அனாடமிக் தெரபி (58)

22. பல் இல்லாத நபர்கள் எப்படி மென்று சாப்பிடுவது?

பல் இல்லாதவர்கள் கடினமான உணவுகளைச் சாப்பிடவே கூடாது! பல் இல்லாத பிறந்த குழந்தைக்குக் கடினமான உணவைக் கொடுக்கிறீர்களா? பால், தண்ணீர், இளநீர் போன்ற நீராகாரம் மட்டும்தானே கொடுக்கிறீர்கள்? பல்லில்லாத குழந்தைகளுக்கு ஒரு நியாயம்? பல்லில்லாத பெரியவர்களுக்கு ஒரு நியாயமா?

பல் இருக்கும் நபர்களே உணவை ஒழுங்காக மெல்லாமல் சாப்பிட்டு நோய்கள் வரும்பொழுது, பல்லே இல்லாதவர்களால் எப்படி உணவை நன்கு மெல்ல முடியும்? அந்த உணவு எப்படி ஜீரணமாகும்? எனவே, பல் இல்லாதவர்கள் நீராகாரம் மட்டுமே சாப்பிட வேண்டும். உதாரணமாக பழச்சாறு! எல்லா வகைப் பழச்சாறும் சாப்பிடலாம். இளநீர், கஞ்சி, கூழ் இப்படி நீராகாரமாக உள்ள பொருட்களை மட்டுமே பல் இல்லாதவர்கள் சாப்பிட வேண்டும். அதுவும், மெதுவாக டீ சாப்பிடுவதைப் போலச் சப்பிச் சப்பிச் சாப்பிட வேண்டுமே தவிர, கடகடவென்று விழுங்கக் கூடாது, குடிக்கக் கூடாது.

ஒரு வேளை சாப்பாடு சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் உங்கள் கைகளைக் கொண்டு நன்றாகப் பிசைந்து, பல் செய்யும் வேலையை உங்கள் கைக்குக் கொடுக்க வேண்டும். பிறகு வாயில் வைத்து, உடனே விழுங்காமல், சிறிது நேரம் அடக்க வேண்டும். பல் இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு பதினைந்து முறை மென்று அதன் பிறகு விழுங்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த உணவில் எச்சில் கலக்கும். நாக்கு சுவையை ரசிக்கும்.

மேலும் சில கடினமான பொருட்களைச் சாப்பிட வேண்டும் என்றால், சட்டியில் வைத்துப் பருப்பு மத்தால் கீரை கடைவதைப் போலக் கடைந்து சாப்பிடலாம். புரோட்டா, கொத்து புரோட்டா போன்ற மிகவும் கடினமான பொருட்களைச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருந்தால் மிக்சியில் புரோட்டாவையும் குருமாவையும் இட்டு இரண்டு நிமிடம் அரைத்துக் கூழ் போல் ஆக்கிச் சாப்பிடலாம்.

23. ஒரு குறிப்பிட்ட சுவைக்கு அடிமையானவர்கள் வெளியே வருவது எப்படி?

சிலர் ஒரு குறிப்பிட்ட சுவை மட்டும் பிடித்துப் போய், அதையே நிறையச் சாப்பிட்டுக் கொண்டு இருப்பார்கள். ஒரு சில சுவைகளுக்கு நாம் அடிமையாகி விடுகிறோம். இதற்குக் காரணம், செயற்கையான உணவுகள்!

இயற்கையான உணவில் சுவைக்கு அடிமையாக்கும் எந்தவொரு வேதிப் பொருளும் (chemical) கிடையாது. ஆனால், பாக்கெட்டில் அல்லது டப்பாவில் அடைத்து விற்கப்படும் ஆயத்த உணவுப் பொருட்களில் (readymade foods) அந்த உணவு நிறுவனங்கள் நாக்கை அடிமைப்படுத்துவதற்காகச் சில வேதிப் பொருட்களைச் சேர்க்கின்றன. பிஸ்கட், கூல்டிரிங், அஜினமோட்டோ, மிக்சர் இப்படிப்பட்ட எல்லாப் பொருட்களிலும் சுவைக்கு அடிமையாக்கும் வேதிப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. எனவே, செயற்கையான உணவுப்பொருட்களை முடிந்த வரை சாப்பிடாமல் இருங்கள்!

ஒருவேளை, அப்படிப்பட்ட உணவுகளுக்கு நீங்கள் அடிமையாய் இருந்தால், ‘நாக்குக்குப் பிடித்த சுவையைத் தாராளமாகச் சாப்பிடுங்கள்’ என்கிற நமது டெக்னிக் இந்த இடத்தில் ஒத்து வராது. இயற்கையான உணவுகளை நாக்குக்குப் பிடித்த மாதிரி தாராளமாய்ச் சாப்பிடலாம். ஆனால், இப்படிப்பட்ட செயற்கை உணவுகளைச் சாப்பிடும்போது சற்று கவனம் வைக்க வேண்டும்!
நாம் இப்படி எந்தச் சுவைக்கும் அடிமையாகாமல் இருப்பதற்கு ஒரு இரகசிய வித்தை இருக்கிறது! ஓர் உணவை வாயில் வைத்தவுடன் நாம் நன்றாக மென்று, சுவையை ரசித்து, சுவை அற்றுப் போன நிலையில் விழுங்கும்பொழுது நாம் அந்தச் சுவைக்கு அடிமையாக மாட்டோம். ஓர் உணவை வாயில் வைத்து, அரைகுறையாக மென்று, அந்தச் சுவை நாக்கில் இருக்கும்பொழுதே வயிற்றுக்குள் தள்ளி விட்டு, மீண்டும் அந்த உணவைச் சாப்பிட்டால் அந்தச் சுவையிலே இருக்கும் நாக்கு அதே சுவையைக் கேட்டுக் கொண்டேயிருக்கும்.

நீங்கள் உங்களையே சோதித்துப் பார்க்கலாம்! ஓர் உணவை வாயில் வைத்து மென்று விழுங்கிய பிறகு, வெறும் வாயை ஐந்து முறை மென்று எச்சில் கலந்து நாக்கைச் சுவையில்லாத ஒரு நிலைக்குக் கொண்டு சென்று, மீண்டும் அதே பொருளைச் சாப்பிட்டால் அந்தச் சுவை விரைவாகத் திகட்டி விடும். மீண்டும் மீண்டும் அந்தச் சுவையை நாம் சாப்பிட மாட்டோம். எனவே, ஒவ்வொரு முறை வாயில் உணவைப் போடுவதற்கு முன்பும் வாயில் உள்ள சுவையைத் தீர்த்து, வெறும் வாயைச் சப்பி விட்டுப் பிறகு சாப்பிடும்பொழுது உணவு சுவையாகவும் இருக்கும்; எந்த ஒரு சுவைக்கும் நாம் அடிமையாகவும் மாட்டோம்!

24. வீட்டில் அன்பாகச் சமைத்த உணவு நல்லது! உணவகத்தில் சாப்பிடும் உணவு கெட்டது!

உணவகங்களில் சோடா உப்பு, அஜினமோட்டோ போன்ற உடலைக் கெடுக்கும் பல பொருட்களின் துணையுடன் சமைக்கிறார்கள். எனவே, உணவகச் சாப்பாட்டைத் தவிர்த்து விடுங்கள்! வீட்டில் அன்பாக, அக்கறையோடு சமைத்த நல்ல உணவுகளைச் சாப்பிடுங்கள்! சமைப்பவர்களின் எண்ணம் என்ன என்பதை அதைச் சாப்பிடும்போது கண்டுபிடிக்க முடியும். எனவே, சமைக்கும்போது நல்ல எண்ணத்தோடு, அக்கறையோடு, அன்பாகச் சமையுங்கள். பிரம்மகுமாரிகள் மற்றவர்கள் சமைத்த உணவைச் சாப்பிட மாட்டார்கள். அவர்களே சமைத்த உணவை மட்டுமே சாப்பிடுவார்கள். எனவேதான் அவர்கள் மற்றவர்களை விட எப்போதும் சக்தியோடு இருக்கிறார்கள்.

இதுவரை கூறப்பட்டு வந்த முறைகளில் நாம் உணவைச் சாப்பிட்டால், உணவு சிறந்த முறையில் ஜீரணமாகி உடலில் உள்ள அனைத்துத் தாதுப்பொருட்களும் நல்ல வீரியத்துடன் நல்ல தரத்துடன் இரத்தத்தில் கலக்கும். எனவே, முடிந்த வரை இவற்றைக் கடைப்பிடியுங்கள்!

வாழ்வோம் ஆரோக்கியமாக!

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

–அடுத்த அமர்வில் சந்திப்போம்…

About The Author