்.

"ரொம்ப நாளா உன் கிட்ட சாரி கேட்கணும்னு நினைச்சுகிட்டு இருந்தேன் ஆகாஷ். நிஜமாவே சாரி"

"எதுக்கு"

"நீ என்னை காதலிக்கலைன்னு சொன்னதுக்கு நான் ரியாக்ட் செஞ்ச விதத்துக்கு. இப்ப யோசிச்சா எனக்கு அது கிறுக்குத்தனமா படுது. நம்ம நல்ல நட்பை அசிங்கப்படுத்திட்டேனோன்னு தோணுது…."

"சேச்சே அப்படியெல்லாம் இல்லை….இப்பவும் நான் உன்னை நல்ல தோழியா தான் நினைக்கிறேன். உன்னையும் ப்ரசன்னாவையும் தவிர அந்த அளவுக்கு நெருக்கமான நல்ல ஃப்ரண்ட்ஸ் எனக்கு இல்லை, லிஸா"

லிஸாவுக்கு ஏதோ தொண்டையை அடைத்தது. குரல் கரகரக்க சொன்னாள். "தேங்க்ஸ்"

ஒரு நிமிட மௌனத்திற்குப் பின் தன்னை சமாளித்துக் கொண்டு கிண்டலாகக் கேட்டாள். "நல்ல தோழின்னு சொல்கிறாய். காதலிச்சா அதை ஃப்ரண்ட்ஸ் கிட்ட சொல்றதில்லையா?"

ஆகாஷ் நடப்பதை நிறுத்தி அவளைக் கேள்விக்குறியோடு பார்த்தான்.

"நான் காதலிக்கிறேன்னு யார் சொன்னது?"

"நீ தான்"

"எப்ப சொன்னேன்?" அவன் திகைத்தான்.

"ஆர்த்தியோட பர்த்டே பார்ட்டில அவ கையைக் குலுக்கி நின்ன விதத்துல எல்லாருக்கும் பிரகடனமே பண்ணிட்டாயே அப்புறம் என்ன?"

"ரப்பிஷ்" என்றவன் அவளை முறைக்க அதைப் பொருட்படுத்தாத லிஸா சொன்னாள். "சத்தியமா சொல்றேன் நான் சினிமால தான் இந்த மாதிரி காதலைப் பார்த்திருக்கிறேனே ஒழிய நிஜ வாழ்க்கையில் அது வரைக்கும் பார்த்ததில்லை. இல்லாட்டி நீ என்னைக் காதலிக்கிறாய்னு நினைச்சிருப்பேனா. அந்த நேரத்துல நீங்க ரெண்டு பேரும் மெய் மறந்து நின்னீங்க பாரு…அது என் தலையில ஓங்கி குட்டி சொல்லுச்சு. "இது தாண்டீ காதல்"னு…"

நிஜமாகவே ஆகாஷுக்கு அன்றைய சில நிமிட பலவீனத்தை நினைத்து தன் மேலேயே கோபம் வந்தது. கோபத்தோடு சொன்னான். "சும்மா உளறாதே"

"உளர்றது எல்லாம் லவ் செய்யறவங்க தான். என்னை மாதிரி கல்யாணம் செய்துட்டவங்க எல்லாம் அந்த ஸ்டேஜ்ல இருந்து தாண்டிடறாங்க."

இவள் வாய் திருமணத்திற்குப் பிறகும் குறையவில்லை என்று ஆகாஷ் நினைத்தான். முன்பெல்லாம் வாயாடி என்று தான் அவளை அழைப்பான்…."நீ பேசணும்னு சொன்னது இதைத் தானா?"

"காதலிக்கிறதுன்னா அதை நேரா செஞ்சுட்டுப் போயேன். அதென்ன கோபப்படற மாதிரி ஒரு டிராமா எல்லாம்…"

தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு பொறுமையாகச் சொன்னான். "லிஸா. உனக்கு சொன்னா புரியாது"

"எல்லாம் புரிஞ்சுது. ஆர்த்தி எல்லாத்தையும் சொன்னாள்."

ஆகாஷ¤க்கு ஆர்த்தி மீது கோபம் வந்தது. ஊரெல்லாம் சொல்லிக் கொண்டு திரிகிறாளா?

"அவ என் கிட்ட வெளியே சொல்ல வேண்டாம்னு தான் சொல்லி ப்ராமிஸ் வாங்கிகிட்டா. ஆனா எனக்கு சொல்லாம இருக்க முடியலை. வர்ற ஞாயிற்றுக்கிழமை சர்ச்சில போய் இதுக்கு நான் பாவமன்னிப்பு கேட்டுக்கறேன்…."

அவனுக்கு அந்தக் கோபத்தையும் மீறி புன்முறுவல் வந்தது.

அவள் தொடர்ந்தாள். "சிரிக்காதே…. அவளை மாதிரி ஒரு நல்ல பொண்ணு உன்னைக் காதலிக்க நீ கொடுத்து வச்சிருக்கணும். அவள் உங்கம்மாவை சந்தேகப்படறாள்னா அதுக்குக் காரணம் இருக்கு"

கோபத்தில் அவன் கண்கள் அவளைச் சுட்டெரித்தன. அவள் பொருட்படுத்தாமல் தொடர்ந்தாள். "உங்கம்மா எங்கப்பாவுக்கு அன்னைக்கு உதவியிருக்கலைன்னா எங்கப்பா இன்னைக்கு ஒரு சேல்ஸ்மேனாவோ, கடையில் கணக்கு எழுதறவராவோ இருந்திருப்பார். அதை நான் மறக்கலை. ஆனா உங்கம்மா பத்தி எனக்குத் தெரியும். உனக்குத் தெரியும். அவளுக்குத் தெரிஞ்ச உங்கம்மா வேற. அவங்கம்மா பிணத்தோட முகத்தை அவங்க தாத்தா பாட்டிக்குக் காட்டாத உங்கம்மா. அவளை பாண்டிச்சேரியில் காலேஜ் டேயில் போன வருஷம் நேரில் பார்த்துட்டும் அவளைத் தெரிஞ்ச மாதிரியே காமிச்சுக்காத உங்கம்மா…."

சென்ற வருடம் கல்லூரி தினத்தில் அம்மா ஆர்த்தியைப் பாண்டிச்சேரியில் பார்த்திருக்கிறாள் என்ற செய்தி ஆகாஷ¤க்குத் திகைப்பளித்தது. கேட்டதை நம்ப முடியாமல் அவளைப் பார்த்தான்.

"…அதை வச்சு உங்கம்மா மேல் தப்பு சொல்லலை. அவங்க எப்படின்னு எனக்குத் தெரியும். நீ அவள் ஸ்தானத்துல நின்னு பாரு. அவளுக்கு சந்தேகம் தோணறதுல தப்பிருக்கா?"

"அவளைக் கூட்டிகிட்டு வர என்னை அனுப்பிச்சதும் எங்கம்மா தான். அவ தாத்தாவைக் காப்பாத்துனதும் எங்கம்மா தான். அதெல்லாம் கணக்கிலேயே இல்லையா?"

"அதனால் தான் அவள் குழம்பிப் போயிருக்கா ஆகாஷ். உங்கம்மா மாதிரி ஒரு ஆளைப் புரிஞ்சுக்கறது அவ்வளவு சுலபமில்லை. வேற யாரோ கொலை செஞ்சதை உங்கம்மா மறைக்கப் பார்ப்பதா கூட இருக்கலாம்…..இன்னொரு விஷயத்தை எங்கம்மா வாயிலிருந்து கிளறி தெரிஞ்சுகிட்டேன். ஆர்த்தியோட அம்மா இருக்கறப்பவே ஆர்த்தியோட அப்பாவுக்கும், பவானி ஆண்ட்டிக்கும் இடையே அஃபேர் இருந்துச்சாம். …."

ஆகாஷ் அவளையே அதிர்ச்சியோடு பார்த்தான்.

"உண்மை தான். அம்மா வாயில இருந்து அதைப் புடுங்கறது சுலபமாயிருக்கலை. நான் இதை ஆர்த்தி கிட்ட கூட சொல்லலை. நீயும் ப்ராமிஸா சொல்லிடாதே. உங்க ரிலிஜன்ல பாவமன்னிப்பு கிடையாது. ஞாபகம் வச்சுக்கோ."

அதிர்ச்சியின் நடுவிலும் அவள் சொன்னது ஆகாஷிடம் மீண்டும் புன்முறுவலை வரவைத்தது.

"நீ அவளை தண்டிக்கறதா நினைச்சு உன்னையும் தண்டிச்சுகிட்டு இருக்கிறாய். காதல்ல தனியா ஒருத்தரை தண்டிச்சுட முடியாது, ஆகாஷ். எதுவுமே ரெண்டு பேரையும் தான் பாதிக்கும். நீ பாதிக்கப்படாத மாதிரி நடிக்கலாம். ஆனா உண்மையில் உள்ளுக்குள்ளே நீயாவது சந்தோஷமாயிருக்கியான்னு உன்னையே கேட்டுக்கோ ப்ளீஸ்….."

"கடைசியா என்ன சொல்ல வர்றே"

"ஆர்த்தி மேல் ஒரு தப்பும் இல்லைன்னு சொல்றேன். ஆர்த்தியை ரொம்ப தூரம் வேதனைப்படுத்தாதேன்னு சொல்ல வர்றேன்."

"நீ நேத்து வரைக்கும் இருந்த மாதிரி ரெண்டு மூணு வார்த்தை பேசற லிஸாவாவே இருந்திருக்கலாம்னு தோணுது"

"அதெல்லாம் உன்னையும் ப்ரசன்னாவையும் மாதிரி நெருக்கமான ஃப்ரண்ட்ஸ் எனக்கு வேற இல்லைன்னு சொல்றதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும். உள்ளதை சொல்றதுக்குத் தான் நிஜமான ஃப்ரண்ட்ஸ். சரி நான் கிளம்பறேன். சொன்னதை ஈகோ இல்லாம யோசி. நான் ஈரோடு போனாலும் போன்ல பேசுவேன், உங்க ரெண்டு பேர் கிட்டயும். ஞாபகம் வச்சுக்கோ. பை"

"பை" என்றவன் போகும் அவளையே பார்த்திருந்து விட்டு பிறகு ஜாகிங்கை தொடர்ந்தான். சிவகாமி சென்ற வருடம் ஆர்த்தியைப் பார்த்திருக்கிறாள் என்ற தகவலும், சந்திரசேகருக்கும் பவானிக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்திருக்கிறது என்ற தகவலும் அவனுக்கு ஜீரணிக்க முடியாதவையாக இருந்தன. மனம் நடந்தவை நடக்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று ஆசைப்பட்டது. ஆர்த்தியைப் பார்க்காமல் இருந்திருந்தால்…அவளைக் காதலிக்காமல் இருந்திருந்தால்…அவள் அவன் தாயை சந்தேகப்படாமல் இருந்திருந்தால்….

*********

பவானிக்குத் தன் தாயை சந்திக்கவே கூச்சமாக இருந்தது. அவள் மூர்த்தியிடம் சொன்ன அருவறுக்கக் கூடிய படு பாதகமான திட்டத்தைக் கேட்ட கணம் முதல் இப்படியொருத்தி வயிற்றில் வந்து பிறந்து விட்டோமே என்ற சுயபச்சாதாபம் அவளுக்குத் தோன்ற ஆரம்பித்து விட்டது.

நேற்று ஆர்த்தி அவள் ஒரு மாதிரியாக இருப்பதைப் பார்த்து "என்ன சித்தி உடம்பு சரியில்லையா?" என்று கேட்ட போது பவானி சமாளிக்க "ஒரே தலைவலி ஆர்த்தி" என்று சொல்ல, ஆர்த்தி பலவந்தமாய் அமிர்தாஞ்சன் நெற்றியில் நீவி விட்ட போது அவளுக்குக் கண்களில் நீர் தாரை தாரையாய் வழிய ஆரம்பித்து விட்டது. கண்ணீரின் காரணத்தைத் தவறாகப் புரிந்து கொண்ட ஆர்த்தி "சாரி சித்தி நான் கொஞ்சம் அதிகமாகவே தடவிட்டேன் போல இருக்கு" என்று சொல்லிய போது அவள் மனம் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. அவளுக்குத் தன் தாயைக் காட்டிக் கொடுக்கவும் முடியவில்லை. அவள் காரியங்களைப் பொறுத்துக் கொண்டிருக்கவும் முடியவில்லை. இருதலைக் கொள்ளி எறும்பாக அவள் தவித்தாள்.

இன்று காலையிலேயே தன் சென்னை விஜயத்தை தாயிடம் சொல்லி விடுவது என்று கிளம்பினாள்.

மகளைப் பார்த்தவுடனே பஞ்சவர்ணம் கேட்டாள். "உன் தலைவலி எப்படி இருக்கு?"

"பரவாயில்லை"

"முந்தா நாள் நான் கூப்பிட்டப்பவும் தலைவலின்னு நீ வரலை. நேத்து உனக்கு உன் மகள் அமிர்தாஞ்சனம் தடவிகிட்டு இருந்தாள்னும் கேள்விப்பட்டேன். அப்படியென்ன தலைவலி"

"உன் மகள்" என்ற பட்டம் ஏளனமாக சொல்லப்பட்டதைப் புரிந்து கொள்ளாதது போல் பவானி பதில் சொன்னாள்.

"தெரியலை. கண் டெஸ்ட் செய்துக்கணும்னு நினைக்கிறேன்"

"அதுக்குத் தான் மெட்ராஸ் போறியா?"

அதற்குள் தாயிடம் தகவல் வந்து விட்டதை எண்ணி பவானி திகைத்தாள். "அதுக்கல்ல. என் ஃப்ரண்ட் கனிமொழியோட கணவர் சீரியஸா இருக்கார். அவரைப் பார்த்துட்டு வரலாம்னு போறேன்"

"யாரு கனிமொழி? கருணாநிதி மகளா?" பஞ்சவர்ணம் ஏளனமாகக் கேட்டாள்.

"இல்லை. தலைக்குந்தால இருந்து காலேஜுக்கு வருவாளே என் ஃப்ரண்ட் கனிமொழி -அவ தான்"

மகளை பஞ்சவர்ணம் அதற்கு மேல் குடைய விரும்பவில்லை. பின் தொடர்ந்து யாரைச் சந்திக்கிறாள் என்று அறிய ஏற்பாடு செய்து விட்டதால் அவள் பதில் முக்கியமில்லாதது என்று நினைத்தாள். ஆனாலும் வேறு யாரையோ பார்க்கப் போகிறாள் என்பதில் அவளுக்கு சந்தேகமே இல்லை. அது தனக்குத் தெரிந்த நபரா இல்லை தெரியாத நபரா என்பதில் தான் அவளுக்கு குழப்பம் இருந்தது. அது யாராக இருந்தாலும் அது அபாயமே என்று அவள் உள்மனம் சொன்னது.

(தொடரும்)

About The Author

6 Comments

  1. Ravi

    I dont see any change in the story. You incresed the content also increased the dialogue for the same incident. so the story is not still moving.

  2. VR Nachaal

    The novel has really interesting knots. But it is very slow. After so many episodes it has not moved toward any direction except for her dreams. Though it has interesting events it is slowly turning out to be boring mega serial which generally never ends.

  3. Mini

    Now the story is moving fast! Friends, slowva irukundrathukaga kathayai matha mudiyathilaya.. Author considered our requests and now it really improved a lot!

  4. Anisha

    I agree with mini,story is moving fast,especially i liked conversation between aakash and lisa 😉 can you give bigger updates please??

  5. Anisha

    I agree with mini,story is moving fast,especially i liked conversation between aakash and lisa 😉 can you give bigger updates please??

  6. Ravi Krishnan

    hey guys,
    do any have problem to access to nilacharal. its not connecting for me… i tried almost a week to access it and now only i can access.
    btw, yea i liked the conversation between aakash and lisa… we have a girl here who always says that she can confess for breaking promise and we cant as she is christian and we are hindus. Its for fun we know. she is a darling.

Comments are closed.