அனாடமிக் தெரபி (62)

குடிக்கும் நீரை மாற்றிக் குடித்தால் சளி பிடிக்கிறது, ஏன்?

ஓர் ஊரில் இருக்கும் தண்ணீரைக் குடித்தே பழக்கப்பட்ட நமக்கு அடுத்த ஊர்த் தண்ணீர் குடிக்கும்பொழுது சளி பிடிக்கிறது. சிலர் கொதிக்க வைத்த தண்ணீரையே குடித்துப் பழகி வருவார்கள். திடீரெனக் கொதிக்க வைக்காத தண்ணீரைக் குடிக்கும்பொழுது அவர்களுக்குச் சளி பிடிக்கும். இப்படி நாம் குடிக்கும் நீரை மாற்றிக் குடிக்கும்போதெல்லாம் சளி பிடிக்கிறது. இதன் காரணம் என்ன?

கொதிக்க வைத்த தண்ணீரில் எந்தத் தாதுப் பொருளும் இல்லை. அதைப் பல ஆண்டுகளாகக் குடித்து வரும்பொழுது இரத்தத்தில் பல தாதுப் பொருட்கள் இல்லாமல் உடல் நோய்வாய்ப்பட்டிருக்கும். ஒரு நாள் திடீரெனக் கொதிக்க வைக்காத தண்ணீரைக் குடிக்கும்பொழுது அதில் இருக்கும் பல விதமான தாதுப்பொருட்களையும், சத்துப் பொருட்களையும் சிறுநீரகம் எடுத்து இரத்தத்தில் கலந்து விடும். பல ஆண்டுகளாக இல்லாமல் திடீரெனச் சில நல்ல பொருட்கள் இரத்தத்திற்குள் நுழைந்தவுடன், பல ஆண்டுகளாக நீக்க வேண்டிய கழிவுகளை இந்தத் தாதுப் பொருட்களை வைத்து நமது உடல் வெளியேற்ற ஆரம்பிக்கிறது. அது சளி வழியாகவோ, காய்ச்சல் வழியாகவோ, மலமாகவோ வெளியேறும். இதை நாம் நோய் என்று பயந்து விடுகிறோம்.

நம் உடலில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் ஐந்து காரணங்கள் இருப்பதாகப் பார்த்தோம். இந்த ஐந்து விஷயங்களும் ஒருவர் உடலில் சரியாக இருக்கின்றனவா, இல்லையா என்பதைக் கண்டுபிடிப்பதற்கு ஓர் எளிய சோதனை உண்டு. மாற்றி மாற்றி எந்த ஊர்த் தண்ணீரைக் குடித்தாலும் யாருக்குச் சளியும் பிடிக்காமல் காய்ச்சலும் வராமல் எந்த வித உபாதையும் இல்லாமல் இருக்கிறதோ அவருக்கு உடலில் அந்த ஐந்து விஷயங்களும் சரியாக இருக்கின்றன என அர்த்தம். தண்ணீரை மாற்றிக் குடித்தால் காய்ச்சல், சளி பிடிக்கிறது என்றால் அவர் உடலில் பல நோய்கள் உள்ளன; அவற்றைக் குணப்படுத்தத் தேவையான தாதுப்பொருட்கள் இல்லாமல் உடல் இத்தனை ஆண்டுகளாகக் காத்துக் கொண்டிருந்திருக்கிறது என்று பொருள்.
உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கிறதா இல்லையா என்பதை அறிய இரத்தப் பரிசோதனை, ஸ்கேன் போன்றவை தேவையில்லை. வெறும் தண்ணீரே போதும்!

எனவே, தயவு செய்து இன்று முதல் சாதாரணக் குழாய்த் தண்ணீரை இயற்கை முறையில் சுத்திகரித்துக் குடிக்க ஆரம்பியுங்கள். இப்படித் திடீரென சாதாரண தண்ணீரைக் குடிப்பதால் கண்டிப்பாக முதல் பத்து நாட்களுக்கு உங்களுக்குச் சளி பிடிக்கும், காய்ச்சல் வரும். ஆனால், பயப்பட வேண்டாம்! அந்தச் சளியைச் சிந்திவிட்டு, காய்ச்சல் வரும்பொழுது என்ன செய்ய வேண்டும் என இந்தத் தொடரில் கூறியதைப் படித்து விட்டு அதன்படி நடந்து கொண்டால் இனி உங்கள் வாழ்க்கையில் எந்தத் தண்ணீரைக் குடித்தாலும் உங்களுக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது!

நான் 1992 முதல் இன்று வரை (2012) குழாய்த் தண்ணீரை மட்டுமே குடித்து வருகிறேன். எனக்கு எந்தச் சளியும், எந்தக் காய்ச்சலும் வருவதில்லை. இப்படி யார் குழாய்த் தண்ணீரை மட்டுமே குடித்து வாழ்கிறீர்களோ உங்களுக்கு, உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மெட்ராஸ் ஐ வரும்போதும் உங்களுக்கு வராது. சிக்கன் குனியா, மட்டன் குனியா போன்ற காய்ச்சல்கள் ஊரில் உள்ள அனைவருக்கும் வந்தாலும் உங்களுக்கு மட்டும் வராது. உலகத்திலேயே மிகச் சிறந்த தடுப்பூசி குழாய்த் தண்ணீர்தான்.

குழாய்த் தண்ணீரை எப்படிக் குடிப்பது, தொட்டி சுத்தமாக இல்லையே என்று பலர் கேட்கிறார்கள். தொட்டியை சுத்தம் செய்ய வேண்டியது உங்களது வேலை. வாட்டர் பில்டர் வாங்குவதற்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்யும் நீங்கள் தொட்டியை சுத்தம் செய்ய ஐம்பது ரூபாய் அல்லது நூறு ரூபாய் செலவு செய்தால் போதுமே!

சிலர், குழாய்களில் இரும்புத் துகள்கள் உள்ளன, தூசு உள்ளது, அவற்றால் நோய் வரும் என்று பயப்படுகிறார்கள். குழாயில் உள்ள எந்தத் தூசாலும், கிருமியாலும் நமக்கு நோய் வரவே வராது. அப்படி ஒரு வேளை உங்களுக்கு பயமாக இருந்தால் வீட்டில் உள்ள எல்லாக் குழாய்களையும் ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிதாக மாற்றி விடுங்கள். இதற்குப் பத்தாயிரம் ரூபாய் வரை செலவு ஆகலாம். தயவு செய்து பணத்தை வங்கிகளில் சேமிப்பதையும், நகைகளில் செலவு செய்வதையும் விட்டு விட்டு ஆரோக்கியத்திற்காகச் செலவு செய்யுங்கள்!

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

–அடுத்த அமர்வில் சந்திப்போம்…

About The Author