வளைக்காதே, ஒடிஞ்சி போகும் (1)

கடைசிப் பூட்டைப் போட்டுக் கடையைப் பூட்டி விட்டுக் குலுங்கிக் குலுங்கி அழுதேன்.கடை ஊழியர்கள் எல்லாரும் கண்ணைக் கசக்கிக் கொண்டு நின்றிருந்தார்கள். எல்லாருக்கும் ரெண்டு மாசச் சம்பளத்தை ஒரே தவணையில் கொடுத்து கணக்குத் தீர்த்தாகி விட்டது.ஒரு பத்து நிமிஷம் சோகம் கொண்டாடின பிறகு, ஒவ்வொருவராய்க் கை கூப்பியும், கை குலுக்கியும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார்கள்.

பஷீர் மட்டும் போகாமலிருந்தான். தயங்கித் தயங்கி என்னிடம் ஒரு கோரிக்கை வைத்தான்.

“அண்ணே, அவங்க எல்லாம் மெட்ராஸ்க்காரங்க. லோக்கல் பசங்க. நா திருநவேலிக்காரன். ஊருக்குப் போக முடியாது. போனா, பொழப்புக்கு வழியிருக்காது. விட்டுப் போறதுக்கு மனசும் கேக்கல அண்ணே. ஒங்க கூடவே வூட்டோட இருந்துர்றேன் அண்ணே.”

“வூட்ட விக்யப் போறேம்பா, புரோக்கர்ட்ட பேசியாச்சு. வூட்ட வித்துத்தான் கடனயெல்லாம் அடக்யணும். அப்புறம் ஒரு வாடக வூட்டப் பாத்து ஷிஃப்ட் பண்ணனும்.”

“அதுக்கென்னண்ணே, வாடக வூடு பாக்கவும், ஷிஃப்ட் பண்ணவும் ஒங்களுக்கு ஒத்தாசையா இருக்கேன். அதுவும் போக, பெரியம்மாவயும் பெரிய வாப்பாவயும் பாத்துக்கறதுக்கு ஒங்களுக்கு ஒரு ஆள் தேவப்படுந்தானே? அவங்கள நா பாத்துக்கிருதேன். கடையில குடுத்த சம்பளம் வேண்டாம். ஏதோ ஒங்களால ஏந்ததக் குடுங்க. என்னப் போக மட்டும் சொல்லிராதீங்கண்ணே.”

நாத் தழுதழுக்க அவன் வைத்த கோரிக்கை எனக்கும் ஏற்புடையதாயிருக்கவே, பஷீர் நம்ம சின்னஞ்சிறிய குடும்பத்தின் ஓர் அங்கமானான்.

நஷ்டங்களை சரிக்கட்ட முடியாமல், மார்வாடிக் கடன்களை சந்திக்க முடியாமல், பத்து வருஷ பிஸினஸ், ஒரேயடியாய் அஸ்தமித்துப் போனதில் வாழ்க்கை ஸ்தம்பித்துப் போனது. மூவாயிரம் சதுரடியில் அட்டகாசமாய் அமைந்திருந்த டிபார்ட்மென்ட் ஸ்டோருக்கு மூடுவிழா நடத்த நேர்ந்த பேரிடி, பெற்றோரையும் தாக்க, ஏற்கனவே ஆரோக்யம் குன்றியவர்களாயிருந்த அம்மாவும் வாப்பாவும் மேலும் மன உளைச்சலுக்கு உள்ளாகிப் படுக்கையில் விழுந்து விட்டார்கள்.

அவர்களைத் தன்னந்தனியாய் நான் கவனித்துக் கொள்வது சிரமமான காரியம். பஷீர் வீட்டோடு இருக்க முன் வந்தது ஓர் அனுகூலம் தான். வீட்டை விற்றுப் பெரும் பெரும் கடன்களையெல்லாம் அடைத்த தோடு கஜானா காலி. மினி பங்களா மாதிரியான தனி வீட்டிலி ருந்து, ஒரு டபுள் பெட்ரூம் ஃப்ளாட்டுக்குக் குடிபெயர்ந்தாச்சு.

இந்த அபார்ட்மென்ட்டின் மொட்டை மாடியில் ஒவ்வொரு ஃப்ளாட்டுக்கும் தன்னந்தனியாய் ஓவர்ஹெட் டாங்க் உண்டு. ஆனால் தண்ணீர்தான் கிடையாது. ரெண்டு நாளைக்கொருதரம் வருகை தருகிற கார்ப்பரேஷன் டாங்க்கரில் தண்ணீர் பிடித்து பாத்ரூம்களை நிரப்ப வேண்டும்.

டாங்க்கர் அதிகாலையில் வரும், மத்யான வெயிலில் வரும், நடுச்சாமத்தில் கூட வரும். எப்போது வந்தாலும், நானும் பஷீரும் போர்க்கால வேகத்தில் இயங்கி, ரெண்டு பாத்ரூம்களையும் நிரப்பிவிட்டு, இருபத்தி மூணு மாடிப்படிகள் ஏறி மொட்டை மாடிக்குப் போய் ஓவர்ஹெட் டாங்க்கையும் வழிய வழிய நிரப்பி விடுவோம்.

உடம்புக்கு முடியாமலிருந்தாலும், அஞ்சு நேரம் மசூதிக்குப் போய்த் தொழுகையில் கலந்து கொள்ள வேண்டுமென்கிற ஆன்மீகப் பிடிவாதம் வாப்பாவுக்கு. பஷீர்தான் அவரை ஸ்கூட்டரில் கூட்டிக் கொண்டு போய் வருவான். சுபுஹ் தொழுகைக்கு அதிகாலை அஞ்சு மணிக்கு அவனை எழுப்பி விடுவதுதான் சிரமமான காரியம்.

கடைகளுக்குப் போய் வருவதற்கு, கரன்ட் பில், டெலிஃபோன் பில் கட்டுவதற்கு சமையல்கார அம்மாவுக்கு ஒத்தாசை செய்வதற்கு என்று மட்டுமல்லாமல், பாத்ரூம் கழுவி விடுவதற்குக் கூட பஷீர்தான் என்று ஆகிப் போனது. ரெண்டாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு அவனுடைய உழைப்பு கொஞ்சம் தாராள மயம்தான்.

“பெரியம்மாவுக்கு இன்ஸுலின் இஞ்ஜக்ஷன் போடறதுக்கு நர்ஸ் எதுக்குண்ணே அநாவசியமா, இன்ஸுலின் நானே போடறேன். நர்ஸ நிப்பாட்டிரலாமே” என்றான்.

“நீ எப்படிப்பா இஞ்ஜக்ஷன் போடுவ?” என்றதற்கு, “நர்ஸட்ட கேட்டுப் படிச்சிக்கிட்டேன். அண்ணே, நர்ஸ்க்கு முன்னால நானே ரெண்டு வாட்டி இஞ்ஜக்ஷன் போட்டும் இருக்கேன். ரொம்ப ஈஸி” என்று புன்னகைத்தான்.

ஈஸிதான். நர்ஸை நிறுத்தி விட்டு அம்மாவுக்கு நானே டெய்லி இன்ஸுலின் போடலாம் என்ற நினைத்தவன்தான் நான். ஆனால் அம்மாவின் கையில் ஊசி குத்த எனக்குக் கை வராது என்கிற சந்தேகம் இருந்தது.

இப்போது நர்ஸை நிறுத்தியாச்சு. இதிலொரு ஆயிரம் ரூபாய் மிச்சம். ரொம்பத் தாங்ஸ்ப்பா பஷீர்.

மிச்சம் பிடித்துக் கோட்டையெதுவும் கட்டுகிறதாயில்லை. கடையைக் காலி பண்ணின பிறகு, வாப்பாவுடைய பனிரெண்டாயிரத்துச் சொச்சம் பென்ஷனில்தான் ஜீவனம் நடந்து கொண்டிருக்கிறது.

ஒண்ணாந் தேதி ஒண்ணாந் தேதி, பாங்க்குக்குப் போய், பென்ஷன் பணத்தைத் துடைத்து எடுத்துக் கொண்டு வருவது பஷீரின் இன்னொரு முக்கியமான வேலை.

“நம்ம ஃப்ளாட்டுக்கு எதுத்த பலசரக்குக் கடையில அந்த ஓனர்ட்ட கேட்டு நம்ம இன்ஸுலின் மருந்த ஃப்ரிஜ்ல வச்சிருக்கோம்ல அண்ணே?”

“ஆமா அதுக்கென்ன?”

“நேத்து அந்த ஓனர் ஒரு மாதிரிப் பேசிப்புட்டார் அண்ணே. அவரோட ஃப்ரிஜ்ஜ மட்டும் யூஸ் பண்ணிக்கிறோமாம். அவர்ட்ட சரக்கு வாங்கறதில்லயாம்.”

“அப்படி என்னப்பா நம்ம வீட்டுக்கு சரக்கு வாங்கறோம். பரவாயில்ல, நம்மளால அவருக்குக் கஷ்டம் வேணாம். இன்ஸுலின் மருந்த எடுத்துட்டு வந்துரு. இப்ப வின்ட்டர் தான், மருந்து ஒண்ணும் ஸ்ப்பாய்ல் ஆயிராது.”

வாப்பா அம்மாவுடைய மருந்துச் செலவுக்கென்று அக்கா தங்கச்சிகள் அவ்வப்போது பணம் அனுப்புவார்கள். தொட்டுக்கோ தொடச்சிக்கோ என்று வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.

“எங்கேயாவது ஒரு வேலக்கி ட்ரை பண்ணலாம்ல மகனே” என்று ஒரு யோசனையை வைத்துப் பார்த்தார் வாப்பா.

“நா வேணா என்னோட பழைய ஃப்ரண்ஸ் யார்ட்டயாவது ஃபோன் பண்ணிப் பேசிப் பாக்கட்டுமா?”

ம்ஹும். இருபத்தஞ்சு சிப்பந்திகளுக்கு சம்பளம் கொடுத்து, தினசரி அம்பதாயிரம் ரூபாய் டர்ண் ஓவர் பண்ணிக் கொண்டிருந்த ஏஸி டிபார்ட்மென்ட் ஸ்டோர் ஒன்றின் மாஜி முதலாளி, யாரோ ஒரு சாமான்யனிடம் சம்பளத்துக்கு வேலைக்குப் போவதா? ஹ.

அந்த ஹ வுக்கும் ஒரு சோதனை வந்தது.

மங்களூரிலிருந்து வந்திருந்த டாக்டர் மச்சான் என்னுடைய மனவுறுதியை அசைத்துப் பார்க்க முற்பட்டார்.

“பள்ளி வாசலுக்கு எதுத்தாப்ல ஒரு பெரீய்ய டிபார்ட்மென்ட் ஸ்டோர் இருக்கே?”

“ஆமா, இருக்கு.”

“அதோட ஓனர்தானே பள்ளிவாசல் கமிட்டிக்கி செக்ரட்டரியாம்?”

“இருக்கலாம்.”

“பள்ளி வாசல்ல வச்சி அவர்ட்ட பேசிப் பாத்தேன். ஒங்கக் கடையப் பத்தி அவருக்குத் தெரிஞ்சிருக்கே?”

தெரிஞ்சிருக்காதா பின்னே? நம்ம கடைக்குப் போட்டிக் கடை என்று சில மாதங்களுக்கு முன்பு வரை இறுமாந்து நான் விரோதம் கொண்டிருந்த கடையின் உரிமையாளரல்லவா!

“நீ இப்ப சும்மாதான் இருக்கன்னு நைஸா அவர் காதுல போட்டு வச்சேன். அந்த மனுஷன் ஒண்ணும் சொல்லல. அப்பறம் நானே கேட்டேன், தம்பிய ஒங்கள வந்து பாக்கச் சொல்லவான்னு. சரி வரச் சொல்லுங்கன்னார். அவருக்கும் ஒன்னப்போல ஒரு எக்ஸ்ப்பீரியன்ஸ்ட் ஆள் தேவப்படுவான். நாளக்யே போய் அவரப்பாரு. மாசம் பத்தோ பதினஞ்சோ தருவார்ல்ல?”

போனேன். ஸ்கூட்டரையெடுத்துக் கொண்டு போனேன்.

(மீதி அடுத்த இதழில்)

About The Author