பாரதியாரின் பகவத் கீதை

"இல்லற மல்லது நல்லறமில்ல"என்றார் தாயுமானஸ்வாமி., தாம் உயர்ந்த துறவு பூண்டிருந்த போதிலும், இதனைப் பின்வரும் பாடலில் அங்கீகாரம் செய்கிறார். அதாவது, முற்றிலும் அங்கீகாரம் புரியவில்லை. துறவறத்தைக் காட்டிலும் இல்லறமே சிறந்ததென்று அவர் தெளிவுபடவும் உரைத்துவிடவில்லை.

முக்திக்கு இரண்டும் சமசாதனங்கள் என்கிறார். அவர் சொல்லுகிறார்:-

"மத்த மதகரி முகிற்குல மென்ன நின்றிலகு
வாயிலுடன் மதி யகடுதோய்
மாடகூடச் சிகர மொய்த்த சந்திரகாந்த
மணிமேடை யுச்சிமீது
முத்தமிழ் முழக்கமுடன் முத்து நகையார்களொடு
முத்து முத்தாய்க் குலாவி
மோகத் திருந்து மென்? யோகத்தினிலைநின்று
மூச்சைப் பிடித் தடக்கிக்
கைத்தல நகைப்படை விரித்த புலி சிங்க மொடு
கரடி ̧நுழை நூழை கொண்ட
கான மலை யுச்சியிற் குகை யூடிருந்து மென்?
கர தலாமலக மென்ன
சத்த மற மோன நிலை பெற்றவர்களுய்வர்காண்!
ஜனகாதி துணிவி தன்றோ?
சர்வபரிபூரண அகண்டதத்துவமான
சச்சிதானந்த சிவமே!"

இதன் பொருள் யாதெனில்,

"மதமேறிய யானைகள் மேகக் கூட்டங்களைப் போல் மலிந்து நிற்கும் வயல்களையுடைய அரண்மனையில், சந்திரனை அளாவுவன போன்ற உயரமுடைய மாடங்களும் கூடங்களும் சிகரங்களும் சூழ்ந்திருப்ப, அவற்றிடையே நிலா விளையாட்டுக்காகச் சமைக்கப்பட்டிருக்கும் சந்திரகாந்த மேடைகளின் மேலே இனிய தமிழ்ப் பேச்சுக்கும் இனிய தமிழ்ப் பாட்டுக்கும் நாட்டியங்களுக்குமிடையே முத்தாக உரையாடி முத்தமிட்டு முத்தமிட்டுக் குலாவிக் காதல் நெறியில் இன்புற்றிருந்தாலென்ன? அஃதன்றி, யோகவாழ்விலே சென்று மூச்சை அடக்கிக்கொண்டு, ஆயுதங்களைப்போல் வலிய நகங்களையுடைய புலி, சிங்கம், கரடி முதலியன பதுங்கிக் கிடக்கும் பொந்துகளுடைய காட்டு மலையுச்சியில் தாமொரு பொந்தில் இருந்தாலென்ன? உள்ளங்கை நெல்லிக்கனிபோல விளங்குவதோர் உண்மை கூறுகின்றோம். ‘‘சலனமின்றி மனத்திலே சாந்தநிலை பெற்றோர் உய்வார்’’ இஃதன்றோ ஜனகன் முதலியோரின் முடிவானது? எங்கும் நிறைவற்றதாய்ப் பிரிக்கப்படாத மூலப்பொருளே! அறிவும், உண்மையும், மகிழ்ச்சியும் ஆகிய கடவுளே!?"

இங்ஙனம், இல்லறத்தைப் பந்தத்துக்கு அதாவது, தீராத துக்கத்துக்குக் காரணமென்றும், துறவறம் ஒன்றே மோக்ஷத்துக்குச் சாதனமென்றும் கூறும் வேறு சில துறவிகளைப்போலே சொல்லாமல், இரண்டும் ஒருங்கே மோக்ஷத்துக்குச் சமமான சாதனங்கள் என்று சொல்லியதே நமக்குப் பெரிய அறிவுரையாகும்.

சம்சார சுகங்கள்கூடத் துன்பங்களுக்கே வழிகாட்டுகின்றனவென்றும், ஆகவே எல்லா வகையினும் இகலோக வாழ்க்கைத் துன்பத்தைத் தவிர வேறில்லையென்றும் சொல்லிச் சில பிற்காலத்துத் துறவிகள், "வீட்டையும் பெண், ́ பிள்ளைகளையும் துறந்து விட்ட மாத்திரத்திலேயே ஒருவன் இகலோக வாழ்வைத் துறந்துவிட்டானாகிறான்" என்ற பிழைக் கருத்து கொண்டவர்களாய், ஊர்தோறும் சுற்றிக்கொண்டு, வீடு, வாயில், சுற்றம், துணை, இனம் ஏதும் இல்லாதவர்களாய், பிச்சையெடுத்து வயிறு வளர்க்கிறார்கள். இக் கூட்டத்தாரின் வாழ்க்கை மகாபரிதாபமானது. இந்தக் கூட்டத்தாரில் இடையிடையே சிற்சில இடங்களில் சிற்சில மகான்கள் அளவற்ற பக்தியுடையோராகவும், வரம்பற்ற ஜீவ காருண்யம் உடையோராகவும் தோன்றுகிறார்கள்.
மற்றும் அவர்களில் பெரும்பான்மையோருக்கு ஒரு விதமான முக்தித் தேக்கம் இருக்கத்தான் செய்கிறது. எனினும், இவர்களில் மிகப்பெரிய மகான்கள்கூட, உலகத்தில் மானுடர் எய்தற்குரியதாகிய பரிபூரண வாழ்க்கை வாழ்ந்தனர் எனக் கூறத்தகாது. வேதகாலத்தில் இந்தத் துறவு வழி ஹிந்துக்களுக்குள்ளே கிடையாது. வேதகாலத்தில், சந்நியாசம் நமக்குள்ளே இருப்பதாக சுவாமி விவேகானந்தர் சொல்லியிருக்கிறார்.

வசிஷ்டர், வாமதேவர் முதலிய வேதரிஷிகள் அத்தனை பேரும் மணம் புரிந்துகொண்டு, மனைவி மக்களுடனேயே இன்புற்று வாழ்ந்தனர். புலன்களை அடக்கியாளும் பொருட்டாக, அக்காலத்து ரிஷிகள் பிரம்மசாரிகளாக இருந்து நெடுங்காலம் பலவகைக் கொடிய தவங்கள் செய்ததுண்டு. ஆனால், குறிப்பிட்ட காலம் வரை தவங்கள் செய்து முடித்துப் பின்பு இல்வாழ்க்கையுட் புகுதலே மகரிஷிகளுக்குள்ள வழக்கமாக நடைபெற்று வந்தது.

–தொடரும்….

About The Author