அனாடமிக் தெரபி (47)

4. உணவைப் பற்களால் நன்றாகக் கூழ் போல அரைத்து உண்ண வேண்டும்!

சாப்பிடும்பொழுது உணவைப் பற்களால் நன்கு அரைத்துச் சாப்பிட வேண்டும். சரியாக அரைக்காமல், நொறுக்காமல் யார் யாரெல்லாம் உணவைக் குண்டு குண்டாக அப்படியே விழுங்குகிறார்களோ, அவர்களுடைய வயிறு அவர்களைப் பார்த்து, "அரைப்பதற்கு என்னிடம் பல்லா இருக்கிறது? அல்லது, மிக்ஸி போல் பிளேடுகளா உள்ளன? அல்லது கிரைண்டர் போல் கல் இருக்கிறதா?" என்று கேட்கும்.

சாப்பிடும்பொழுது பற்களால் நன்றாக அரைத்து மென்று பிறகு விழுங்க வேண்டும். நாம் பொதுவாகப் பற்களுக்கு வேலை கொடுப்பதே கிடையாது. குண்டு குண்டாக விழுங்கி விடுகிறோம். மொத்தம் 40 முறை கையால் எடுத்துச் சாப்பிடுவோம் என்று வைத்துக் கொள்வோம். முதல் நான்கு முறை சாப்பிட்ட உணவு பற்களுக்கு வேலை கொடுக்காமல் குண்டு குண்டாக வயிற்றில் சென்றடைவதால் வயிற்றில் நாற்பது கைச் சாப்பாட்டை ஜீரணம் செய்வதற்காக வைத்துள்ள அமிலம் முதல் நான்கு வாய் உணவிற்கே தீர்ந்து விடுகிறது. ஏனென்றால், பற்கள் செய்ய வேண்டிய வேலையை அமிலம் செய்ய வேண்டியுள்ளது. எனவே, நாம் முதலில் சாப்பிடும் நான்கு வாய் உணவு மட்டுமே நல்ல இரத்தமாக மாறுகிறது. அதன் பிறகு சாப்பிடும் 36 வாய்ச் சாப்பாடு வயிற்றில் அமிலம் இல்லாததால் கழிவுப் பொருளாக மாறுகிறது. மேலும், தொப்பை வருவதற்கும் உடல் பருமன் அடைவதற்கும் ஒரே காரணம் பற்களுக்கு வேலை கொடுக்காததுதான்.

வயிற்றில் அமிலம் இருக்கும்பொழுது சாப்பிடும் உணவு ஜீரணமாகிறது. தொப்பையாக மாறுவது கிடையாது. வயிற்றில் அமிலம் தீர்ந்த பிறகு சாப்பிடும் உணவு ஜீரணமும் ஆவதில்லை. தொப்பையாகவும் மாறுகிறது. உடல் பருமனுக்கும் இதுவே காரணம். எனவே, பற்களுக்குத் தயவு செய்து வேலை கொடுங்கள்!

உணவைப் பற்கள் எவ்வளவு நேரம் மென்று கூழ் போல அரைத்த பிறகு வயிற்றுக்குள் அனுப்புகிறதோ அந்த அளவுக்கு வயிற்றிலுள்ள அமிலத்துக்கு வேலை குறைவாகும். குறைந்த அமிலத்தின் மூலமாக உங்கள் உணவை ஜீரணம் செய்து விட்டு மீதமுள்ள அமிலம் அடுத்து வரும் உணவுக்குத் தயாராக இருக்கும். எனவே, நாம் சாப்பிடுகிற குழம்பு, ரசம், மோர், பாயசம், பீடா ஆகிய அனைத்து உணவும் ஜீரணமாக வேண்டும் என்றால் ஆரம்பத்திலிருந்தே ஒவ்வொரு வாய் உணவையும் நன்றாக மென்று கூழ் போல் அரைத்து விழுங்க வேண்டும்.

நம்மில் பலர் தொப்பை, உடல் பருமனுக்காக நடைப்பயிற்சி செல்வது வழக்கம். 4 கி.மீ வாக்கிங் சென்று வந்து பின்னர் நான்கு முட்டை பப்ஸ் சாப்பிட்டால் எப்படி உடல் இளைக்கும்? சிலர் புதிய டெக்னாலஜி வைபரேட்டர்களை வயிற்றில் மாற்றிக் கொண்டு அதிர்வுகள் மூலமாக உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்கிறார்கள். பசி இல்லாமல் எதற்காகக் கண்டதைச் சாப்பிட வேண்டும்? பின்னர் ஏன் வைபரேட்டரில் ஆட வேண்டும்? பசி எடுத்துச் சாப்பிட்டால் தொப்பையும் இருக்காது. உடல் பருமனும் இருக்காது. பிறகு ஏன் நமக்கு இந்த வீர விளையாட்டுகள்? எனவே, உடல் பருமனைக் குறைப்பதற்கும் தொப்பையைக் குறைப்பதற்கும் சுலபமான வழி பற்களுக்கு வேலை கொடுப்பதுதான்.

உங்கள் எடையை இன்று பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். நாம் கூறிய முறைப்படி உணவைச் சாப்பிடுங்கள். கண்டிப்பாக ஒரு மாதத்தில் உங்களது எடை பல கிலோக்கள் குறையும். நீங்கள் வாக்கிங் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வைபரேட்டர் மெசின் பயன்படுத்தத் தேவையில்லை. ஒரு வேளைக்கு ஐந்து சப்பாத்தி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நபராக நீங்கள் இருந்தால் இப்பொழுது ஏழு சப்பாத்தி சாப்பிட்டும் உங்கள் உடல் எடையைக் குறைக்கலாம். அதிகமாகச் சாப்பிடுவதால் உடல் பருமனாகிறது என்பது தவறான கருத்து. குறைவாகச் சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்பதும் தவறான கருத்து. பற்களுக்கு அதிக வேலை கொடுப்பதன் மூலமாக அதிகமாகச் சாப்பிட்டும் எடையைக் குறைக்கலாம்.

நமது சிகிச்சையில், பற்களுக்கு நன்றாக வேலை கொடுத்துக் கூழ் போல அரைத்து உண்ணுவதன் மூலமாக மனதிற்கு பிடித்தமான அனைத்து உணவுகளையும் தாராளமாகச் சாப்பிட்டே உடல் எடையைக் குறைக்க முடியும்.

நமது சிகிச்சையில் முதலில் தொப்பை குறையும், உடல் எடை குறையும். பிறகுதான் நோய்கள் குணமாகும். எனவே, நமது சிகிச்சையை மேற்கொள்ளும்பொழுது உடல் எடைக் குறைவு ஏற்பட்டால் தயவு செய்து பயப்படாதீர்கள்! உங்கள் எடை எவ்வளவு குறைகிறதோ அந்த அளவிற்கு உங்கள் உடம்பில் கழிவு இருக்கிறது என்று பொருள்.

நமது சிகிச்சையை மேற்கொள்ளும்பொழுது யாருடைய உடல் எடை குறையவே இல்லையோ அவர்கள் கழிவு இல்லாத மனிதராக இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

உங்களது எடை சிறிது சிறிதாகக் குறையும். பின்னர், ஒரு குறிப்பிட்ட நாளில் இருந்து சில மாதங்களுக்கு ஒரே எடை இருக்கும். அப்பொழுது புரிந்து கொள்ளுங்கள். அதுதான் உங்கள் உண்மையான ஆரோக்கியமான உடலின் எடை. பிறகு, மீண்டும் உங்களின் எடை கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்து கொண்டே வரும். இப்பொழுது அதிகரிக்கும் இந்த எடை ஆரோக்கியமான எலும்புகளும், நரம்புகளும், தசைகளும் சேர்ந்து உருவாக்கிய ஆரோக்கியமான உடம்பின் எடை. இப்படி அதிகரிக்கும் உடல் எடை இனி குறையாது!

எனவே, தயவு செய்து ஒரு கை உணவை வாயில் வைத்தால் குறைந்தது பத்து அல்லது பதினைந்து முறை நன்றாக மென்று கூழ் போல் செய்து எச்சில் கலந்து விழுங்குவதன் மூலமாக வயிற்றுக்கு உதவி செய்யுங்கள். பற்களில் மெல்வது மூலமாக வயிற்றின் வேலையைக் குறைத்து விட்டால் வயிறு ஆரோக்கியமாக இருக்கும், மகிழ்ச்சியாக இருக்கும். வயிறு மகிழ்ச்சியாக இருந்தால்தான் நோய்கள் குணமாகும். நாமும் ஆரோக்கியமாக இருப்போம்.

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

–அடுத்த அமர்வில் சந்திப்போம்…

About The Author