அனாடமிக் தெரபி (8) – நம் உடலே சிறந்த மருத்துவர்

நாம் ஒரு அம்மா பெற்றெடுத்த குழந்தை. உலகிலுள்ள மனிதர்கள் அனைவரும் ஒரு அம்மாவின் வயிற்றிலிருந்து பிறந்தவர்கள்தான். வயிற்றிலிருக்கும் கருவை ஒரு தாய் எப்படி முழு குழந்தையாக மாற்றுகிறார்? வாய் வழியாக உணவைச் சாப்பிடுகிறார், அது உள்ளே சென்று கண், காது, மூக்கு, வாய் போன்ற உடல் உறுப்புகளாக மாறி ஒரு முழு குழந்தை வெளியே வருகிறது. உணவைக் குழந்தையாக மாற்றியது அம்மாவின் அறிவா அவரது உடல் அறிவா?

நாம் பல புத்தகங்களைப் படிப்பதன் மூலமாகவும் அனுபவத்தின் வாயிலாகவும் கிடைப்பது ‘அறிவு’. பிறக்கும்போதே நம் உடலுக்கு இருக்கும் அறிவு ‘உடலறிவு’. முதலில் நாம் அறிவை இப்படி இரண்டாகப் பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும். உடல் அறிவு வேறு, நம் அறிவு வேறு!

எந்த அம்மாவாவது உணவைக் குழந்தையாக மாற்றியது என்னுடைய அறிவு என்று கூற முடியுமா? முடியாது. உணவைச் சாப்பிடுவது மட்டும்தான் அம்மாவின் வேலை. உணவைக் குழந்தையாக மாற்றுவது உடலின் வேலை. எம்.பி.பி.எஸ் படித்து, மேற்கொண்டு நான்கு பி.எச்.டி-யும் வாங்கிய ஒரு அம்மாவும், படிப்பறிவே இல்லாத ஒரு அம்மாவும், பெற்றுக்கொள்ளும் குழந்தைகள் இரண்டும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. இதிலிருந்து என்ன புரிகிறதென்றால், நம் மூளைக்கு எவ்வளவுதான் அறிவு இருந்தாலும் அது வேறு, உடலறிவு வேறு. உடலறிவு பிறந்ததிலிருந்து இறக்கும் வரை ஞானியாகத்தான் இருக்கிறது. நமது அறிவுதான் ஒரு சில நேரங்களில் புத்திசாலித்தனமாகவும் ஒரு சில நேரங்களில் முட்டாள்தனமாகவும் மாறுகிறது.

அப்படியானால், சாதாரண உணவைக் கண், காது, மூக்கு, வாய் ஆகிய உடல் உறுப்புகளோடு குழந்தையாகப் பெற்றுக் கொடுக்கும் ஓர் உடம்பு எவ்வளவு பெரிய ஞானி என்பதைச் சிறிது யோசித்துப் பாருங்கள்! உலகத்தில் யாராவது, உணவை ஒரு பக்கம் அனுப்பினால் அடுத்த பக்கம் ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை வெளியே வருமாறு ஒரு கருவி கண்டுபிடித்திருக்கிறார்களா? அந்த மாதிரி ஒரு கருவியை ஒருவேளை யாராவது கண்டுபிடித்தால் அவருக்கு நோபல் பரிசே கிடைக்கும்! அப்படி ஓர் அதிசயமான வேலையைச் செய்யும் இந்த உடம்பு எவ்வளவு பெரிய ஞானி, புத்திசாலி, அறிவாளி! எவ்வளவு ஆற்றல் இருக்கிறது இந்த உடம்புக்கு!

இவ்வளவு அறிவுள்ள நமது உடம்புக்குப் போயும் போயும் சாதாரண சர்க்கரை, இரத்த அழுத்தம், ஆஸ்துமா, தைராய்டு, மூட்டு வலி, முழங்கால் வலி, தலைவலி, கர்ப்பப்பையில் கட்டி, புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற நோய்களைக் குணப்படுத்தத் தெரியாது என்றால் ஒத்துக்கொள்ள முடியுமா? நமது உடலறிவு உலகிலுள்ள அனைத்து நோய்களையும் குணப்படுத்தும்!

ஒரு மனிதனுக்கு நோய் வந்துவிட்டது என்றால் அதற்குக் காரணம் வேறொன்றுமில்லை, நமது உடலறிவில் ஏதோ சிக்கல் ஏற்பட்டுள்ளது. அப்படிப்பட்ட உடலறிவுச் சிக்கல்களைச் சரி செய்வது மூலமாக உலகிலுள்ள அனைத்து நோய்களையும் எந்த மருந்தும் மாத்திரையும் மருத்துவர் உதவியும் இல்லாமல் நமக்கு நாமே குணப்படுத்திக் கொள்ள முடியும். உணவைக் குழந்தையாக மாற்றத் தெரிந்த உடலறிவுக்குக் கண்டிப்பாக நோய்களைக் குணப்படுத்தவும் தெரியும்.

குழந்தைகள் ஊனமாகப் பிறக்கவும் சிசேரியன் செய்யவேண்டி வருவதற்கும் காரணம் என்ன?

ஒரு சிறு கற்பனை செய்யுங்கள்! இரத்தம்தான் சமையலறை. உடலிலுள்ள உறுப்புகள் சமையல் செய்யும் நபர்கள். இரத்தத்திலுள்ள பொருட்கள் சமையலறையில் இருக்கும் பொருட்கள். கர்ப்பப்பையில் உருவாகும் குழந்தையின் உறுப்புகள் உணவு வகைகள். சமையல் செய்பவர்களான உடல் உறுப்புகள், இரத்தம் என்கிற சமையலறைக்குச் சென்று அங்கேயுள்ள கால்சியம், இரும்பு, சோடியம் போன்ற பொருட்களை எடுத்துக் கருவுக்குக் கண், காது, மூக்கு போன்ற உறுப்புக்களை உருவாக்கிக் குழந்தையை உருவாக்குகின்றன அல்லவா?

இப்பொழுது, சமையலறையில் கோதுமை மாவு கெட்டுப்போய் விட்டது என வைத்துக்கொள்ளுங்கள்! கெட்டுப்போன மாவில் செய்யப்பட்ட சப்பாத்தியை யாராவது சாப்பிட முடியுமா? அதே போல்தான், கர்ப்பக் காலத்தில் ஒரு தாயின் இரத்தத்தில் ஒரு பொருள், உதாரணமாகக் கால்சியம் கெட்டுப் போயிருந்தால் கெட்டுப்போன கால்சியத்தை எடுத்து வந்து கர்ப்பப்பையில் உள்ள குழந்தையின் உடல் உறுப்புகளைச் செய்யும்பொழுது குழந்தைக்கு எங்கெங்கெல்லாம் கால்சியம் தேவைப்படுகிறதோ அந்த எல்லா இடங்களிலும் கெட்டுப்போன கால்சியம் வைத்துத் தயார் செய்யும்பொழுது அந்தக் குழந்தை ஊனமாகப் பிறக்கிறது. இப்படி, இரத்தத்தில் ஏதாவதொரு பொருள் கெட்டுப் போயிருந்தால், அந்தக் கெட்டுப்போன பொருளால் உருவாக்கப்படும் ஒரு குழந்தை ஊனமாகத்தான் பிறக்கும். சிசேரியன்தான் நடக்கும்.

இரண்டாவது காரணம். சமையலறையில் உப்பில்லை. இப்பொழுது எல்லாச் சமையலும் முடிந்துவிட்டது. உணவை யாராலும் சாப்பிட முடியுமா? அதேபோல், கர்ப்பக் காலத்தில் தாயின் இரத்தத்தில் ஏதாவதொரு பொருள், உதாரணமாக ஜிங்க் இல்லையென்றால் அல்லது அதன் அளவு குறைவாக இருந்தால் குழந்தைக்கு எங்கெல்லாம் ஜிங்க் வைக்கப்பட வேண்டுமோ அது வைக்கப்படாமல்தான் குழந்தை உருவாகியிருக்கும். இதனாலும் குழந்தை ஊனமாகப் பிறக்கும்.

மூன்றாவது காரணம். ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர் வயது, உடல் எடை, உயரம் போன்றவற்றைப் பொறுத்து இரத்தத்தின் அளவு இருக்க வேண்டும். இந்த அளவு ஒருவேளை கர்ப்பமான தாய்க்குக் குறைந்தால் குழந்தை ஊனமாகப் பிறக்கும். தாயிடம் இருக்க வேண்டிய இரத்தத்தின் அளவே குறைவாக இருந்தால் குழந்தைக்கு எப்படி இரத்தம் கொடுக்க முடியும்? எனவே குழந்தை ஊனமாகத்தான் பிறக்கும்; சிசேரியன்தான் நடக்கும்.

நான்காவதாக, தாயின் மனதுக்குப் பாதிப்பு ஏற்பட்டால் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படும். கர்ப்பக் காலத்தில் அந்தத் தாய்க்கும் அவரது கணவருக்கும் சண்டை அல்லது குடும்பப் பிரச்சினை, பணப் பிரச்சினை, மனதிற்குப் பிடிக்காத திருமணம் போன்றவை ஏற்பட்டால் அந்த மனப் பிரச்சினைகள் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படுத்தும். மனதுக்கும் உடலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

ஐந்தாவது காரணம். நம் உடலறிவுதான் உணவை, கருவைக் குழந்தையாக மாற்றுகிறது என்பதை ஏற்கெனவே பார்த்தோம். அந்த உடலறிவும் கெடுவதற்கு வாய்ப்புள்ளது. சில குழந்தைகள் ஆறு விரல்களுடன் பிறப்பார்கள். தலை ஒட்டிப் பிறப்பது, நான்கு கால்களுடன் மூன்று கண்களுடன் பிறப்பது போன்றவை. இதைப் போன்ற வித்தியாசமான குழந்தைகளை நீங்கள் டி.வி, பேப்பர் மூலமாகப் பார்த்திருப்பீர்கள். இதற்குக் காரணம் உடலில் ஓர் அறிவு உள்ளது. அந்த அறிவுக்கு ஏதாவது குழப்பம் ஏற்பட்டால் அல்லது கெட்டுப் போனால் குழந்தை ஊனமாகப் பிறக்கும், சிசேரியன் நடக்கும்.

இதுவரை நாம் 5 காரணங்கள் பார்த்தோம்.

1. இரத்தத்தில் ஏதாவது ஒரு பொருள் கெட்டுப் போவது.
2. இரத்தத்தில் ஏதாவது ஒரு பொருள் இல்லாமல் போவது அல்லது குறைந்து போவது.
3. இரத்தத்தின் அளவு குறைவது.
4. மனது கெட்டுப் போவது.
5. உடலறிவு கெட்டுப் போவது.

குழந்தைகள் ஊனமாகவும் குறைபாடாகவும் பிறப்பதற்கும் சிசேரியன் செய்ய வேண்டி வருவதற்கும் அடிப்படைக் காரணம் இந்த ஐந்துதான்.

இதேபோல், உடலுக்கு நோய் வருவதற்கான ஐந்து காரணங்கள் என்ன என்பதை அறிய, கடந்த வார அத்தியாயத்தைப் படித்துப் பாருங்கள்!

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

அடுத்த அமர்வில் சந்திப்போம்.

About The Author