ஒன்பது மைல் நடை (2)

மூலம் : ஹாரி கெமெல்மேன் (அமெரிக்கா)
தமிழில் : எஸ். ஷங்கரநாராயணன்

”பாரு, அந்த வாக்கியத்தை அப்படியே மொண்ணையாதான் நான் எடுத்துக்கிட்டிருக்கேன். இதன் நதிமூலம் ரிஷிமூலம் எனக்குத் தெரியாது. யார் சொன்னா இதை, எந்தச் சூழலில் பேசினாங்க, தெரியவில்லை. பொதுவா ஒரு வாக்கியம் அதன் சூழலைப் பொறுத்துதானே பேசப்படுது? அர்த்தப்படுது?”

”ஓகோ! என்னென்ன உத்தேசங்களை நீ வெச்சிக்கப் போறே?”

”ஒரு முக்கிய உத்தேசம். இதைச் சொன்னவன் போனது எதும் எக்குத்தப்பான வேலைக்காக இல்லை. அடுத்தது, அவன் உண்மைலியே நடந்திருக்கான். அந்த வலியில்தான் இப்படிச் சொல்லியிருக்கிறான். அத்தோட, ஒரு பந்தயம் கிந்தயம்னு இந்த நடையில் அவன் ஈடுபடவில்லை….”

”ம்.”

”இன்னொண்ணு, அந்த நபர் இங்கத்தைய ஆசாமிதான்னு நான் வெச்சிக்கறேன்.”

”இங்கன்னா, இந்த ஃபேர்ஃபீல்ட் ஆள்னா?”

”அப்பிடித் தேவையில்லை. ஒரு கிராமத்து ஆசாமி…”

”பரவால்ல.”

”ம். இப்ப, அந்த உத்தேசங்களை நீ அனுமதிச்சியானால, அவன் ஒரு விளையாட்டு வீரனோ, அடிக்கடி ஊர் சுத்துகிறாப் போல ஆசாமியோ இல்லைன்னு முன்ன சொன்னேன்லியா, அதையும் ஒத்துக்கணும்.”

”மேல சொல்லு.”

”ம். இப்ப, என் அடுத்த முடிவு… என்னன்னா, அந்த நடை ராத்திரி ரொம்ப நேரம் கழிச்சோ, அதிகாலை வாக்குலயோ நடந்திருக்கணும்…. அதாவது நடு ராத்திரிக்கும், காலை அஞ்சு ஆறு மணிக்கும் இடையில்…”

”அதெப்பிடி?”

”அந்த தூரம் – ஒன்பது மைல். நாம இருக்கற இந்தப் பகுதில நிறைய ஜனங்கள் குடியிருக்கிறார்கள். எந்தச் சாலையில் போனாலும் ஒன்பது மைலுக்குள்ளே வேற ஊர் வந்திரும். ஹட்லி இங்கருந்து அஞ்சு மைல். ஹட்லி அருவி ஏழரை மைல். கோர்ட்டன் பதினோரு மைல் தூரம். ஆனால் கீழ் கோர்ட்டன் எட்டு மைல்லயே வந்திருது. கோர்ட்டன் பகுதிக்கு ரயில் இருக்கு. மத்த வழிகளிலேயும் பஸ் ஓடுது. எல்லா நெடுஞ்சாலைலயும் போக்குவரத்து ஜே ஜேன்னிருக்கு. ஒராள்.. அதும் மழையில் ஒன்பது மைல் நடப்பானா இங்க? நடந்திருந்தால் அது பின்னிரவு அல்லது அதிகாலை! பஸ் ரயில் இல்லாத நேரம் அது. அத்தோட வழியில் எந்தப் புது மனிதனையும் அந்த வழியில் போகிற வாகனக்காரர்கள் கூட ஏத்திக்க யோசிக்கவே செய்வார்கள்.”

”அட.. அவன் யார் கண்லயும் படாமல் போக விரும்பியிருக்கலாம் இல்லியா?”
இவ்ளதானா நீ, என்கிறதாக நிக்கி பார்த்தான் என்னை.

”அப்பிடி யாரும் தன்னைப் பார்க்கப்டாதுன்னு போறவன் ஆடியசைஞ்சி தனியா நடப்பானா, ரயில் பஸ்னு போறது இன்னும் சவுகரியம் அவனுக்கு. எல்லாவனும் செய்தித்தாளை எடுத்துப் பிரிச்சி தன் பாட்டுக்கு மேய்ஞ்சிட்டிருப்பான்….”

”சரி அதை விடு” என்றேன் அவசரமாய்.

”இதை யோசிச்சிப் பாரு. அவன் ஒரு பட்டணத்தை நோக்கி வருகிறான். அதைவிட்டு வெளியே போகவில்லை! ”

தலையாட்டினேன். ”பட்டணத்தில் இருந்து அவன் கிளம்பியிருந்தால் எதும் வண்டி வாகனம் ஏற்பாடு பண்ணிக்கொண்டே கிளம்பியிருக்கலாம். அதானே சொல்ல வரே?”

”ஓரளவு சரி” என்றான் அவன். ”இன்னொரு விஷயம் இருக்கு. அந்த தூரம். ஒன்பது மைல் நடை. ஒன்பது ஒரு குறிப்பான எண். குத்துமதிப்பான எண் அல்ல.”

”விளங்கல்ல.”

பார்த்தானே என்னை ஒரு வாத்தியார்ப் பார்வை. ”அதாவது நீ ஒரு பத்து மைல் நடை அல்லது நூறு மைல் காரோட்டினேன்னு சொன்னியானா, நாம புரிஞ்சிக்கலாம், ஒரு… எட்டில் இருந்து பன்னெண்டு மைல் அளவு நடந்திருக்கிறான். தொண்ணூறுலேர்ந்து நூத்திப்பத்து மைல் அளவு காரோட்டியிருக்கிறான்… அதாவது பத்து நூறு இதெல்லாம் முழு எண்கள். சரியா பத்து மைலோ ஏறக்குறைய பத்து மைலோ நடந்திருப்பே, சொல்றது என்ன சொல்லுவே? பத்து மைல்ம்பே. ஆனால் அவன் என்ன சொல்றான், ஒன்பது மைல்னு குறிப்பாச் சொன்னால், அது கூடகுறைய இல்ல, சரியா ஒன்பது மைல். நாமளும் பாரு, ஒரு பட்டணத்துக்கு கிராமத்தில் இருந்து எத்தனை தூரம்னு சரியா கணக்கு வெச்சிருப்போம். பட்டணத்தில் இருந்து கிராமத்துக்கு அத்தனை துல்லியக் கணக்கு வெச்சிருக்க மாட்டோம் இல்லையா? பட்டணத்தில் ஒராள்கிட்ட பிரௌன் குடியானவன் எங்க இருக்கான்னு கேட்டேன்னு வெய்யி, அவனைத் தெரிஞ்சவன் என்ன சொல்வான்? 3-6/10 மைல். நான் கார்ல கணக்குப் பார்த்திருக்கேன்னுவானா இல்லியா?”

”அட… இது அத்தனை சுரத்தா இல்ல நிக்கி.”

”நீ சொல்லியிருக்கே, பட்டணத்தில் இருந்து கிளம்பியிருந்தால் வண்டி வாகனம் அவனே பார்த்துக்கிட்டுப் போயிருப்பான்னியே நீ? அதையும் இதையும் சேர்த்துப் பார் அப்பா.”

”ஹ்ம். இதையும் ஏத்துக்கலாம். வேற?”

”இப்பதான் நான் வியூகம் அமைக்க ஆரம்பிச்சிருக்கேன்” என்று அவன் அலட்டிக்கொண்டான்.

”அதாவது… அவன் சும்மா ஒன்பது மைல் நடக்கலை. ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கித்தான் நடந்திருக்கிறான். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அவன் அங்கே இருந்தாக வேண்டிய நிர்ப்பந்தம். ஒரு உதவி என்று, அதாவது அவன் வந்த கார் மக்கர் என்றோ, மனைவிக்குப் பிரசவ வலி என்கிறாப்போல அவசர உதவி என்றோ அங்கே அவன் போகவில்லைன்றேன். அட அவன் வீட்டை உடைச்சி யாரோ திருடன்….”

”கார் மக்கர்ன்றது சரியான சூழலா இருக்கு. பட்டணத்தை விட்டு எத்தனை தூரம் வரை வந்திருக்கிறேன் என்று அவன் காரில் பார்த்திருக்கலாம்.”

நிக்கி மறுத்துத் தலையாட்டினான். ”அட.. கார் நின்னிட்டால் மழையில் ஒன்பது மைல் நடக்கிறதாவது, மழை விட்டதும் அடுத்த சோலியைப் பார்க்கலாம்னு அப்படியே பின் இருக்கையில் சுருண்டுபடுத்துத் தூங்கியிருப்பான். அல்லது கர்ச்சீப்பை கொடியாட்டம் ஆட்டி வழியில் வர்ற இன்னொரு வாகனத்தை நிறுத்த முயற்சி பண்ணியிருப்பான். பாரு, ஒன்பது மைல். அதை நடந்து கடக்க அவனுக்கு எத்தனை நாழி எடுக்கும் சொல்லு?”

”ஒரு…. நாலு மணி நேரம்.”

சரியென தலையாட்டினான். ”அதுக்கு கம்மியா முடியாது. மழை வேற பெய்யுது. நாம அந்த நடை பின் ராத்திரி அல்லது அதிகாலையில் நடந்திருக்கறதா பேசிக்கிட்டோம். அந்த கார் ஒரு மணி வாக்கில் மக்கர் பண்ணியிருந்தால், அவன் வந்து சேருமுன் அஞ்சு மணி ஆயிருக்கும். வெளிச்சம் வருகிற சமயம். தெருவில் கார்கள் நடமாட்டம் ஆரம்பிச்சிருக்கும். இன்னும் கொஞ்சம் ஆச்சின்னா பஸ்ஸே ஆரம்பிச்சிரும். ஃபேர்ஃபீல்டுக்கு முதல் பஸ் அஞ்சரைக்கு வந்து சேர்கிறது இல்லியா? அத்தோட அவன் ஒரு காருக்கு உதவின்னு கிளம்பியிருந்தால், பட்டணம் வரை நடந்திருப்பானா? பக்கத்தில் எங்க தொலைபேசின்னு பார்த்துப் போயிருப்பான்… அதான் சொல்றேன், அவனுக்கு அந்த நேரத்தில் பட்டணத்தில் இருக்கிறதாக முக்கிய சோலி இருக்கிறது. அதும் பட்டணத்தில். அதும் அஞ்சரை மணி அதிகாலைக்கு முன்னால்….”

”அப்படின்னால் அவன் ஏன் முன்னாடியே அங்கே போய்ச் சேர்ந்து காத்திருக்கக் கூடாது? இப்பிடி மழையில் ஒன்பது மைல் நடந்து…. ஏன்?”

****

என் அலுவலகம் இருந்த ஊரகக் கட்டடத்துக்கு வந்து சேர்ந்திருந்தோம். பொதுவாக நீல நிலவு விடுதியில் ஆரம்பிக்கும் எங்கள் எந்த அரட்டையும் இதன் வாசலில் அப்படியே அமுங்கிவிடும். ஆனால் நிக்கி என்ன இப்பிடி பேனைப் பெருமாளாக்கிக் காட்டுகிறான்… என எனக்கு ஆர்வக்கிறுகிறுப்பு. அவனை மேலே என்னுடன் வந்து கூடக் கொஞ்சநேரம் இருக்கக் கேட்டுக்கொண்டேன். நாங்கள் ஆளுக்கொரு இருக்கையில் அமர்ந்து கொண்டோம். ”சொல்லு நிக்கி, அவன் ஏன் முன்னாடியே போய்ச் சேர்ந்து அந்த காரியத்துக்காகக் காத்திருக்கவில்லை?”

”அவன் காத்திருந்திருக்கலாம்…” என்று திரும்பச் சொன்னான் நிக்கி. ”ஆனால் அப்படி அவன் செய்யவில்லை இல்லியா? அதனால நாம என்ன நினைக்க வேண்டியிருக்கு? என்னவோ காரணமா அவன் கடைசி பஸ்சை விட்டிருக்கணும். கடைசி பஸ் தாண்டியும் அவன் இங்க இருந்திருக்க வேண்டி ஆயிருக்கணும்ன்றேன். அல்லது அவனுக்கு கிளம்புமுன் ஒரு சமிக்ஞை மாதிரி எதாவது வரவேண்டி யிருந்து அவன் இங்கியே காத்திருந்திருக்கலாம்…. அதாவது எதும் தொலைபேசிச் செய்தி போல எதாவது வர அவன் இங்கே காத்திருக்கிறதாய் இருந்தால்?”

”அதாவது, அவனுக்கு அந்த சந்திப்பு அல்லது காரியம் பின்னிரவுக்கும் அதிகாலை அஞ்சு முப்பதுக்கும் நடுவில் பட்டணத்தில் இருந்திருக்கிறது…”

”இப்ப அதைவிட துல்லியமா அதை நாம கணிக்கலாம் அப்பா. அந்த ஒன்பது மைலை அவன் நடந்து கடக்க நாலு மணி நேரம் ஆகுதுன்னு நாம பார்த்தோம். கடைசி பஸ் காலை 12 30 க்கு. அதை அவன் பிடிக்கலையின்னால், ஆனால் அதே சமயம் நடக்க ஆரம்பித்திருந்தால் போய்ச் சேர்கிற இடத்துக்கு காலை நாலரை மணி வரை போய்ச்சேர முடியாது. அதுக்கு பதிலா, காலையில் முதல் பஸ்சை அவன் பிடித்திருந்தால், அஞ்சரைக்கு வந்து சேர்ந்து விடலாம். அப்படின்னா என்ன தெரியுது? அவனுக்கு நேரம் நாலரையில் இருந்து அஞ்சரைக்குள்! அப்டிச் சொல்லலாமா?”

”என்ன சொல்ல வர்றே? அவன் சோலி நாலரைக்கு முன்னால் என்றால் கடைசி பஸ்சை அவன் பிடிச்சிருப்பான். சோலி அஞ்சரைக்குப் பின்னாடி என்றால் மறுநாள் முதல் வண்டியைப் பிடிச்சிருப்பான்னு சொல்றே, அதானே,”

”ஓரளவு அப்படித்தான். அத்தோட இன்னொண்ணு. அவன் ஒரு சமிக்ஞை அல்லது ஆணைக்கு அல்லது தொலைபேசிக்கு என்று அவன் காத்திருந்தால்… அது ஒரு ஒருமணிக்கு அப்பறமா வந்திருக்காது. அதுக்கு முன்னாடியே வந்திருக்கணும்.”

”ஆமாமா, அதுண்மைதான். அவனுக்கு அஞ்சு மணிக்கு நகரில் வேலை என்றால், அவன் நாலு மணி நேரம் நடக்கவேண்டும் என்றிருக்கிற பட்சம், ஒருமணிக்கெல்லாம் அவன் கிளம்பியாக வேண்டும். தொலைபேசி அதற்கு முன்னால் வந்தாக வேண்டும்…”

தலையாட்டினான் நிக்கி. ஆனால் உள்ளுக்குள் மேலும் யோசனை நாடாக்கள். அமைதியாகி விட்டான். என்னவோ எனக்கே ஆச்சர்யம், அவனை நான் தொந்தரவு செய்யாமல் அவனையே பார்த்தபடி இருந்தேன். வேடிக்கை தாண்டி வேறொரு வியூகத்துக்குள் நான் இழுக்கப் படுகிறேனா? சுவரில் அந்தப் பிரதேசத்தின் பெரிய வரைபடம். அதைநோக்கிப் போய் கவனமுடன் பார்க்க ஆரம்பித்தேன்.

(மீதி அடுத்த இதழில்)

About The Author