கடைசி சிகரட்

அது ஒரு போர்க்களம். அங்கே இரக்கம் என்பது கிடையாது. எதிர்ப் பட்டால் குண்டு மழைதான். இராமன் தன்னிடமுள்ள துப்பாக்கியைப் பார்த்துக் கொண்டான்.

அவன் மனது பின்நோக்கிச் சென்றது.

அது ஒரு கிராமம். அவன் நன்றாகப் படித்து வந்தான். அவனுக்கு இராணுவம் என்றால் மிகவும் ஆசை. அவன் வீட்டில் அதை விரும்பவில்லை. அவன் முதுகலைப் படிப்பை முடித்துவிட்டான். அவன் அத்தை மகள் ரமா, படித்து விட்டு அவனுக்காகக் கல்யாணத்திற்குக் காத்திருந்தாள். அவளை ஆற்றோரம் சந்தித்து மகிழ்ந்த காலத்தை நினைத்து ஏக்கப்பட்டான்.

அவன் இராணுவத்திற்கு வந்தது ஒரு பெரிய கதை. வீட்டிற்குத் தெரியாமல் அவன் NDA பரிட்சை எழுதி அதிகாரியாக அவன் பதவியேற்றபொழுதுதான் அவர்கள் குடும்பத்திற்கே தெரியும். ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்த அவன் பெற்றொர் அதை விரும்பவில்லை. அவர்கள் ஆச்சாரம் கெட்டுவிடும் என்று பயந்தார்கள்.ரமா மட்டும் அவனைப் புரிந்து கொண்டாள். அவன் எல்லோரையும் சமாதானப்படுத்திவிட்டு இராணுவத்தில் சேர்ந்தான். அவனுடைய ஒரே கெட்ட பழக்கம் சிகரெட் பிடிப்பதுதான்.

சண்டை வந்தது. போர்முனையில், அதிகாரியான அவன் கீழ் ஒரு படை இருந்தது. அவர்கள் இலக்கு ஒரு சிறிய குன்றைப் பிடிப்பதுதான். குன்றைப் பிடித்த நேரம் திடீரென்று எதிரி விமானப் படையை சேர்ந்த ஒரு விமானம் குண்டு மழை பொழிந்தது. அதில் எல்லோரும் இறந்து விட்டனர். அவன் ஒருவன் மட்டும் தனியாக, உயிர் ஊசலாடும் நிலையில் இருந்தான்.
ஒருபுறம் ரமாவின் நினைவு. அவன் மெதுவாகக் குன்றின் மேல் ஏறினான். அங்கே அவன் பார்த்த காட்சி அவனை மிகவும் பாதித்தது. ஏராளமான இராணுவ வீரர்கள் இறந்து கிடந்தனர். ஆனால் அதில் ஓரிடத்தில் மட்டும் ஓர் அசைவு தெரிந்தது.ஆம்! இராணுவ வீரர்களுள் ஒருவனிடம் உயிர் இருந்தது! அவன் இவனை நோக்கி வர ஆரம்பித்தான். அவன் பெயர் ரஹீம்.

ரஹீம் பெரிய, பணக்கார வியாபாரி ஒருவரின் மகன். அவன் தன் நாட்டை வெகுவாக நேசித்தான். அவனுக்கும் இராணுவத்தில் சேர ஆசை. ஆனால் அவன் வாப்பாவிற்குத் தெரிந்தால் அதை ஒத்துக் கொள்ள மாட்டார். எனவே அவன் தந்தைக்குத் தெரியாமல் கல்லூரியில் படிக்கும்பொழுதே இராணுவ அதிகாரித் தேர்வு எழுதி வெற்றி பெற்றான். அவனுடைய வாப்பாவிற்க்குத் தெரிந்த பொழுது கோபப்பட்டார். அவன் அத்தை மகள் ஆயிஷாவை யார் திருமணம் செய்துகொள்வது என்று கேட்டார்.

அதற்கு ரஹீம், "வாப்பா! நானே அவளைத் திருமணம் செய்து கொள்கிறேன்!" என்றான்.

"அதற்கு அவள் அப்பா சம்மதிக்க வேண்டுமே!" என்றார்.

அப்பொழுது அங்கு வந்த ஆயிஷாவின் அப்பா, சங்கதி கேட்டவுடன் "அதற்கென்ன? அவன் சென்று வரட்டும். அப்புறம் திருமணம் வைத்துக் கொள்ளலாம்" என்றார்.

திடீரென்று சண்டை வந்துவிட்டது.
ரஹீஹிம் போர் முனையில்!

யாரும் எதிர்பாராத நிலையில், அவன் கீழ் இருந்த வீரர்கள் இறந்து விட்டனர். எதிரிப் படையிலும் இந்நிலையே!

இப்பொழுது அவனுக்கு சிகரெட் பிடிக்கவேண்டும் என்று தோன்றியது. அங்கே தூரத்தில் வீரன் ஒருவன் அசைவது தெரிந்தது.
அவனை நோக்கி நகர ஆரம்பித்தான்.

இருவரும் வெகு அருகே வந்துவிட்டனர்.

இராமன் தன்னுடைய பாக்கெட்டில் கையை விட்டான். ரஹீம் உடனே "சுடாதே!" என்று கத்தினான். இராம் மெதுவாக உள்ளிருந்து சிகரெட் பாக்கெட்டை எடுத்தான். ரஹீம் சிரித்தபடித் தன் பாக்கெட்டிலிருந்து நெருப்புப் பெட்டியை எடுத்தான். இருவரும் அமைதியாக சிகரெட்டைப் புகைத்தனர்.

About The Author