அனாடமிக் தெரபி (17)-நீரிழிவு நோய்

சர்க்கரை நோய் எனும் நீரிழிவு நோய்

சர்க்கரை நோய் பல பேருக்கு இருக்கிறது. சிலருக்கு இல்லை. அதற்காக, சர்க்கரை நோயில்லாதவர்கள் இதைப் படிக்க வேண்டாமென முடிவுக்கு வந்து விடாதீர்கள்! இப்பொழுது உங்களுக்குச் சர்க்கரை நோய் இல்லை. எப்படியும், எங்கேயாவது ‘இலவசச் சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம்’ ஒன்றைப் பார்க்க வாய்ப்புள்ளது. நீங்கள் அதில் சோதனை செய்து பார்க்கும் அன்று முதல் நீங்கள் சர்க்கரை நோயாளியாக்கப்படுவீர்கள். எனவே, சர்க்கரை நோய் உள்ளவர்களோ, இல்லாதவர்களோ யாராக இருந்தாலும் தயவு செய்து இதை முழுவதுமாகப் படியுங்கள்!

நாம் சாப்பிடுகிற உணவில் மாவுச் சத்து, புரதச் சத்து, நார்ச் சத்து, உயிர்ச் சத்து, தாதுப் பொருட்கள் போன்றவை உள்ளன. இவற்றுள் மாவுச் சத்து (கார்போஹைட்ரேட்) சர்க்கரையாக மாறுகிறது.

நம் உடம்பிலுள்ள செல்கள் இரத்தத்திலுள்ள சத்துப் பொருட்களைத் தன் தேவைக்காக எடுத்துக் கொண்டு உடலைச் செயல்பட வைக்கின்றன. ஒரு செல் கால்சியம், இரும்பு, சோடியம், மக்னீசியம் போன்ற எல்லாப் பொருட்களையும் சுலபமாக உள்ளே எடுத்துக் கொள்ளும். ஆனால், சர்க்கரையை மட்டும் நேரடியாக எடுத்துக் கொள்ளாது. செல்கள் சாக்கரையை எடுத்துக் கொள்வதற்கு முன்பாக அது நல்ல சர்க்கரையா, கெட்ட சர்க்கரையா என்று ஆராய்ச்சி செய்யும். உணவிலுள்ள மாவுச் சத்து வாயிலே, வயிற்றிலே, சிறுகுடலிலே ஒழுங்காக ஜீரணம் ஆனால் கிடைப்பது நல்ல சர்க்கரை. ஒழுங்காக ஜீரணமாகாமல் அரைகுறையாக ஜீரணமாகி வரும் சர்க்கரை கெட்ட சர்க்கரை. நல்ல சர்க்கரையென்பது வீரியம் அதிகமுள்ள சர்க்கரை. கெட்ட சர்க்கரையென்பது வீரியம் குறைந்த சர்க்கரையென்றும் எடுத்துக் கொள்ளலாம்.

செல் சர்க்கரையிடம் நீ நல்லவனா, கெட்டவனா என்று கேட்கும். சர்க்கரையோ, நாயகன் படத்தில் வரும் கமல்ஹாசனைப் போல, "தெரியலையேப்பா!" என்று கூறி விடும். செல்களுக்கு நல்ல சர்க்கரை, கெட்ட சர்க்கரை எனப் பிரித்துப் பார்க்கும் அறிவு கிடையாது. எனவே, செல்கள் சர்க்கரையிடம், "நமது உடலில் கணையம் (Pancreas) என்ற உறுப்பு இருக்கிறது. அவரிடம் செல்! நீ நல்ல சர்க்கரையாக இருந்தால் அவர் உனக்கு இன்சுலின் (கணைய நீர்) கொடுப்பார்" என்று கூறி விடும். இரத்தத்திலுள்ள சர்க்கரை நேரடியாக எந்தச் செல்லுக்குள்ளேயும் போக முடியாது.

கணையம் இரத்தத்திலுள்ள ஒவ்வொரு சர்க்கரையாக எடுத்து ஆராய்ச்சி செய்யும். நல்ல சர்க்கரையாக இருந்தால் அதற்கு இன்சுலின் என்கிற முத்திரை கொடுக்கும். கெட்ட சர்க்கரையாக இருந்தால் கொடுக்காது. ஆக, கணையம் சர்க்கரையின் தரத்தைச் சோதனை செய்யும் ஒரு தரக் கட்டுப்பாட்டு அலுவலர். எந்தச் சர்க்கரை ஒழுங்காக ஜீரணமாகிறதோ அந்தச் சர்க்கரைக்கு மட்டும்தான் இன்சுலின் என்கிற முத்திரை கிடைக்கிறது. செல்கள் இரத்தத்திலிருக்கும் சர்க்கரையை எடுத்துப் பார்க்கும். அந்தச் சர்க்கரையில் இன்சுலின் என்கிற முத்திரை இருந்தால் மட்டுமே நல்ல சர்க்கரையென்று முடிவு செய்து உள்ளே எடுக்கும். இதனால், தரம் குறைந்த சர்க்கரை செல்லுக்குள் செல்லமுடியாது. இப்படி, உடலிலுள்ள செல்கள் அனைத்தையும் நோயிலிருந்து காப்பாற்ற, ஆரோக்கியமாக வைத்திருக்க, கணையம் பேருதவியாக இருக்கிறது.

"என்ன இது புதுக் குழப்பமாக இருக்கிறது! நான் பத்து வருடமாகச் சர்க்கரை நோயாளியாக இருக்கிறேன். பெரிய, பெரிய மருத்துவரிடம் சென்றிருக்கிறேன். பெரிய, பெரிய மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறேன். இது வரை யாரும் நல்ல சர்க்கரை, கெட்ட சர்க்கரையென்று சொல்லவே இல்லையே? நீங்கள் என்ன புதிதாக உளறுகிறீர்கள்" என்று சிலருக்குச் சந்தேகம் ஏற்பட வாய்ப்புள்ளது.

உண்மையில், இதுவரை நல்ல சர்க்கரை, கெட்ட சர்க்கரையைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளாமல் இருப்பதனால்தான் 10 ஆண்டுகளாக உங்கள் நோய் குணமாகாமல் இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக மருந்து மாத்திரைகள் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். இந்த நல்ல சர்க்கரை, கெட்ட சர்க்கரை என்ற வேறுபாட்டை எப்பொழுது தெரிந்து கொள்கிறீர்களோ, அந்த நிமிடம் முதல் உங்கள் சர்க்கரை நோய் குணப்படுத்தப்படும்.

அது எப்படி?  அடுத்த வாரம் பார்க்கலாம்!

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

–அடுத்த அமர்வில் சந்திப்போம்

About The Author