யாதும் ஊரே (3)

என்னமோ ஒரு மனசு உள்ளூரில் கல்யாணம் வைக்கத் தோணியிருக்கிறது. நடையை எட்டிப்போட்டு நடக்கிறார்கள். அவனவனுக்கு விருந்துக் கனவு இப்பவே. பந்திக்கு முந்துறாப்ல அவசரம். பெரியாளுகள் சாப்பிட்ட இலைன்னா ஜாங்கிரி கிடக்கும். சக்கரை வியாதி வாழ்க. சின்னப்பிள்ளைகள் நொறுக்குத் தீனியெல்லாம் காலி பண்ணிவிட்டு சோத்தை அப்படியே மிச்சம் வைக்கும். அதுவும் நல்ல விசயந்தான். மோசமான விசயம் என்றால்…. சிலாள் இலையை நக்கி கண்ணாடிபோல அனுப்புவான்.

தெருவில் நுழைகையிலேயே வெளிச்சத் திகட்டலாய்க் கிடந்தது. தெருவின் இந்தக் கோடி முதல் அந்தக் கோடி வரை சாக்பீஸ் குச்சியாய்க் குழல் விளக்குகள். ஒவ்வொரு குச்சிக்கும் பேனர். நடந்தபடி வணக்கம் சொல்லும் அண்ணாச்சி. விளக்கும் கொசுவுமாய் ஒரு இரைச்சல். நாலைந்து வீடு அளவு தெருவடைத்துப் பந்தல். வாசலில் வெள்ளைக் குதிரை சாரட். குதிரைக்கு சிவப்பு வண்ணத்தில் முக்கிய கோழியிறகுக் குஞ்சலம். பித்தளைப் பூண் பொலியும் வண்டி.

கல்யாணம் அண்ணாச்சி பெண்ணுக்கா பையனுக்கா தெரியவில்லை. ரெண்டு பக்கமும் பிச்சைக்கார வரிசையைக் கடந்து சர்ர் சர்ரென்று கார்கள் பறந்தன. பந்தலுக்கு இருமருங்கிலும் டாக்சி ஸ்டாண்டாட்டம் நிறைய வண்டிகள்.

பந்தல் மேல்ப்பக்கமாய் ஒரு தாமரைப்பூ டிசைன் சீரியல் பல்பு மினுக் மினுக்கென்று இதழ்களை வெவ்வேறு வண்ணத்தில் விரித்துக் கொண்டே இருந்தது. ஆளுயரத்தில் அண்ணாச்சி பேனர். வணக்கம் சொன்னபடி. நேரில் யாரையும் அவர் வணங்குவதில்லை. வர்றாளுகள்தான் அவரை வணங்க வேண்டும். பெரிய தலையில்லா.

பக்கத்து காலிமனையிடத்தில் சமையல். தட்டிக்கு மேலே குபுகுபுவென்று புகை. திகுதிகுவென்று நெருப்பு. அக்கன்னா அடுப்புகள்மேல் இடுப்பு உயர அண்டாக்கள் பாத்திரங்களில் வெஞ்சனமும் சாம்பாரும் பாயசமும் அரிசியும் வேகும் மணம். இழுத்த்து மூச்சுவிட வைத்தது. எலேய் சிரிப்பும் வெளையாட்டுமா பாயாசத்தைத் தீய்ச்சிடாதீங்க… பொம்மைக்குதிரையில் சவாரி விளையாடும் குழந்தைபோல ஒருவன் தேங்காயை மலைபோல் துருவிக் கொண்டிருக்கிறான். பார்த்த ஒருத்தனுக்குத் தண்ணி கொட்டிவிட்டது நாவில் இருந்து. பெரிய பாரலில் தண்ணி. சமையலுக்கு வாளிவாளியாய் எடுத்துப் போனார்கள். கொஞ்சமா ஊத்துங்கடா…

பெரிய பந்தல் முழுக்க வெள்ளைச் சட்டைகள் கண்ணைப் பறித்தன. எப்படித்தான் இப்படி வெளுக்கிறாங்களோ. அவர்கள் எதாவது பேசியபடி மணி பார்த்தார்கள். மீசையைத் தேடி – அங்கதாம்ல இருக்கு – நீவிவிட்டுக் கொண்டார்கள். பெண்கள் பட்டுப்புடவையும் தலைநிறையப் பூவுமாய் இடுப்பில் தாம்பாளங்களுடன் இங்குமங்கும் நடமாடிக் கொண்டிருந்தார்கள். எல்லாருக்கும் பரபரப்பு பாவனை. முகத்தில் பவுடரோடு சிரிப்பும் பூசியிருந்தார்கள். அழகான பெண்கள் அடக்கத்துடன். ஆனா இந்த ரெண்டுங் கெட்டான் கழுத்தையும் தலையையும் படுத்துகிற பாடு… கழுத்தில் முகத்தில் காதில் என்று வெளியே தெரியும் இடமெல்லாம் தகதக. கருப்பு உடம்புக்கு அந்த மஞ்சள் தூக்கிக் கொடுத்தது.

ஓரமாய் ஒதுங்கி நின்றார் அவர். வாயில் விரலைப் போட்டுக் குதப்பியபடி ஒரு குழந்தை அவரையே பார்த்தது. டொக்கு விழுந்த கன்னத்தைத் தடவியபடி ஒரு சிரிப்பு சிரித்தார். ”பூச்சாண்டி…” என்று கத்தியபடி உள்ளே ஓடியது. பயந்து விட்டார். கொஞ்சம் பின்னால் தள்ளி நின்றுகொண்டார். நாய் ஒன்று சட்டென்று அவருக்கு முன்னால் வந்தது.

பிச்சைக்காரர்களை விரட்ட என்றே காவல் போட்டிருந்தார்கள். வாழை மரத்துடன் அவனும் ஒரு குச்சியுடன் நின்று யாரும் வழியை மறைக்காமல் விரட்டி ஒதுக்கிக் கொண்டிருந்தான். அவர் பக்கம் கம்பை ஓங்கும்போதெல்லாம் புன்னகையுடன் ”சிவாய நம” என்றார். சமையல் வாசனை எட்டும் தூரத்தில் நின்று கொண்டார். நடந்து வந்ததுக்கும் அதுக்கும் வயிறு பசித்தது. கல்யாணச் சோறு என்று வயிறைத் தயார்ப்படுத்தி வைத்திருந்தார். அண்ணாச்சி பார்வையில் பட்டால் உள்ளே கூட அனுமதி கிடைக்கலாம். பொம்பளையாள் குளிக்கிறாப் போல நெஞ்சுவரை துண்டை உயர்த்திக் கட்டி சாமி கும்பிடும் அண்ணாச்சி. குளிக்கும்போது எப்படி குளிப்பார் தெரியவில்லை… ஒருவேளை மொத்தத்தையும் அவுத்திரும்! சிவாய நம.

காலையிலேயே கும்பல் மொத்தமும் அங்கே ஆஜர். மரத்தடிகளும் குளத்தங்கரை மண்டபங்களும் நிரம்பி வழிந்தன. சாயந்தரம் இருட்டுத் திரள மொத்தமும் கல்யாணப் பந்தல் வாசலில். ”ஏலேய் நாறப்பயல்வளா, சோத்துப் பறக்கா வெட்டிகளா, ஓரமா நில்லுங்கடா, அவுக சொல்றாகல்ல?…” என்றபடி காவல்காரனைப் பார்த்துப் புன்னகைத்தார். சிலசமயம் இப்படி உத்திகள் சலுகைகளைப் பெற்றுத்தரும்.

ஊருக்கே பெரிய மனுசன். பெரிய விருந்து. ஊரின் பெரிய தலைகள் நிறையப் பேர் வந்திருந்தார்கள். மாப்பிள்ளை அலங்காரம் முடிந்து உள்ளேயிருந்து வந்து ஏறிய மர சாரட். தெருவெங்கும் ஊர்வலம் போவார்கள் போல. எதுக்கு? ஊரே இங்க இருக்கு…

இப்பவே நேரம் நிறைய ஆயிட்டது. எப்ப பந்தி ஆரம்பிப்பார்கள் தெரியவில்லை. சொந்தக்காரனும் பிச்சைக்காரனும் எல்லாருமே சோத்தை எதிர்பார்த்து எதையோ பேசியபடி வாயில் வெறும் வார்த்தையைக் குதப்பிக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.

எதிர்பார்க்கவே முடியாமல்… திடீரென்று மாடியில் இருந்து பெருஞ்சத்தம். ஆலங்கட்டி மழைபோல சடசடப்பு. ஆளுக்காள் – கோபம் ஆத்திரம் – கத்திக் கொண்டார்கள். என்ன என்றே புரியவில்லை. நிலைமை உக்கிரமாகி கைமீறி அடிதடி வரை போய்விட்டிருந்தது. நாற்காலிகள் உட்பட சரசரவென்று இழுபடுகின்றன. எறிபடுகின்றன. கீழே உட்கார்ந்திருந்தவர்கள் சட்டென்று எழுந்துகொண்டு உள்ளே ஓடினார்கள்.

திபுதிபுவென்று கூட்டம் கீழே இறங்கியது. அண்ணாச்சியை, அவர் எகிற எகிற மாடியிறக்கிக் கொண்டு வந்தார்கள். தலை கலைந்து கண்ணாடி உடைந்து சட்டை மேல்பட்டன் எகிறி, உள்பனியன் கிழிந்திருந்தது. சிவாய நம, என்கிற வாயில் நாராசமாய் வசவுகள். பல்லைப் பல்லைக் கடித்தபடி வந்தார்.

அடக்க மாட்டாமல் இவர் சிரிக்க ஆரம்பித்தார். ஐய இது தப்பு. கடகடவென்று சிரித்தார். நிற்கமுடியவில்லை. பசித்தது. சோறு கிடைக்குமா தெரியாது. கல்யாணம் நடக்குமா தெரியாது. சிரிப்புதான் முந்திக்கொண்டு அவரில் இருந்து வெளியே சிதறியது. சம்பந்திக்காரன்… அவனைச் சும்மா விட்ருவாகளா, என்ன கதில அவன் இறங்கி வரப் போறானோ. மாப்பிள்ளை சாரட்டுல ஏறுவானா… குதிரை புர்ர்ரென்றது.

நின்று திரும்பிப் பார்த்தார். பந்தல் வாசலில் பேனர் – கைகூப்பி வணங்கியபடி அண்ணாச்சி. குபுகுபுவென்று சிரித்தபடி நடந்தார்

துணிமூட்டையைத் தொட்டுப் பார்த்தார். போத்தல் இருந்தது. தெருவோர அண்ணாச்சி பேனரில் ஒருநாய் காலைத் தூக்… ச்சீ, என்று விரட்டினார், சிரித்தபடி.

(முடிந்தது)

(நன்றி: சன்டே இந்தியன் வார இதழ்)

About The Author