அனாடமிக் தெரபி (57)

19. சுவைகளை ரசித்து, ருசித்துச் சாப்பிட வேண்டும்!

நாம் சாப்பிடுகிற ஒவ்வோர் உணவிலும் ஒவ்வொரு சுவை இருக்கிறது. உணவை வாயில் வைத்தவுடன் அதில் சுவை நிறைய இருப்பது தெரிகிறது. நாம் மெல்ல மெல்ல அந்தச் சுவை காணாமல் போய் விடுகிறது. அப்பொழுது நம் நாக்கில் உள்ள சுவை மொட்டுக்கள் அந்தச் சுவையை கிரகித்து சக்தியாக மாற்றுகின்றன. சுவையை ரசிக்காமல், ருசிக்காமல் விழுங்கினால் அந்தச் சுவையை வயிற்றால் ஜீரணிக்க முடியாது. ஏனென்றால், வயிற்றுக்குச் சுவையை ஜீரணம் செய்யத் தெரியாது; பொருளை மட்டுமே ஜீரணிக்கத் தெரியும்.

நாக்கால் ஜீரணிக்கப்படாத ஒரு சுவை கழிவாகத்தான் போகும். எனவே, உணவில் உள்ள சுவைகளை சக்தியாக மாற்ற வேண்டும் என்றால், அதில் உள்ள அத்தனை சுவையையும் ரசித்து, ருசித்து அது சுவையற்றுப் போகும் வரை வாயில் வைத்திருக்க வேண்டும். உணவை விழுங்குவதற்கு முன் அதில் சுவை கண்டிப்பாக இருக்கக் கூடாது. இப்படிச் சுவைத்துச் சாப்பிட்டால் சுவை மூலமாகக் கிடைக்கும் பிராண சக்தியும், பொருளினால் உருவாகும் பிராண சக்தியுமாக இரண்டு பிராண சக்திகள் நமக்குக் கிடைக்கும். எனவே, இனியாவது உணவைச் சாப்பிடும்பொழுது மென்று சுவைத்து முழுவதும் சுவையற்ற பிறகே விழுங்குவோம்!

20. எந்தெந்தச் சுவைகளை எவ்வளவு சாப்பிட வேண்டும்?

"என் உடலில் எந்தெந்த உறுப்புகள் பாதித்துள்ளன? எனக்கு எந்தச் சுவை வேண்டும், வேண்டாம்? நான் எந்தச் சுவையை எவ்வளவு சாப்பிட வேண்டும்?" என்று பலரும் கேள்வி கேட்கிறார்கள்.
உங்களுக்கு எந்தச் சுவை எவ்வளவு வேண்டும் என்பதை உலகத்தில் யாராலும் கூற முடியாது. உங்களுக்கும் தெரியாது. வேறு எப்படிக் கண்டுபிடிப்பது என்றால், முன்பே கூறியது போல் நமது உடலில் நாக்குதான் டாக்டர்; சுவைதான் மருந்து! எனவே, உங்கள் நாக்கிற்கு மட்டுமே அது தெரியும். எனவே, ஒவ்வொரு வேளையும் இனிப்பை எவ்வளவு எடுத்துக் கொள்ளலாம் என்று தயவு செய்து கேள்வி கேட்காதீர்கள்! உங்கள் நாக்கு எவ்வளவு இனிப்பைக் கேட்கிறதோ அவ்வளவு இனிப்பைச் சாப்பிட்டுக் கொள்ளலாம். அனைத்து சுவைகளுக்கும் இதே டெக்னிக்கைக் கடைப்பிடியுங்கள்.

திருமண விருந்தில் சாப்பாடு, குழம்பு, மோர், பாயசம், பொறியல்கள், கூட்டு, அப்பளம், வடை இப்படி ஒரு பதினைந்து வகைப் பொருட்கள் வைத்திருப்பார்கள். நன்றாகப் பாருங்கள்! சிலர் பொறியலை நன்கு சாப்பிட்டிருப்பார்கள். சிலரோ அதைத் தொட்டிருக்கவே மாட்டார்கள். ஒரு சிலர் குழம்பு நன்றாக ஊற்றிச் சாப்பிடுவார்கள். சிலர் தயிர் ஊற்றிச் சாப்பிடுவார்கள். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சாப்பிடுகிறார்கள். இதற்குக் காரணம் என்னவென்றால், ஒவ்வொருவருடைய வேலையும், ஒவ்வொருவருடைய உடலில் உள்ள உறுப்புகளின் நோய்களும், தேவைப்படும் சக்திகளும் வேறுபடுவதால் அவரவர்களுக்கு வேறு வேறு சுவை தேவைப்படுகிறது. எனவே, இதற்காகப் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டாம். பலவிதமான உணவுகளைப் பலவிதமான சுவையுடன் சுவைத்துச் சாப்பிட ஆரம்பியுங்கள். ஓர் உணவை வாயில் வைத்தவுடன் உங்கள் நாக்கிற்குப் பிடித்தால் சாப்பிடுங்கள். பிடிக்கவில்லையென்றால் விட்டுவிடுங்கள். உங்கள் நாக்கு எவ்வளவு சுவையைக் கேட்கிறதோ அவ்வளவு சாப்பிட்டால் நோய்கள் குணமாகி ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

21. உணவு சாப்பிடும்போது முதலில் இனிப்புச் சாப்பிட வேண்டும்!

நமது முன்னோர்கள் இலையில் முதலில் இனிப்பான பொருளைப் பரிமாறும் பழக்கத்தை வைத்திருந்தார்கள். ஏனென்றால், இனிப்பு என்ற சுவை இரைப்பையையும், மண்ணீரலையும் வேலை செய்ய வைக்கும் சக்தி உடையது. இதையும் நாம் ஏற்கெனவே பார்த்தோம். நாம் சாப்பிடுகிற உணவு முதலில் இரைப்பையில் சென்று விழுகிறது. எனவே, இரைப்பைக்கு சக்தியைக் கொடுக்கும் இனிப்பை முதலில் சாப்பிட்டால் உணவு நன்றாக ஜீரணமாகும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். சிலர் உணவைச் சாப்பிட்டு முடித்த பிறகு கடைசியாக இனிப்புச் சாப்பிடுவார்கள். அதை விடச் சிறந்தது, முதலில் இனிப்புச் சாப்பிட்டு, பிறகு சாப்பிட ஆரம்பிப்பது. எனவே, எப்பொழுது சாப்பிடும்பொழுதும் முதலில் இனிப்பில் ஆரம்பியுங்கள்.

அதற்காகச் சர்க்கரைப் பொங்கலை இரண்டு கரண்டி வைத்துக் கொண்டு, முழுவதும் சாப்பிட்டு முடித்து விட்டுப் பிறகு மற்ற பண்டங்களைச் சாப்பிடலாம் என்று நினைக்காதீர்கள்! முதலில் இனிப்பில் ஆரம்பியுங்கள். பிறகு, மற்ற எல்லா சுவைகளையும் சாப்பிட்டு விட்டு, நடுவில் தேவைப்பட்டால் மீண்டும் இனிப்பைச் சேர்த்துக் கொள்ளலாம். கடைசியாகவும் இனிப்பைச் சாப்பிடலாம். இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும் என்பது ஒரு முறை, அவ்வளவுதான். கண்டிப்பாகச் சாப்பிட வேண்டும் என்று அவசியம் இல்லை.

மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன்! பலர் இந்த எல்லா முறைகளையும் படித்துவிட்டு ஒவ்வொரு வேளையும் கஷ்டப்பட்டு இந்த முறைகளைக் கையாள வேண்டாம்! ஒரு சில நேரத்தில் சில முறைகளைக் கையாள முடியும் அல்லது முடியாது. எனவே இந்த விதிமுறைகள் பற்றிக் கவலைப்படாமல், பயப்படாமல் சாப்பிடுங்கள்! முதலில் இனிப்புச் சாப்பிடவில்லையே என்கிற எண்ணத்துடன் சாப்பிட்டால் சாப்பாடு ஒழுங்காக ஜீரணம் ஆகாது. எனவே, முடிந்த வரை முயற்சி செய்யுங்கள். முடியவில்லை என்றால் கவலைப்படாமல் தைரியமாகச் சாப்பிடுங்கள்!
வாழ்வோம் ஆரோக்கியமாக!

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

–அடுத்த அமர்வில் சந்திப்போம்…

About The Author