அனாடமிக் தெரபி (25)

தைராய்டு தொடர்பான நோய்களைக் குணப்படுத்துவது எப்படி?
நாம் சாப்பிடும் உணவுகளில் கால்சியம் இருக்கிறது. உடம்பிற்குக் கால்சியம் வேண்டுமென்றால் நிறையப் பால் சாப்பிட வேண்டும் என்று பொதுவாக அனைவரும் கூறுவார்கள். பாலில் மட்டும்தான் கால்சியம் இருக்கிறது என்பது ஒரு தவறான கருத்தாகும். கோழிகள் என்றாவது பால் சாப்பிடுகிறதா? கோழி முட்டையில் கால்சியம் இருக்கிறது அல்லவா? முட்டையின் ஓடு கூடக் கால்சியம்தான். கோழிக்குக் கால்சியம் எப்படி வந்தது? சற்று யோசியுங்கள்!
மாடு, இலை, தழை, புல், வைக்கோல், புண்ணாக்கு போன்ற பொருட்களை மட்டுமே சாப்பிட்டுப் பால் கொடுக்கிறது. இந்தப் பாலில் கால்சியம் உள்ளது. எனவே, கால்சியம் என்பது பாலில் மட்டுமல்ல அனைத்து உணவுகளிலும் உள்ளது. குறிப்பாக, பச்சைத் தாவரங்களில் அதிகமாக உள்ளது. எனவே, உடலில் கால்சியம் வேண்டும் என்றால் நிறையக் கீரை வகைகள் சாப்பிடுவதன் மூலமாகக் கால்சியத்தை அதிகரிக்கலாம்.
நாம் சாப்பிடுகிற அனைத்து உணவுகளிலும், தானியங்களிலும் கால்சியம் உள்ளது. நாம் சாப்பிடுகிற உணவில் உள்ள கால்சியம் நன்றாக ஜீரணம் அடைந்தால் அதற்கு நல்ல கால்சியம் என்று பெயர். சரியாக ஜீரணமாகவில்லையென்றால் அது கெட்ட கால்சியம்.
இங்கே நல்ல, கெட்ட என்கிற வார்த்தைகள் நாம் புரிந்துகொள்வதற்காக. உண்மையில், வீரியம் என்பதே சரியான வார்த்தையாகும். ஒரு மாத்திரை 50 mg என்றும் மற்றொரு மாத்திரை 150 mg என்றும் டோஸ் அளவு கூறுகிறார்களே, அதே போல ஒரு பொருளின் வீரியத்தை வைத்து நல்லது கெட்டது என்று பிரிக்கலாம். நாம் சாப்பிடும் உணவைச் சரியான முறையில் ஜீரணம் செய்வதன் மூலமாகக் கிடைக்கும் கால்சியம் நல்ல கால்சியம். ஜீரணத்தில் குறைபாடு ஏற்படும்பொழுது அரை, குறை ஜீரணத்தால் உருவாகும் கால்சியம் தரம் குறைந்த கால்சியம் அல்லது கெட்ட கால்சியம்.
இரத்தத்தில் கால்சியம் ஒரு குறிப்பிட்ட அளவு இருக்க வேண்டும். அந்த அளவுக்கு மேலே செல்லும்பொழுது தைராய்டு சுரப்பி அளவுக்கு அதிகமான கால்சியத்தை எடுத்து எலும்பு என்கிற சேமிப்புக் கிடங்கில் வைத்து விடும்.
இரத்தத்தில் கால்சியத்தின் தரம் குறைந்து இருந்தால், அதாவது ஒழுங்காக ஜீரணமாகாத, கெட்ட கால்சியம் இருக்கும்பொழுது அதைத் தைராய்டு எடுத்துச் சென்று எலும்பில் வைப்பதால் எலும்புகளுக்குச் சில பாதிப்புகள் ஏற்படுகின்றன. கெட்ட கால்சியத்தால் உருவாக்கப்படும் எலும்புகள் அழுகிப் போகலாம், குண்டாகலாம், ஒல்லியாகலாம், உடைந்து போகலாம். இப்படி எலும்புகளுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. எலும்பு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் தைராய்டு சுரப்பிதான் காரணம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால், சுரப்பி காரணமல்ல; சுரப்பி எடுத்துச் செல்லும் பொருள் இரத்தத்தில் கெட்டுப் போய் இருப்பதுதான் காரணம்.
இரத்தத்தில் கால்சியத்தின் அளவு குறையும்பொழுது பாரா தைராய்டு என்ற சுரப்பி எலும்பில் உள்ள கால்சியத்தை எடுத்து வந்து இரத்தத்தில் கொட்டுகிறது. இப்படி நாம் சாப்பிடும் சாப்பாட்டில் உள்ள கால்சியத்தை உறிஞ்சி எடுக்கும் தன்மை குறையும்பொழுது இரத்தத்தில் கால்சியத்தின் அளவு குறைகிறது. அப்பொழுது எலும்புகளில் இருக்கும் கால்சியம் இரத்தத்திற்கு வரும்பொழுது எலும்பில் நோய் ஏற்படுகிறது.
எலும்பு உருக்கி நோய், எலும்பு உடைதல் போன்ற நோய்கள் இதனால் ஏற்படுகின்றன.
ஆக, எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் தைராய்டு சுரப்பிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அந்தச் சுரப்பி எடுத்துச் செல்லும் கால்சியத்தின் தரம் குறைவதால் மட்டுமே இப்படி நடக்கிறது.
நமது உடலிலுள்ள சதைகள் விரிந்து, சுருங்கும் தன்மையுடையன. இப்படி ஒரு தசையை விரிய வைப்பதும், சுருங்க வைப்பதும் தைராய்டு சுரப்பியின் கையிலுள்ளது. தசைகள் விரிவதற்குக் கால்சியமும், சில பொருட்களும் தேவைப்படுகின்றன. அதைக் கொடுப்பது தைராய்டு சுரப்பி. நமது இரத்தத்தில் கால்சியமும், சில பொருள்களும் கெட்டுப் போவதன் காரணமாகத் தைராய்டு சுரப்பியால் தசைகளை விரிக்க முடியாமல் போகிறது. இந்தச் சூழ்நிலையில், நமது தசைகள் சுருங்கும்; ஆனால் விரியாது. இப்படி விரிய முடியாமல் போகும்பொழுது நாம் ஒல்லியாகிறோம். தசைகள் இறுக்கமடைந்து சுருங்குகின்றன.
இதே போல், ஒரு தசை சுருங்குவதற்கு சோடியமும், சில பொருட்களும் தேவை. இரத்தத்தில் இந்தப் பொருட்களின் தரம் குறையும்பொழுது தைராய்டு சுரப்பியால் தசைகளைச் சுருக்க முடிவதில்லை. இந்த நிலையில், தசைகள் விரிவடையும்; ஆனால் சுருங்காது. அதனால் உடல் பருமன் அடைகிறது.
ஒரு சில பேர் திடீரெனக் குண்டாவதற்கும், ஒல்லியாவதற்கும் தைராய்டு சுரப்பிதான் காரணம். தைராய்டு நோய் வந்து விட்டது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். அவர்களுக்குத் தைராய்டு நோய் வரவில்லை. தைராய்டு என்ற சுரப்பி எந்த எந்தப் பொருட்களை இரத்தத்திலிருந்து எடுத்து ஒரு சில வேலைகளைச் செய்கிறதோ அந்தப் பொருட்களின் தரம் குறைவதால் ஏற்படும் நோய்கள்தான் இவை.
எனவே, தைராய்டு நோய் என்பது தைராய்டு என்ற சுரப்பி சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. இரத்தத்தில் சில பொருட்கள் கெட்டுப் போவதே இதற்கு அடிப்படைக் காரணம். எனவே, தைராய்டு நோய்க்கு தைராய்டு சுரப்பியை ஸ்கேன் செய்து, டெஸ்டு செய்து அதில் அறுவை சிகிச்சை செய்து, மருந்து மாத்திரை சாப்பிடுவதால் எந்தப் பயனும் கிடையாது. நோய் அதிகரித்து கொண்டுதான் போகும். இரத்தத்தில் உள்ள பொருட்களின் தரத்தை உயர்த்துவதன் மூலமாக மட்டுமே தைராய்டு நோயைக் குணப்படுத்த முடியும்.
இரத்தத்திலுள்ள கால்சியம், சோடியம் மற்றும் சில பொருட்களின் தரத்தை ஜீரண சக்தியை அதிகரிப்பதன் மூலமாகச் சரி செய்வதால் தைராய்டு நோயை மருந்து, மாத்திரை, மருத்துவர், அறுவை சிகிச்சை ஆகியன இல்லாமல் கண்டிப்பாக முழுமையாகக் குணப்படுத்த முடியும்.
தைராய்டு நோய்க்குப் பால் சாப்பிடக்கூடாது என்று கூறுவார்கள். ஆனால், தயவு செய்து பால் சாப்பிடுங்கள்! பால் மிகச் சிறந்த உணவு! ஆனால், இப்பொழுது கடையில் விற்கும் பாக்கெட் பால் சரியான பால் கிடையாது. மாட்டிலிருந்து நேரடியாகக் கறந்து கொடுக்கும் பாலை நீங்கள் தாராளமாக நிறையச் சாப்பிடலாம்.
பால் சாப்பிடுவதால் மனித உடம்பிற்கு எந்த நோயும் வராது. வாழ்வோம் ஆரோக்கியமாக!

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

–அடுத்த அமர்வில் சந்திப்போம்…

About The Author