ஆழ்வார்களும் நாயன்மார்களும் (4)

சுந்தரமூர்த்தியின் காதிலும் அந்தச் சேதி வந்தது. கொஞ்சம் படபடப்பாய்த்தான் இருந்தது. என்றாலும் மேலடி அடித்தார். இதுல என்னவோ அதிசயத்தைக் கண்டாப்போல சொல்ல வந்திட்டீராக்கும்?… எனத் தண்டபாணியை எகிறினார். உம்மை ஒரு மனுசனா மதிச்சிச் சொன்னேன் பாரும், என் புத்திய… என்று நிறுத்துமுன், உமக்கு புத்தின்னு ஒண்ணு இருக்குதாவே?… என மறுபடியும் எகிறினார் சுந்தரமூர்த்தி.

வேதவல்லிக்குப் போய் மருமகளைப் பார்த்துவர ஆசை. பரவால்ல, தனக்குதான் கொடுப்பினை இல்லை. மகன் அவளை நிறைய சினிமாக்களுக்கு அழைத்துப் போகிறான். மாமனாருக்குத் தெரியாமல் மாமியாரை வந்து பார்க்கிறாப்போல கதையமைப்பில் எதும் படம் அவள் பார்க்கக் கூடாதா, என்றிருந்தது. கல்யாணம் ஆனதும் அவளை அவன் வேலைக்கு அனுப்புவதில்லை. அவளால் களத்து மேட்டில் வயல்களில் என்று மருமகளைப் பார்க்கவும் வாய்ப்பு இல்லாமல் ஆச்சு. போதாததற்கு வீட்டைவிட்டு இந்தாள் வெளியே இறங்குவதே இல்லை. இவள் வெளியே போனால் எங்க போற, ஏன் போற… என்று ஆயிரங் கேள்வி. அவருக்குத் தெரியாமல் அவள் பாத்ரூம்புக்குக் கூட போக முடியாது. எப்பவாவது அவர் கோவில் என்று கிளம்பினால் பக்கத்து வீடு எதிர்வீடு அம்மாக்களுடன், இவள் இந்த வீட்டு வாசலில், அவள் அந்த வீட்டு வாசலில் என்று உட்கார்ந்து சினிமாக் கதை பேசுதல், பேன் பார்த்தல்… என அவள் பொழுது ஓடியது.

அட அந்த எழவெடுத்த எழிலின் கதையையே அவர் போஸ்டர் மூலமாய்த்தான் அறிந்துகொள்ள வேண்டியிருந்தது. அண்ணி சாமந்தி வளைகாப்புக்கு வருகை தரும் கலை இறைவன் ரசிகர் மன்ற இளவல்களே வருக வருக… என எவனோ வேண்டாத பயல் குளத்தங்கரைப் பக்கம் கம்பு நட்டு தட்டி வைத்திருந்தான். வர வர எதற்கு விளம்பரம் பண்ணுவது என்றே விவஸ்தை கெட்டுப் போனார்கள். இது குளத்தங்கரை. இங்க அவனவன் எதுக்கு வரான்? கால் கழுவ வரான். வெளிக்கி அவர்களே வருக வருக…ன்னு போஸ்டர் வைங்கடா… என நினைத்தபடி மீண்டும் ஒருமுறை நின்று அந்த வினைல் போர்டைப் பார்த்தார். கன்னத்தில் சந்தனத்துடன் சாமந்தியின் அந்தச் சிரிப்பு. கூட கோட் சூட்டுடன் அவன். ஏல எருமைமாடு, நாலெழுத்து படிக்கத் துப்பு இல்லாவிட்டாலும், உடையுடுத்தறதுல குறைச்சல் இல்லை. தூவெனக் காறித் துப்பிவிட்டு வந்தார்.

குடத்தில் தண்ணீர் சேந்தி வருகிறேன் என்று வேதவல்லியும் போய் அந்த போர்டைப் பார்த்துவிடடு வந்தாள். பிள்ளையையும் மருமகளையும் படத்தில் பார்த்ததும் அவளுக்கு அழுகை வந்தது. கூட தனலெட்சுமி. அவளைக் கட்டிக்கொண்டு அழுதாள். ஒரு நடை போயி அவங்களைப் பார்க்க விடாமல் எங்க வீட்டு ஆம்பளை. இதை வெச்சிக்கிட்டு என்ன பண்ண முடியும் நான்… தனலெட்சுமி அவளை ஆறுதலாய்க் கட்டிக்கொண்டாள். நாளைக்குப் புதுப்படம், உன்னை விட மாட்டேன், வருது. அதுக்கு அவங்க வந்தாலும் வருவாங்க, என்றாள். படத்துக்குப் போனால் அவர்களைப் பார்க்கலாம். இந்த மனுசன் இவள் வெளியே கிளம்பவே விடமாட்டார். ஏட்டி தனா, மருமகளுக்கு வாய்க்கு ருசியா எதும் வாங்கிக் குடுக்கக் கூட முடியாமல் இந்தாளு என் கொதவளையை நெரிச்சிக்கிடக்காரு… நான் பணியாரம் சுட்டுத் தர்றேன். போய் நாளை அவகிட்ட குடு, என்றாள் வேதவல்லி.

படத்துக்கு அன்றைக்கு எழிலும், சாமந்தியும் வராமல் பூராப் பணியாரத்தையும் தனலெட்சுமியே இடைவேளையில் தின்றாள்.

ஏழெட்டு கிராமத்துக்குப் பொதுவாய்ப் பெரிய ஆஸ்பத்திரி முந்திரிவிளையில்தான் இருந்தது. தனலெட்சுமியின் மாமியார் அங்கேதான் செத்துப் போனது. நாலு நாளாய் அவளைப் பார்க்காமல், சினிமாக்கதை கேட்காமல் வேதவல்லிக்கு என்னமோ போலிருந்தது. இந்த மனுசர் உள்ளே படுத்திருந்தார். பொதுவாக அவர் வீட்டில் இருந்தால், தனலெட்சுமி பார்த்துவிட்டு, நான் அப்பறம் வரேங்க்கா, என நழுவி விடுவாள். ஆனால் அவளுக்கு வேதவல்லியிடம் சொல்ல ஒரு அவசரச் சேதி இருந்தது.

"அடி வேதா, நல்ல சேதிடி. நீ பாட்டி ஆயிட்டே…"

திடுக்கென உள் அறையில் சுந்தரமூர்த்தி எழுந்து உட்கார்ந்தார். நான் தாத்தா ஆயிட்டேனா. "ஆகா, உன் வாய்க்குச் சர்க்கரை போட, என்ன குழந்தைடி…" எனக் கேட்க வந்த பாதகத்தி, சட்டெனக் குரலைத் தாழ்த்தினாள். "எங்க வீட்டு மனுசன், கோட்டான் உள்ள முழிச்சிக்கிட்டுக் கெடக்கு. அதுங் காதுல விழ வேண்டாம்…" என்றாள்.

என்ன குழந்தை தெரியவில்லை. அ, தெரிந்து ஆவதென்ன, என அலட்சியப்படுத்திப் பார்த்தால். உள்ளே வயிற்றுப் பக்கம் லேசாய்க் கிளுகிளுப்பு ஓடினாப்போல இருந்தது. அதெல்லாம் இல்ல, என நினைத்தார்.

மாலையில் அவர் கோவிலுக்குக் கிளம்பும்போது மெல்ல அவள் ஆரம்பித்தாள். "எய்யா ஒரு விஷயம் தெரியுமா?" – "எனக்கு ஒரு மயிரும் தெரிய வேண்டாம்" என்று கத்தினார். "ஆமா, எப்பதான் இந்தக் கோபத்தை விடப் போறீங்களோ? மயிரு உங்ககிட்டியே இருக்கே, அதான் வேண்டான்றீங்க…" என உள்ளே போய்விட்டாள். என்ன குழந்தை தெரியவில்லை. போன தடவை… அவள் முழுகாமல் இருந்த சேதியை அவரிடம் யார் சொன்னது? தண்டபாணிப் பிள்ளை. அவரிடம் சேதி இருக்குமா? என்றாலும் தானாகப் போய்க் கேட்க முடியாது. கோவிலுக்குப் போகும் வழியில் சத்தியப்பிரியனின் புதுப்பட வினைல் போர்டு எதும் இருக்கிறதா என்று பார்த்தார். கீழே… அறுபத்து மூவரில்… அதா நாலாவது. எலேய் அப்பனாயிட்டியா? இனிமேலாவது உனக்கு அப்பன் யாருன்னு தெரியட்டும்… என நினைத்துக் கொண்டார். தண்டபாணி ஏழுமணி வாக்கில் கோவில் பக்கம் தலைகாட்டுவது வழக்கம். காத்திராத பாவனையில் காத்திருந்தார்.

ரெண்டுநாளில் அவருக்கு ஒரு தபால் வந்தது. போஸ்ட் கார்டு. பார்த்தால் புதுக் கையெழுத்து. அவருக்கு யாரும் கடிதம் எழுதுவது இல்லை. வாசல்பக்கம் தபால்காரனைப் பார்த்ததும் எதும் துட்டி சேதி, தந்தி வந்திருக்குமோ என்று பதட்டப்பட்டு விட்டார். பார்த்தால் கார்டு. ஆச்சர்யம்!

வேதவல்லிக்கு எழுத படிக்கத் தெரியாது. புதுக் கையெழுத்து. அன்பான தாத்தா, என ஆரம்பித்தது கடிதம். என்ன இது, எனப் புருவந் தூக்கி வாசித்தார். வர்ற வெள்ளிக்கிழமை எனக்குப் பேர் வைக்கறாங்க. நீங்க உடனே பாட்டியுடன் புறப்பட்டு வரவும். இப்படிக்கு தங்கள் அன்புப் பேரன், சுந்தரமூர்த்தி.

-தொடரும்…

About The Author