பரதேசி – இசை விமர்சனம்

பாலாவின் படைப்பு! அதுவும், அவரது சொந்தத் தயாரிப்பில். அதனால் இதன் உருவாக்கத்தில் எந்தச் சமரசமும் இல்லாமல் ஒரு கலைப் படைப்பை எடுத்திருப்பார் என்று நம்பலாம். இசைக்கு ஜி.வி.பிரகாஷைத் தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளார்.

மொத்தம் ஐந்து பாடல்கள். மற்ற படங்களைப் போல் இல்லாமல், அனைத்துப் பாடல்களுமே ஒரே விஷயத்தைச் சொல்வதற்காக எழுதப்பட்டுள்ளது புதுமை. அனைத்துப் பாடல்களையும் முதலில் ஒளி ஓவியமாக எடுத்து, இசையும் அமைத்த பின்பே கவிப்பேரரசுவிடம் திரையிட்டுக் காண்பித்து வரிகள் வாங்கி இருக்கிறார்கள்.

செங்காடே

இந்தப் பாடல், வயிற்றுப் பிழைப்பிற்காகப் புலம்பெயரும் மக்களின் குரலாக ஒலிக்கிறது. மது பாலகிருஷ்ணன் பாடியிருக்கிறார். வரிகளில் அவ்வளவு கனம்.

"விளையாத காட்டை விட்டு
வெள்ளந்தியா வெகுளிசனம் வெளியேறுதே!" – பாடலிலிருந்து ஒரு துளி.

ஓர் மிருகம்

அடிமைகளாக்கப்பட்ட மக்களின் மனக்குரலாக ஒலிக்கும் இந்தப் பாடலைப் பாடியுள்ளனர் வி.வி.பிரசன்னா மற்றும் பிரகதி. இருவரும் பாடலை உணர்ந்து, சோகத்தின் வலியுடன் பாடியிருக்கிறார்கள். இசையும் தன் வேலையைச் சரியாகச் செய்துள்ளது.

"கண்ணீர்தான் ஏழையின் தாய் மொழி" – அசர வைக்கும் வரிகளில் ஒன்று!

செந்நீர்தானா

கங்கை அமரன் – ப்ரியா ஹிமேஷ் குரலில், கொத்தடிமைகள் வேலையில் படும் இன்னல்களைத் துயர காவியமாகச் சொல்லி இருக்கிறார் கவிப்பேரரசு.

"ஊசி மழையே! எங்கள் உடலோடு உயிர் சூடு அத்துப்போச்சே!" – காவியத்திலிருந்து ஒரு சொட்டு!

தன்னைத்தானே

இது, தங்கள் துயரங்களைக் களைய ஒருவன் கிடைத்து விட்டான் என்கிற நம்பிக்கையில் நாயகனைக் கிறிஸ்துவோடு ஒப்பிட்டுப் பாடும் பாடல்! கானா பாலாவின் குரல், பாடலுக்குக் கச்சிதப் பொருத்தம்!

அவத்த பையா!

மொத்த ஆல்பத்தில் இது மட்டுமே மகிழ்ச்சி சொல்லும் பாடல். இசையிலும் மற்றதிலிருந்து மாறுபட்டு ஒலிக்கிறது. இடையில் வரும் வீணையின் இசை அருமை! யாசின் மற்றும் வந்தனா பாடியிருக்கிறார்கள். மற்றவற்றில் சோகம் சொன்ன கவிஞர், இதில் கிராமத்துக் காதல் சொல்கிறார்.

"அவத்த பையா! செவத்த பையா!
அழிச்சாட்டியம் ஏனடா?" என யதார்த்தமாக ஆரம்பிக்கிறது.

பாலாவின் படைப்பிற்கு வைரமுத்துவின் வரிகள் மேலும் வலி சேர்த்திருக்கின்றன. அதுவே வலுச் சேர்த்தும் இருக்கிறது! இசையும் அதற்குச் சரியாக உதவியிருக்கிறது.

‘பரதேசி’ பல தேசம் சுற்றி வருவான்!

About The Author