இதுவொரு வயசு…!

பற்சக்கரங்களுக்கு இடையே கரும்பு நசுக்கப்பட்டு சாறு இறங்கி பாத்திரத்தில் வழிந்து கொண்டிருந்தது.

முத்துவுக்கு கை பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தது. குடித்து வைத்த கிளாஸ்களைக் கழுவுவதும், கேட்பவர்களுக்கு ஜக்கிலிருந்து ஊற்றிக் கொடுப்பதுமாக வேலையில் அழ்ந்திருந்தாள்.

மாணிக்கம் கல்லாவை விட்டு நகருவதில்லை. பணத்தை வாங்கிக்கொண்டு கூப்பன் கிழித்துத் தருவதோடு சரி. என்ன இருந்தாலும் கடை முதலாளியல்லவா?. வேலு, பனியனோடு நின்று கொண்டு கரும்புகளைத் திணிப்பதும். ஜஸ் பார் கரைந்ததும் வேறொன்றை எடுத்து வைப்பதும் அவன் வேலைகள். இடையே முத்துவை வம்பிழுப்பதும்தான்.

"அதென்ன முத்துன்னு ஆம்பளை பேரு போதாதற்கு இடதுகைப் பழக்கம்…?" என்றான் வேலைக்கு வந்த முதல் நாளே. முத்து பதில் பேசவில்லை. முதல் மாத சம்பளத்தை அவன்தான் மாணிக்கத்திடமிருந்து வாங்கி வைத்திருந்தான். முத்துவிடம் ரூபாய் நோட்டை எட்டாக, பதினாறாக மடித்து நீட்டினான். எதுவும் சொல்ல முடியவில்லை. வாங்கிக் கொண்டாள்.

கரும்பு வைக்கிற சாக்கில் வேண்டுமென்றே மேலே உரசுவான். இவள் முறைப்பதை லட்சியம் செய்ய மாட்டான். இடையில் மாணிக்கம் சாப்பாட்டிற்கு வீட்டுக்குச் சென்று விடும் நேரங்களில் வேலுவின் ராஜ்ஜியம்தான்.

"போ. டீ வாங்கியா."

"எ.. துக்கு?"

"நான் குடிக்கத்தான். ஸ்பெஷல் டீன்னு கேளு…"

வந்த புதிதில் முத்துவுக்கு இது வியப்பாக இருந்தது. அவனவன் வெயிலில் விறுவிறுத்து உள்ளே வந்து "ஜில்லுன்னு ரெண்டு ஜுஸ் குடுப்பா" என்று ஆர்டர் செய்ய. மாணிக்காமோ, வேலுவோ ஜூஸை ஒரு சொட்டுக்கூட சீந்துவதில்லை.

‘ போ… டீ வாங்கியா!’ தான்.

"என்ன முழிக்கிறே? கரும்புச்சாறு குடிக்காம டீக்கு அலையறானேன்னா? இந்த ஜுஸை மனுஷன் குடிப்பானா? ஹா.. ஹா.. ஹா.." என்று வேலு ஒரு தடவை பெரிதாகச் சிரித்தான்.

மாதம் நூற்றைம்பது ருபாய் என்பது முத்துவைப் பொறுத்தவரை மிகப் பெரிய தொகை. என்னென்னவோ செய்யலாம். இழக்க விரும்பவில்லை.

இதைப் புரிந்து வைத்திருப்பதாலோ என்னவோ சமீபமாய் வேலுவின் எல்லைகள் எல்லைகள் விஸ்தீரணம் அடைந்தன. குறிப்பாய் மாணிக்கம் இல்லாத நேரங்களில்.

"ஜஸ் கட்டியை எடுத்திட்டு… புல் ஜூஸா குடிக்கிறியா?"

"வேணாம்."

"அட… சும்மா குடிப்பியா…"

"வேணாம்."

சரி. ஜூஸ் வேணாம். என்னோட சினிமாவுக்கு வரியா… ரஜினி படம்…"

"வரலே."

"அட. என்ன புள்ளே. எதுலயும் ஆசை இல்லாம…"

முத்து மெளனமாய்க் கண்ணாடித் தம்ளர்களைக் கழுவி வைத்தாள்.

"உனக்கு என்ன வயசு இருக்கும்?"

இந்தக் கேள்வி இவனுக்கு அனாவசியம் போல வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்தாள் முத்து.
பக்கத்தில் வெப்ப மூச்சு பட்டது. திடுக்கிட்டுத் திரும்பினால் மிக அருகே நின்றிருந்தான் வேலு.

"உனக்கு எதுவுமே புரியாதா… இல்லே நடிக்கிறியா?"

முத்து சட்டென்று பலகையை உயர்த்தி வெளியே வந்து நின்றாள். அதே நேரம் யாரோ வர.. வேலுவும் அவளிடமிருந்து நகர்ந்து போய்விட்டான்.

முத்துவிற்கு கண் ஓரத்தில் நீர் கட்டிக் கொண்டது. கண்ணாடி போல மின்னியது.

வேலு இனி சும்மா இருக்க மாட்டன். அடுத்த சந்தர்ப்பத்திற்குக் காத்திருப்பான். ஒவ்வொரு முறையும் பயந்து செத்து… ச்சே… இது என்ன பிழைப்பு என்று தோன்றியது.

மாணிக்கத்திடம் புகார் சொல்ல தைரியம் வரவில்லை. மாணிக்கம் வேலுவிற்கு வேறு சில அந்தரங்க வேலைகளைக் கொடுத்திருப்பதைக் கவனித்திருக்கிறாள். எந்த இரு ஆடவரும் ஒத்துப் பொய் விடுவார்கள்அதுவும் இந்த விஷயம் அவர்கள் பார்வையில் மடிப்பு இல்லாதது.. அப்படியென்ன இழக்கப் போகிறாய்? என்று கேட்பார்கள்.

கடை மூடும்போது மணி எட்டரை. மாணிக்கம் கடை வாசலில் நின்றான். வேலு கொடுத்த சாவிக்கொத்தை வாங்கிக் கொண்டு தன் பங்கிற்கு பூட்டை இழுத்துப் பார்த்துத் திருப்தியானான்.

மொபெட் கிளம்பிப்போக வேலு அவளைப் பார்ப்பது புரிந்தது. நீண்ட நடை இருக்கிறது. கடை வீதி மிக நெரிசல். கூட வரப் போவதாக நிச்சியம் திட்டம் வைத்திருக்கிறான். கடை வீதியில் வம்பு செய்ய மாட்டான்.

பிறகு அவள் குடிசைக்குத் திரும்பும் வழி அத்தனை பாதுகாப்பு இல்லாதது? அதுவரை வந்து விட்டால்…

முத்து நடக்க ஆரம்பித்தாள். வேலு பின் தொடர்வது புரிந்தது. இன்று தீர்மானித்து விட்டான். படபடப்பு அதிகரிக்க கடை வீதியைக் கடந்து திரும்பினாள்.

வேலு அவளைப் பெயர் சொல்லி அழைப்பது கேட்டது,

"முத்து!"

"முத்து…!"

இன்னொரு குரலும். அவள் அப்பா, எதிரே நின்றார். வயசாளி. அழுதாள்.

"என்னாம்மா?"

"நான் சொனேன்ல. இவர்தான்…"

வேலு இந்த எதிர்பாராத நிகழ்ச்சியினால் திகைத்துப் போய் நின்றான்.

"தம்பி… நீதான் வேலுவா?

"ஆமா."

"எம்பொண்ணுதான். தாயில்லாதவ. இவ ஒருத்திக்காவத்தான் உசுரைக் கையில் புடிச்சுக்கிட்டுக் காத்திருக்கேன். உன்னைப் பார்த்தா… நல்ல மாதிரி… இவ மேல பிரியம் உள்ளவன் மாதிரி தெரியுது. நீயே இவளக் கட்டிக்க. உங்க வீட்டுக்கு நானே வரேன். சம்பந்தம் பேசறேன். என் பொறுப்பும் தீர்ந்துரும். என்ன சொல்றே?"

எளிமையாய், நிதானமாய்ப் பேசினார். வேலுவிற்கு வியர்த்தது. இரைச்சல் இல்லை. மிரட்டல் இல்லை. நேரடியாய் ஒரு வேண்டுகோள்.
.
"நான்… யோசிச்சு… சொல்றேன்…"

"சரிப்பா… நல்ல பதிலாச் சொல்லு. போயிட்டு வரியா? நீ வாம்மா."

அதே நிதானத்துடன் முத்துவை அழைத்துக் கொண்டு நடந்தார்.

தன் பிரச்னைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைத்துவிட்ட மாதிரி தோன்றியது முத்துவுக்கு..!

About The Author

2 Comments

  1. mukil dinakaran

    அருமையான கதை, யதார்த்தம் பாராட்டுகுரியது.

  2. param

    இதைதான் திருடனுக்குத் தேள் கொட்டியதைப் போல் என்பார்கள்.

Comments are closed.