அனாடமிக் தெரபி (66)

இரவு நேரத்தில் படுக்கையறையில் ஜன்னல்களை அடைத்து வைக்க நேர்ந்தாலும் காற்றோட்டம் பெற அருமையான வழி!
நீங்கள் வழக்கம் போல் ஜன்னல் கதவுகள் அனைத்தையும் அடைத்து வைத்தே படுத்துக் கொள்ளுங்கள். ஆனால், அறையின் ஒரு பக்கச் சுவரில், கூரையிலிருந்து அரை அடி அல்லது ஒரு அடி கீழே காற்றை வெளியேற்றும் மின்விசிறியைப் (exhaust fan) பொருத்துங்கள். அதற்கு நேர் எதிரே உள்ள சுவரில், அதே அளவுக்கு ஓர் ஓட்டையை ஏற்படுத்திக் கொசு வலை அடித்து விடுங்கள். இப்பொழுது அந்த மின்விசிறி வழியாக எவ்வளவு கெட்ட காற்று வெளியே செல்கிறதோ, அதே அளவு நல்ல காற்று எதிரில் உள்ள ஓட்டை வழியாக அறைக்குள் வரும். நல்ல காற்று எப்பொழுதும் அறையின் கீழ்ப் பகுதியிலும், கெட்ட காற்று எப்பொழுதும் அறையின் மேல் பகுதியிலும் இருக்கும். கெட்ட காற்றுக்கு அடர்த்தி குறைவு. எனவே, அது மேல் நோக்கிப் பயணம் செய்யும். எனவே, எப்பொழுதும் அறையில் தரைக்கு அருகே படுத்தால் நல்ல காற்றை சுவாசிக்க முடியும். அறையில் எவ்வளவுக்கு எவ்வளவு உயரமாக நாம் படுக்கிறோமோ அந்த அளவுக்குக் மாசுபட்ட காற்றை சுவாசிக்க வேண்டியிருக்கும்.

இப்படி காற்றை வெளியேற்ற மின்விசிறி பொருத்தி விட்டால், இரவில் ஜன்னலை நாம் திறக்க வேண்டிய அவசியம் இல்லை; கொசுவோ திருடனோ வருவதற்கு வாய்ப்பு இல்லை; நம்மை வேறு யாரும் வேடிக்கை பார்க்கவும் மாட்டார்கள். இதற்குக் குறைந்த பணம் மட்டுமே செலவாகும். ஆஸ்துமா, மூச்சிரைப்பு (wheezing) போன்ற நோய்களுக்கு ஆண்டுக்கணக்கில் மாத்திரைக்குச் செலவு செய்த தொகையை விட இது கண்டிப்பாகக் குறைவாகத்தான் இருக்கும்.

பரவாயில்லை, ஜன்னலைத் திறந்து வைத்துப் படுக்க எங்களால் முடியும் என்று கூறுபவர்கள் மின்விசிறி பொருத்திக் கொள்வதற்குப் பதிலாகக் கொசு வலை கட்டிப் படுக்கலாம்.

காற்றைப் பொறுத்த வரை இரண்டே இரண்டு விஷயங்கள் மட்டும் ஞாபகம் வைத்து கொண்டால் போதும்.

(1) திரவக் கொசுவர்த்திகள், கொசுவர்த்திச் சுருள், மேட் போன்ற எந்த ரூபத்திலும் கொசுவர்த்தி பயன்படுத்தக்கூடாது!

(2) வீடு, அலுவலகம், தொழிற்சாலை என எல்லா இடங்களிலும் 24 மணி நேரமும் நல்ல காற்று உள்ளே வருவதற்கும், கெட்ட காற்று வெளியே செல்வதற்கும் அமைப்பு இருக்க வேண்டும்.

பழங்கால வீடுகளில் வெண்டிலேசன்கேப் என்ற ஓர் ஓட்டை இருக்கும். நான்கு சுவர்களிலும் கூரையிலிருந்து 2 அடிக்கு 1/4 அடி சுமாராக இந்த ஓட்டை இருக்கும். இப்படிப்பட்ட வீடுகளில் காற்று சம்பந்தப்பட்ட எந்த நோயும் வராது. ஏனென்றால், கெட்ட காற்று எப்பொழுதும் மேல் நோக்கிச் சென்று ஏதாவது ஒரு வழியில் ஆகாயத்தை நோக்கிச் செல்வதற்கு மட்டுமே முயற்சி செய்யும். நம் முன்னோர்கள் வாஸ்து என்ற பெயரில் இதைத்தான் செய்து கொண்டிருந்தார்கள். ஒரு வீட்டில் பஞ்ச பூதங்களுக்கான அம்சங்கள் அனைத்தும் சரியாக உள்ளனவா என்பதைப் பார்த்து அதைச் சரி செய்வதுதான் வாஸ்து. அதைப் பலர் தவறாகப் பயன்படுத்தியதால் வாஸ்து என்பது மூட நம்பிக்கை என்று நாம் நினைத்து விட்டோம்.

யோகாசனப் பயிற்சிகள் செய்பவர்கள் கூட முதலில் வீட்டின் காற்று அமைப்பை மேற்கண்டவாறு சரி செய்து விட்டு, பிறகு மூச்சுப் பயிற்சியினைச் செய்தால் மிகுந்த பலன் கிடைக்கும்.

காற்றை நல்ல காற்றாக மாற்றி, ஒழுங்காக ஜீரணம் செய்வதற்குப் பிராணாயாமம், பஸ்திரிகா, கபாலபதி, நாடிஸ்ருதி போன்ற பல பயிற்சிகள் உள்ளன. ஆனால், வீட்டில் உள்ள காற்றே சுத்தமாக இல்லாதபொழுது இந்தப் பயிற்சிகளைச் செய்தால் பெரிய அளவில் நன்மை கிடைக்காது. எனவே, முதலில் அறையில் இருக்கும் காற்றை சுத்தப்படுத்துங்கள்.

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

–அடுத்த அமர்வில் சந்திப்போம்…

About The Author