தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் (19)

பல்லவர், சோழர் ஓவியங்கள்

காஞ்சிபுரத்துக் கயிலாசநாதர் கோயிலிலும், விழுப்புரம் தாலுக்காவில் பனைமலைக் கோயிலிலும், தஞ்சாவூர்ப் பெருவுடையார் கோயிலிலும் பல்லவர் காலத்துச் சித்திரமும், சோழர் காலத்துச் சித்திரமும் சுவர்களில் காணப்படுகின்றன. புதுக்கோட்டையைச் சார்ந்த சித்தன்ன வாசல் குகைக்கோயிலிலும், திருநெல்வேலித் திருமலைபுரத்துக் குகைக்கோயிலிலும் பல்லவர் காலத்து ஓவியமும், பாண்டியர் காலத்து ஓவியமும் காணப்படுகின்றன. குகைக்கோயில் சித்திரங்களும் ஓவியங்களே. குகையின் பாறைச் சுவரின் மேல் மெல்லியதாகச் சுதை பூசி, அதன்மீது ஓவியங்கள் எழுதப்பட்டன. பண்டைக்காலத்தில் முக்கியமான கோயில்களில் ஓவியங்கள் எழுதப்பட்டிருந்தன. பிற்காலத்தில் அவை அழிந்தும் அழிக்கப்பட்டும் மறைந்துவிட்டன.

ஓவியம் அழிக்கப்படுதல்

காஞ்சிபுரத்து நூற்றுக்கால் மண்டபத்தின் மேற்புறத்தளத்தில் ஓவியங்கள் எழுதப்பட்டிருந்ததைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் கண்டு வியப்படைந்தேன். இரண்டாண்டு கழித்து அந்த ஓவியங்களைப் படம்பிடிப்பதற்காகச் சென்றபோது, அந்தோ! அந்தச் சிற்பங்கள் முழுவதும் மறைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். கோபி நிற நீறு நன்றாகப் பூசப்பட்டுச் சித்திரங்கள் யாவும் மறைக்கப்பட்டுக் கிடந்தன. இவ்வாறு கலையறிவு இல்லாத ‘தர்மகர்த்தர்கள்’ எத்தனை கோயில்களில் எத்தனை சித்திரங்களை அழித்தார்களோ! பண்டைக்காலத்தில் கலைப்பெருமை அறிந்த கலையன்பர்கள் பொருள் செலவு செய்து சித்திரங்களை எழுதி அழகுபடுத்தி வைத்தார்கள்; இக்காலத்து ‘தர்மகர்த்தர்கள்’ அந்தச் சித்திரங்களைச் சுண்ணம் பூசி மறைத்துக் கோயிலை ‘அழகு’ செய்கிறார்கள்!

‘சுவரை வைத்தல்லவோ சித்திரம் எழுதவேண்டும்!’

பண்டைக் காலத்தில் சுவர் ஓவியங்களே பெரிதும் எழுதப்பட்டன என்றும் அவை பெரும்பாலும் அரசரின் அரண்மனைச் சுவர்களிலும், பிரபுக்களின் மாளிகைச் சுவர்களிலும், கோயில் சுவர்களிலும் எழுதப்பட்டிருந்தன என்றும் கூறினோம். பட்டினத்துப்பிள்ளையார், தாம் உலகக் காட்சியை மறந்து கடவுட் காட்சியை அடைந்ததை, சுவரில் எழுதப்பட்ட ஓவியத்துக்கு உவமை கூறுகிறார். சுவரில் எழுதப்பட்ட சித்திரங்களைக் காண்பவன், அந்த ஓவியங்கள் காட்டும் காட்சிகளைக் கண்டு மனம் மகிழ்ந்து, அவற்றில் ஈடுபடுகிறான். அவன் சற்று அருகில் வந்து அந்த ஓவியங்களைக் கையினால் தடவிப் பார்க்கும்போது, அவை மறைந்து சுவராகத் தோன்றுவதைக் காண்கிறான். இந்த உவமையை அவர் தமது அநுபவத்துக்கு ஒத்திட்டுக் கூறுகிறார்:

"யாவையும் எனக்குப் பொய்யெனத் தோன்றி
மேவரு நீயே மெய்யெனத் தோன்றினை
ஓவியப் புலவன் சாயல்பெற எழுதி
சிற்ப விகற்பம் எல்லாம் ஒன்றி
தவிராது தடவினர் தமக்குச்
சுவராய்த் தோன்றும் துணிவுபோன் றனவே."1

சுவர்ச் சித்திரங்கள் பெரிதும் பயிலப்பட்டிருந்தபடியினால்தான், "சுவரை வைத்தல்லவோ சித்திரம் எழுத வேண்டும்" என்னும் பழமொழி வழங்குவதாயிற்று. "அச்சிலேற் பண்டியுமில்லை, சுவரிலேற் சித்திரமுமில்லதே போன்று" என்று அருங்கலச் செப்பு என்னும் நூல் கூறுகிறது.

கண்ணுள் வினைஞர்

சித்திரக்காரர் கண்ணுள் வினைஞர் என்று கூறுப்படுகின்றனர். என்னை?

"எண்வகைச் செய்தியும் உவமம் காட்டி
நுண்ணிதி னுணர்ந்த நுழைந்த நோக்கிற்
கண்ணுள் வினைஞர்."2

"பலவகைப்பட்ட கூரிதாக வுணர்ந்த தொழில்களையும் ஒப்புக்காட்டி, கூரிய அறிவினையுடைய சித்திரகாரிகளும்."

"சித்திரமெழுதுவார்க்கு வடிவின் தொழில்கள் தோன்ற எழுதுவதற்கு அரிது என்பது பற்றிச் செய்தியும் என்றார். நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழிலை நிறுத்துதலின் கண்ணுள் வினைஞர் என்றார்" என்பது நச்சினார்க்கினியர் உரை.

சித்திரகாரப் புலி

ஏறத்தாழக் கி.பி.600 முதல் 630 வரையில் அரசாண்டவனும், திருநாவுக்கரசர் காலத்திலிருந்தவனுமான மகேந்திர வர்மன் என்னும் பல்லவ அரசன், தனது சிறப்புப் பெயர்களில் ஒன்றாகச் சித்திரகாரப் புலி என்னும் பெயரைக் கொண்டிருந்தான். இதனால், இவன் சித்திரக்கலையில் வல்லவன் என்று தெரிகிறான். இவன் ஓவிய நூல் ஒன்றுக்கு ஓர் உரை எழுதினான் என்பதை, இவ்வரசன், காஞ்சிபுரத்துக்கு அடுத்த மாமண்டூரில் அமைத்த குகைக்கோயில் சாசனம் கூறுகிறது.

ஓவிய நூல்

மாதவி என்னும் நாடக மகள், பல கலைகளைக் கற்றவள் என்றும், அவற்றில் ஓவியக்கலையையும் பயின்றாள் என்றும் மணிமேகலை கூறுகிறது:

"ஓவியச் செந்நூல் உரைநூற் கிடக்கையும்
கற்றுத்துறை போகிய பொற்றொடி மங்கை"3

அடியார்க்கு நல்லார் காலத்திலும் ஓவிய நூல் இருந்தது. அடியார்க்கு நல்லார் ஓவிய நூலைக் குறிப்பிடுகிறதோடு, அந்நூலிலிருந்த ஒரு சூத்திரத்தையும் மேற்கோள் காட்டுகிறார்:

"ஓவிய நூலுள், நிற்றல், இருத்தல், கிடத்தல், இயங்குதல் என்றும் இவற்றின் விகற்பங்கள் பலவுள; அவற்றுள் இருத்தல் – திரிதரவுடையனவும் திரிதர வில்லனவுமென இரு பகுதிகள்: அவற்றுள் திரிதரவுடையன – யானை, தேர், புரவி, பூனை (?) முதலியன; திரிதரவில்லன ஒன்பது வகைப்படும். அவை பதுமுகம், உற்கட்டிதம், ஒப்படியிருக்கை, சம்புடம், அயமுகம், கவத்திகம், தனிப்புடம், மண்டிலம், ஏகபாதம் எனவிவை. என்னை?

"பதுமுக முற்கட் டிதமே யொப்படி
யிருக்கை சம்புட மயமுகஞ் சுவத்திகந்
தனிப்புட மண்டில மேக பாத
முளப்பட வொன்பது மாகுந்
தரிதர வில்லா விருக்கை யென்ப"

என்றாராகலான்."4

–கலை வளரும்…
________________________________________
1. திருக்கழுமல மும்மணிக்கோவை. 10.
2. மதுரைக் காஞ்சி, 516 – 518
3. ஊர் அவர்… 31 – 32.
4. சிலம்பு. வேனிற் காதை, 23 – 26ஆம் அடிகளின் உரை மேற்கோள்.

About The Author