தருணம் (8.1)

மனிதாபிமானம்

தி.ஜானகிராமன்

தொகுப்பு: எஸ்.ஷங்கரநாராயணன்

நடு நிசித் தூக்கத்தை மாலை ஐந்தரை மணிக்குத் தூங்குகிறான். அவருக்கு இப்போதுதான் கண்ணே திறந்த மாதிரி இருந்தது. அந்த ஆளுக்குப் பிறகு அதே மாதிரி இன்னொருவன் – அப்புறம் இன்னொரு ஆள் – இன்னொரு, இன்னொரு – அந்த ஒரு மைல் நீளமும் காலி இல்லை. ஒரே தூக்க வரிசை. எப்படியோ ஒரு தாண்டு தாண்டி நடைபாதைக்கும் போகாமல் நடைபாதையை ஒட்டி வரிசை வைத்திருந்த குட்டிக் கடைப் பரப்புகளோடு நடந்தார் தேவுடு. டாங்காக்கள் அவரை உரசுகிற மாதிரி நகர்ந்தன. “ஸ்ரீமான்ஜி!” என்று டாங்காக்காரர்கள் அவரைப் பார்த்துக் கத்தினார்கள். தேவுடு வீதியின் நடு வகிட்டைப் பார்த்துக் கொண்டே நடந்தார்.

சாயங்காலம் ஐந்து மணிக்கு எத்தனை பேர் தூங்குகிறார்கள்! இந்தப் பக்கம் போகிற இரைச்சல்! அந்தப் பக்கம் வருகிற இரைச்சல்! ஆட்டோ சத்தம். மிதி சைக்கிள் மணிகள்! வீதியோரக் குட்டிக் கடைக்காரர்களின் கூப்பாடு கூச்சல்கள்! ரேடியோக்கள், குழந்தை ஊதல்கள் – இத்தனைக்கும் இடையில் வீதியின் நடு வகிடு மக்கள் தூக்கத்தின் மௌனத்தில் புதைந்து கிடக்கிற ஆச்சரியம் தேவுடுவைச் சற்று நிற்க வைத்துவிட்டது. கிழவர்கள், குழந்தைகள், முப்பது வயதுகள், இருபது வயதுகள், தகரக் குவளையைத் தலையணையாக வைத்து ஒரு தூக்கம். கந்தல் மூட்டை பறி போகாமல் அணைத்துக்கொண்டு ஒரு தூக்கம். கடைவாய் வழிகிற தூக்கம். ஒரு பதினாறு வயசு அழுக்குக் கறுப்பன் தலை மேடைக்குக் கீழே லேசாகத் தொங்குகிறது. பள்ளமே தலைக்கு யரமாகிறதென்றால் எப்பேர்ப்பட்ட துயிலாக இருக்க வேண்டும்! ஒரு டாங்காச் சக்கரம் உரசினால் போச்சு! உரசாமல் ஏதோ காப்பாற்றி விட்டது இத்தனை நேரம். அவன் தலையைத் தூக்கி சமத்தில் வைக்கவேண்டும் போலிருந்தது தேவுடுக்கு. செய்யலாம். செய்யவில்லை. சங்கோசம். மனிதாபிமானி. மகாத்மா காந்தி அவதாரம் என்று எல்லோரும் பழிக்கத் தொடங்கிவிட்டால்…
யார் இவர்கள்! எப்படி இந்த வீதி மத்தி தூங்குகிற இடம் என்று கண்டுபிடித்தார்கள்! உற்றுப் பார்த்தார். வேறு யாருமில்லை. நம் நாட்டு மனிதர்கள்தான். பல காந்திகள் சொன்ன தரித்திர நாராயணர்கள், கரீபி ஹடாவ்-களின் பூஜா விக்ரகங்கள்.

இப்படி சாயங்காலம் தூங்குகிறவர்கள் எப்போது எழுந்திருப்பார்கள்? எங்கே சாப்பிடுவார்கள், சாப்பிட்டு விட்டு எங்கு போவார்கள்? எங்கு படுப்பார்கள்? எத்தனை மணிக்குத் தூங்குவார்கள்?
நடைக்கு மீண்டும் தடை! கடை வாசலில் கும்பல்! கும்பலின் கோடியில் தலைக்கு மேல் எழுதியிருந்தது. சுத்த தேசிய நெய் ஜிலேபி. 1786. 1977-லிருந்து கழித்ததில் இருநூறு வருஷத்திற்கு ஒன்பது வருஷம்தான் குறைச்சல். இந்தி பத்திரிகைத் துணுக்குகள், எழுதின நாற்பது பக்க நோட்டுப் பக்கங்கள் – என்று பல தினுசுக் காகிதங்களில் ஒவ்வொரு ஜிலேபியாக வைத்துக் கடித்த வண்ணம் மனிதர்கள் கும்பலிலிருந்து பிதுங்கி வந்து கொண்டிருந்தார்கள். ஜிலேபி பசும்பொன் நிறமாகத் தளதளத்தது. மெல்லுகிற ஓசைகளில் மொரமொரப்பு. கவர்ச்சி தாளாமல், மெதுவாகக் கும்பலில் பிதுங்கிக் கொண்டார் தேவுடு. இரண்டு நிமிஷத்தில் கடைக்காரனிடம் நெருங்க முடிந்துவிட்டது. ஒரு நூறு கிராம் ஜிலேபியை வாங்கிக் கொண்டு பிதுங்கி வந்தார். வாயில் போடுவதற்குள் ஈக்கள் பிடுங்கிவிடும்போல் உதட்டை முற்றுகை இடவே காகிதத்தால் நன்றாக மூடி ஈக்கள் இல்லாத இடமாகப் பார்த்து மேலே நடந்தார் தேவுடு.

மணிக்கூண்டு சதுக்கத்தில் பல்குச்சி, பாய்கள் விற்கிறவர்கள் வரிசைக்கு இப்பால் தொழுநோய்க்காரர்கள். பாவ்ஜி பாவ்ஜி, என்று முப்பது பேர் அரற்றினார்கள். அதற்குள் ஜிலேபியைத் தின்றுவிட்டார் தேவுடு. தின்னாவிட்டாலும் கொடுப்பதாக இல்லை அவர். தொழுநோய்க்காரர்களுக்குத் தனி காலனி வைத்து வைத்தியம் சாப்பாடு எல்லாம் நடக்கிறது. கொண்டு விட்டாலும் தப்பி ஓடி வந்து தெரு மத்தியிலும் ஓரத்திலும் இருந்து நோய் பரப்புகிறவர்களுக்கு எதற்கு இரங்க வேண்டும்! ஆனால் காலனியில் கெடுபிடி அதிகமோ என்னவோ! வாய் ருசிக்க அறுசுவை கிடைத்திராது. பிச்சை உணவில் அறுபது சுவை இருக்கும்… என்னவோ, ஜிலேபி தீர்ந்துவிட்டது.

பாமர் கம்பெனிக்கு, மாடிப்படி ஏறிப்போனார். மாடிப் படியிலும் ஏறுகிற, இறங்குகிற நடமாட்டம். பாமர் கம்பெனி ஒன்றரை ஆள் அகலம். நீளமான ஓட்டம். அகலத்தில் பாதியை வரிசையாகக் கண்ணாடி அலமாரிகள், அதற்குப் பின் விற்பவர்களாக அடைத்திருந்தது. மூன்று கோடைகாலப் பகல் சேர்ந்து வந்ததுபோல வாழைத்தண்டு விளக்கு வெளிச்சம். கி.பி.2050-ஆக இல்லாவிட்டாலும் கி.பி இரண்டாயிரத்தின் கூட்டம். அகப்பட்ட இடுக்குகளைப் பிடித்துப் பிடித்து குனிந்து குனிந்து பார்த்தார். உலகத்துக் கடிகாரம் ஒன்றும் மிச்சமில்லை. முகமில்லாத கடிகார அலமாரியில் எள் விழாத கும்பல்.

யாரும் யாரையும் கவனிப்பதாகத் தெரியவில்லை. இரண்டு கடிகாரத்தைப் பைக்குள் போட்டுக் கொண்டாலும் தெரியாது.

"ரைனாசரஸ் வாட்ச் ரிப்பேர் பண்ணுவீர்களா?" என்று கடைசியில் இடம் பிடித்து ஆள் பிடித்துக் கேட்டு விட்டார் தேவுடு.

"ரைனா இப்பல்லாம் வரதில்லை. அதே மாடல்தான் மூனி வாச்சு" என்று இன்னொரு அலமாரியண்டை செல்ல முயன்றான் அவன்.

"வேண்டாம் வேண்டாம்… ரைனாசரஸ் கடிகாரம் ரிப்பேர் பண்ண முடியுமான்னு கேட்டேன்."

"ரைனாசரசா! அதெல்லாம் இப்ப வரதேல்லே சார். ரிப்பேருக்கே அதை வாங்கறதில்லே. நம்ம வாச்சுங்களே இப்ப ஏற்றுமதியாவுது – ரைனாவை யார் தருவிக்கிறாங்க இப்பல்லாம்?"
சிறிது நின்றார் தேவுடு.

"யாருமே செய்ய மாட்டாங்களா?"

"நாங்கதான் இந்த ஸிட்டியிலேயே செஞ்சுகிட்டிருந்தோம். நாங்களே இல்லேன்னா வேற யாரு செய்வாங்க?"

"என்ன பழுதுன்னாவது சொல்லுங்களேன்."

"இப்ப சட்டுனு சொல்ல முடியாது சார்."

"கொஞ்சம் பாருங்க சார். நான் மிதிலேபுரியிலேர்ந்து வர்றேன்."

"கொடுங்க" என்று அலுத்துக் கொண்டே வாங்கிப் போனான். ஒரு நிமிஷம் கழித்துத் திரும்ப வந்தான்.

"கொஞ்சம் காத்திருக்கணும் சார்."

"நிச்சயமா."

கொஞ்சம் என்பது ஒரு மணி நேரம் என்று ஏழு மணிக்குத் தெரிந்தது.

"லீவர் உடஞ்சிருக்கு சார். ஒண்ணும் செய்ய முடியாது" என்று கடிகாரத்தைத் திருப்பிக் கொடுத்தான்.

"காரண்டி இருக்கா? எங்க வாங்கினீங்க?"

"நான் வாங்கலே. என் சினேகிதர் ஹாங்காங்லேந்து வாங்கிண்டு வந்து கொடுத்தார்."

"அப்ப அங்கதான் அனுப்பணும்."

"இது ரொம்ப ஒஸ்தி வாட்சா?"

"ஒஸ்தி என்ன, மட்டம் என்ன? எல்லா வாட்சும் ஒஸ்திதான். ரைனாசரஸ் எம் மாதிரி ஆளுங்கல்லாம் வாங்கி கட்டிக்கிறது. அமெரிக்காவில் சாதாரண வசதியிருக்கிறவங்க வாங்கி கட்டிப்பாங்களாம். அந்த ஊர்லே ஏழைன்னா, நம்ம ஊர்லே நடுத்தரமான மனிசன். அவ்வளவுதான்."
தேவுடு சிரித்தார்.

"அப்ப ஒண்ணுமே செய்ய முடியாது?"

"முடியாது. யாராவது சிநேகிதங்க ஹாங்காங் போனா அனுப்பிச்சுப் பாருங்களேன்" என்று அடுத்த ஆளைக் கவனிக்கத் தொடங்கினான் அவன். அவன் இத்தனை நேரம் முகம் கொடுத்ததே பெரிது.
‘ஹாங்காங் யார் போகப் போகிறார்கள்? தொலைஞ்சுது நூத்தம்பது ரூபா. இன்னமே சுண்ணாம்புக் காண்டான்தான்.’

தேவுடு வெளியே வந்து நடைபாதையில் மாட்டிக் கொண்டார். இப்பொழுது கூட்டம் கி.பி.2100-ஆகவே வளர்ந்துவிட்டது. கீழே இறங்கினார். வீதிமத்தி சிமிண்டு வகிட்டில் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். வயிறு குழைகிற தூக்கம். அந்த மாதிரி பல தூக்கங்கள்.
‘இந்த கடிகாரம் ஓடாவிட்டால் என்ன மோசம் போய் விட்டது?’ தேவுடுக்கு இந்தக் கேள்வி எழுந்தபோது அவருக்கு வியப்புத் தாளவில்லை. ஒரு பெரிய வெளிச்சம் உள்ளுக்குள்ளே அடித்தாற் போல் ஒரு பரவசம். உடம்பு முழுவதும் அது ஓடுகிறாற் போலிருந்தது. இப்படி பரவசம் வரும்போது அவருக்குக் கழிவிடத்திற்குப் போக வேண்டும் போலிருக்கும். சிரமப்பட்டு நினைவை அதிலிருந்து அகற்றி வெளிச்சத்தை மட்டும் நினைத்து நிறைந்து கொண்டு நடந்தார்.

"மணி என்ன பாவ்ஜி?" என்று ஒரு குரல் வந்தது. ஒரு சீப்புக் கடைக்குப் பக்கத்தில் சற்றுத் தள்ளினாற் போல முட்டி போட்ட ஒரு ஆள்தான் கேட்டான். பக்கத்தில் ஒரு தடி, ஒரு காலி வனஸ்பதித் தகரக் குவளை. கிழவன், ஒரு கண் இல்லை.

"ஏழே கால்" என்று குத்துமதிப்பாகச் சொல்லி வைத்தார் தேவுடு.

"மணி தெரிஞ்சு என்ன பண்ணப் போறே?"

"எட்டு மணிக்கு சப்பாத்தி கொடுப்பாங்க அனுமான் மந்திர்லே, அதுக்குத்தான்."

"அப்படியா! இந்தக் கடிகாரத்தை வச்சுக்கோயேன். மணி பார்த்து பிச்சை கேட்கலாம்" என்று ரைனாசரஸை உருவி நீட்டினார் தேவுடு.

"பைசா கொடுங்க சாமி, இது என்னாத்துக்கு?"

"வைச்சுக்கோ பரவால்லே."

"பாவ்ஜி! என்ன நினைச்சுட்டீங்க; போலீஸ்காரன் பிடிச்சு, கொட்டிலே போட்டுச் சாக அடிச்சிரலாம்னு பார்க்கிறீங்களா!"

பக்கத்திலிருந்த ஒரு பொம்பளைப் பிச்சைக்காரி சிரித்தாள். "போலீஸ்காரன் அடிச்சு செத்தா என்னவாம்! லாவாஜிக்கு ஒரு சப்பாத்தி மிச்சம் தினமும்."

"நீ சும்மா இரேண்டி" என்று சிரித்துக் கொண்டே கம்பைத் தூக்கி அவள் பக்கம் ஓங்கினான் கிழவன்.
ரைனாசரஸை மீண்டும் மணிக்கட்டில் மாட்டிக் கொண்டு நடந்தார் அவர். பைசா கொடுக்க மறந்து விட்டது.

"இந்தக் கடிகாரத்தைப் பழுது பார்ப்பது முக்கியம் இல்லை" என்று மார்க்ஸ், ப்ராய்டு, ஜிட்டு, மகாத்மா காந்தி எல்லாரும் அவர் காதில் உபதேசம் செய்து கொண்டு வந்தார்கள்.

ஹாங்காங்குக்கு யாராவது சிநேகிதன், அல்லது சிநேகிதனுக்கு சிநேகிதன் எப்போதாவது போகாமலிருக்க மாட்டான் என்று அந்த உபதேசங்களுக்கிடையே அவர் குரலும் கேட்டுக் கொண்டிருந்தது. போகிற வழியில் மறுபடியும் சுத்த தேசி நெய் ஜிலேபிக் கடைக் கும்பலில் பிதுங்கினார் தேவுடு. மனைவி மீதும் அவருக்கு மனிதாபிமானம். இந்தச் சாயங்காலத்தைப் பற்றி அவளுக்குச் சொன்னால், இரவு மூன்று மணி வரை பேசுவாள் – பெண் மொழியும் பொன் மொழியுமாக.

–தருணம் 09 – கோபிகிருஷ்ணன். அடுத்த இதழில்…

About The Author