மனிதரில் எத்தனை நிறங்கள்! (29)

எதையும் எவரும் தவறாகப் புரிந்து கொண்டும் விடலாம்; தவறாக ஆக்கியும் விடலாம்.

– ஜெயகாந்தன்

மூர்த்தி ஆகாஷின் அறைக்குள் நுழைந்த போது ஆகாஷ் அவனை ஆச்சரியத்துடன் பார்த்தான். சிறு வயதில் இருந்தே மூர்த்தியும் அந்த வீட்டில் வாழ்ந்து வருகிறான் என்றாலும் மூர்த்தி என்றுமே அவனுடனோ பார்த்திபனுடனோ சேர்ந்ததில்லை. ஆகாஷும், பார்த்திபனும் சேர்ந்து விளையாடிக் கொண்டு இருக்கையில் மூர்த்தி தூர நின்று அவர்களை ஒரு மாதிரியாகப் பார்த்தபடி இருப்பான். ஆரம்பத்தில் சில முறை சேர்ந்து விளையாட அழைப்பு விடுத்த ஆகாஷும் பார்த்திபனும் பிறகு அழைப்பதை விட்டு விட்டார்கள். அப்படி அவனுடைய அந்த விலகி நிற்கும் போக்கு நிகழ்காலம் வரை தொடர்ந்து வருகையில் அவனது திடீர் பிரவேசம் ஆகாஷைத் திகைப்பில் ஆழ்த்தியது. என்ன” என்பது போல அவனைப் பார்த்தான்.

“ஆர்த்தியோட அம்மா கொலை செய்யப்பட்டிருக்காங்கன்னு ஆர்த்தி, அவங்க பாட்டி தாத்தா நம்பறாங்க” என்று மூர்த்தி சொன்னான்.

ஆகாஷ் திகைத்துப் போனான். “உன் கிட்ட யார் சொன்னாங்க”

“அவங்க மூணு பேரும் தான். இப்ப தான் என் பாட்டி கிட்ட சொல்லிகிட்டு இருந்தாங்க”

ஆகாஷிற்கு பஞ்சவர்ணத்தை என்றுமே பிடித்ததில்லை. அந்தக் கிழவி ஒரு காலத்தில் அந்த வீட்டின் நிர்வாகத்தைத் தன் கையில் எடுக்கப் பெரும் முயற்சி மேற்கொண்டு செய்த அட்டகாசங்கள் அவன் மனதில் சிறு வயதிலேயே அவள் மீது வெறுப்பை ஏற்படுத்தி இருந்தன. அதெல்லாம் சிவகாமி முன் செல்லுபடியாகாததால் ஏற்பட்ட கோபத்தில் தன் அறையில் போய் பதுங்கி வாழும் பஞ்சவர்ணத்தை மூர்த்தி பவானி தவிர இப்போதெல்லாம் யாரும் அணுகுவதில்லை. ஆனால் திடீர் என்று இன்று ஆர்த்தி தன் தாத்தா பாட்டியுடன் சென்று அவளுடன் பேசிக் கொண்டு இருந்த தகவலை ஆகாஷ் ரசிக்கவில்லை.

மூர்த்தி ஆனந்தமாக ஆகாஷிடம் சொன்னான். “உங்கம்மா தான் அவங்கம்மாவைக் கொன்னுட்டதாய் அவங்க சந்தேகப்படறாங்க.”

அதிர்ந்து போன ஆகாஷ் தன் இதயத்தில் தீயால் தகிக்கும் ஈட்டியைச் சொருகியது போல் உணர்ந்தான். அவன் முகத்தில் அந்த வலி ஒரு கணம் பெரிதும் வெளிப்பட்டது. ஆனால் சந்தோஷமாகத் தன் வேதனையை இரு விழிகள் ரசிப்பதை உணர்ந்தவுடன் அவன் முகம் அலட்சியம் என்ற திரையைப் போட்டுக் கொண்டது. “சரி, உன் பாட்டி எப்ப போலீஸ் டிபார்ட்மென்டில் சேர்ந்தாங்க?”

மூர்த்திக்கு அவன் கேள்வி விளங்கவில்லை. ஆகாஷ் அமைதியாக விளக்கினான். “கொலை சம்பந்தப்பட்ட புகார் எல்லாம் போலீசுக்குப் போய் தான் கொடுப்பாங்க. உன் பாட்டி கிட்ட பிரத்தியேகமாய் வந்து கொடுத்திருக்காங்களே அதனால் தான் உன் பாட்டி போலீஸ்ல சேர்ந்துட்டாங்களான்னு கேட்டேன்”

மூர்த்தி அவனுடைய சுயக் கட்டுப்பாட்டை மெச்சினான். சிவகாமியிடம் அவள் மகன் நிறைய கற்று வைத்திருந்தான். “போலீஸ் கிட்ட தான் சொல்லணும்னு இல்லை. பிடிச்சவங்க கிட்டயும் சொல்லலாம்”

“அது சரி. நீ இங்கே ஏன் வந்து சொல்கிறாய். என் கிட்டே சொல்லச் சொல்லி உன்னை அவங்க அனுப்பிச்சாங்களா” என்று புன்னகையுடன் ஆகாஷ் கேட்டான்.

மூர்த்தி அமைதியாகச் சொன்னான். “இல்லை. நானாக தான் சொல்ல வந்தேன். கேட்டு எனக்கே அதிர்ச்சியாயிடுச்சு.”

“ரொம்பவும் அதிர்ச்சியாயிடாதே. இதயத்துக்கு அது நல்லதல்ல. இனி நீ போகலாம்”

மூர்த்திக்கு முழு திருப்தி ஏற்படவில்லை என்றாலும் ஆரம்பத்தில் தகவலைச் சொன்னவுடன் ஆகாஷ் முகத்தில் தெரிந்த அந்த வேதனை தந்த திருப்தியுடன் கிளம்பினான். அன்று ஆபிசுக்குப் போக வேண்டி இருக்காவிட்டால் இனி ஆகாஷ் என்னவெல்லாம் செய்கிறான் என்று வேவு பார்த்திருப்பான். போய் பாட்டியிடம் நடந்ததை விவரமாகத் தெரிவித்தான்.

பஞ்சவர்ணம் ஆகாஷின் கிண்டலைக் கேட்டு கொதித்துப் போனாள். “நான் போலீஸ் டிபார்ட்மெண்டில் இருந்திருந்தா அவங்கம்மா இன்னேரம் ஜெயில்ல கம்பி எண்ணிகிட்டு இருந்திருப்பா”. மூர்த்தி போய் நிறைய நேரம் ஆன பின்னும் அவளுக்குத் தன் கோபத்தை அடக்கக் கஷ்டமாக இருந்தது. ஆனால் இத்தனை நாட்கள் தன் பக்கம் திரும்பிப் பார்க்காமல் இருந்த அதிர்ஷ்டம் ஆர்த்தி வடிவில் வந்து விட்டதால் இனி இவர்களை என்ன விலை என்று கேட்கும் நாட்கள் வெகுதூரத்தில் இல்லை என்கிற எண்ணம் சிறிது சிறிதாக அவள் கோபத்தைத் தணித்தது.

 ஆகாஷால் இன்னும் நடந்ததை ஜீரணிக்க முடியவில்லை. கடந்த அரை மணி நேரம் நடந்ததெல்லாம் கனவாக இருந்தால் பரவாயில்லை என்று தோன்றியது. அவன் தன் தாயை உயிருக்கு உயிராக நேசித்தான். அவன் அவளை மதிக்கும் அளவு வேறொரு மனிதரை மதித்ததில்லை என்பதும் உண்மை. அப்படிப்பட்ட அவன் தாய் மீது அவன் காதலிக்க ஆரம்பித்திருக்கும் ஒரு பெண் கொலைக் குற்றம் சாட்டுகிறாள் என்பதை அவனால் சிறிதும் சகிக்க முடியவில்லை. ஒரு கணம் மூர்த்தி சொன்னதெல்லாம் பொய்யாய் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் உண்மையா என்று நேரடியாகக் கேட்க ஆர்த்தி அருகிலேயே இருக்கையில் மூர்த்தி அந்த அளவு பொய் சொல்லத் துணிய மாட்டான் என்று அவன் அறிவு சொல்லியது.

எதற்கும் அவளிடம் நேரடியாகவே கேட்டு விடலாம் என்று தீர்மானித்தவன் ஆர்த்தியின் அறைக்குப் போனான்.

ஆகாஷைப் பார்த்தவுடன் ஆர்த்தியின் முகம் மலர்ந்தது. எந்த மனநிலையில் இருந்தாலும் அவனைப் பார்த்தவுடன் தன் மனம் ஏன் இப்படி சந்தோஷத்தால் நிறைந்து விடுகிறது என்று அவளுக்குத் தெரியவில்லை. “ஹாய்” என்றாள்.

ஆகாஷ் ஒன்றும் சொல்லாமல் அவளை ஆழமாகப் பார்த்தான். அவன் முகத்தில் சிரிப்பு துளியும் இல்லை. அவன் முகபாவனையும், அவன் பார்த்த விதமும் அபாய அறிகுறிகளாக அவளுக்குப் பட்டது.

“உட்காருங்க”

அவன் உட்காரவில்லை. “உங்கம்மா மரணத்தில் உங்களுக்கு எல்லாம் சந்தேகம் இருக்குன்னு கேள்விப்பட்டேன். நீங்க எங்கம்மா தான் கொலை செய்ததாய் சந்தேகப்பட்டு சொன்னதாயும் கேள்விப்பட்டேன். உண்மையா?”

ஒரு வினாடியில் ஆர்த்தியின் முகம் வெளுத்தது. இதயத் துடிப்புகள் சம்மட்டி அடிகளாயின. உடல் எல்லாம் வியர்க்க ஆர்த்தி ஆகாஷைப் பரிதாபமாகப் பார்த்தாள். அவனுடைய கூரிய பார்வை அவள் முகத்தை விட்டு விலகவில்லை. அவள் குரல் பலமிழந்தது. பலவீனமாய் சொன்னாள். “நான் அப்படி சொல்லலை”

“சொல்லலை சரி. ஆனா யார் சொல்லி இருந்தாலும் உன் மனசில் எங்கம்மா மேல் சந்தேகம் இருக்கு. இல்லையா”

அவன் வார்த்தைகள் ஈட்டிகளாய் வந்தன. அவள் நிலைகுலைந்து போனாள். அவன் விடுவதாக இல்லை. “சொல்லு. சந்தேகம் இருக்கா இல்லையா?”

பஞ்சவர்ணம் அவளிடம் சிவகாமி தான் ஆனந்தியைக் கொன்றாள் என்று பலரும் சொன்னதாய் சொன்னதும், சிவகாமி அந்த அறையில் இருந்து எதையோ அப்புறப்படுத்தியதைத் தன் கண்ணால் கண்டதாய் சொன்னதும் உண்மையில் ஆர்த்தி மனதில் சந்தேக விதைகளை விதைத்திருந்தது. அதை ஆகாஷிடம் சொல்வது என்றென்றைக்குமாய் அவனை தன்னிடம் இருந்து பிரித்து விடும் என்று அறிவு அவளை எச்சரித்தது. ஆனால் பட்டவர்த்தனமாக பொய் பேசி அறியாத ஆர்த்தி தன்னையுமறியாமல் பரிதாபமாகத் தலை அசைத்தாள்.

ஒரு சின்ன தலையசைப்பு தன் இதயத்தை இப்படி சுக்கு நூறாகக் கிழித்து விடும் என்று முன்பு யாராவது சொல்லி இருந்தால் ஆகாஷ் சிரித்திருப்பான். ஆனால் இன்று அந்த வேதனையை அவனால் உணர முடிந்தது.

அதன் பிறகு அவன் அவளைப் பார்த்த பார்வையில் எந்த விதத்திலும் சம்பந்தமேயில்லாதது போல் அன்னியத்தனம் இருந்தது. இறுகிய முகத்துடன் அமைதியாகச் சொன்னான். “நான் என் அம்மா கிட்ட இதை சொல்லி உங்க சந்தேகத்தை உடனடியாக தீர்க்கச் சொல்கிறேன்.”

அந்தக் கணமே அவனை இழந்து விட்டதாக ஆர்த்தி உணர்ந்தாள். அவன் மேற்கொண்டு ஒரு வார்த்தை கூட அவளிடம் பேசாமல் அவள் அறையில் இருந்து வெளியேறினான்.

(தொடரும்)

About The Author