உறைவு (2)

மாமா கைத்தொலைபேசியில் அழைத்து ”வந்திட்டே இருக்கேன். ஐயோ என்னாச்சி?” என்றான். ஒரு மரணத்தை விவரிப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை. மரணம் விவரிக்க ஏற்ற விஷயம் அல்ல. நீட்டிக்கப்பட்ட மரணம் ஆபாசமானது. அபத்தமானது. அது சாகும் மனிதனைக் கொச்சைப்படுத்தி விடுகிறது. அம்மா, வெல்டன், என்று…. ”நேர்ல வா மாமா” என்றாள். ”தனியா இருக்கே, பயமா இருக்கா?” என்று அவன் கேட்டபோது பதில் சொல்லாமல் தொடர்பைத் துண்டித்தாள்.

தனியாகவா இருக்கிறேன்? கலத்தல் என்பது ஓர் உணர்வு. அதேபோல தனிமை என்பதும் பாவனையேதான். பாவனையற்று உலகில் என்ன மிஞ்சும்? எதுவும் மிஞ்சுமா என்ன? தனியே இருக்கிறேன். இனிமேல் நான் தனிதான். அம்மா இல்லை. மாமாகூடப் போய் இருக்க முடியுமா? அப்படி யோசனையே என்னிடம் இல்லை. பயம்? பயம் அப்போது இருந்தது. இப்போது இல்லை.

அப்போதுதான் அந்த உணர்வு கிளர்ந்தது. நான் தனியே இல்லவே இல்லை. யாரோடுதான் நாம் பிணைக்கப்பட்டிருக்கிறோம். அது அம்மா அப்பா அண்ணன் தம்பி சித்தப்பா மாமன்… இப்படி உறவு தாண்டிய ஓர் உயிர்ப் பிணைப்பு. ஒருவேளை கற்பனை. ஆகா, பெரும் இயற்கையோடு, நியதிகளோடு பிணைப்பா இது? அம்மா சாவில் வேறு நினைவுகள் கிளறக் கிளற நான் நடந்துகொண்டிருக்கிறேன். இந்த வராந்தா இந்தப் பக்கம் பதினெட்டு தப்படி. அந்தப் பக்கம் தெரியவில்லை. திரும்பி பதினெட்டு தப்படி வைக்கிறேன்…

ஆம், இது பழகிவிடும். பழகிக்கொள்ளாமல் முடியாது, என்று குரல். தெளிவாகக் கேட்டது அந்தக் குரல்… அவள் அறிவாள். அந்தக் குரலுக்கு ஒரு வாசனை இருந்தது. குரலுக்கு வாசனை இருக்கிறதா என்ன? இல்லாமல்? வாசனை என்பது ஒரு ‘முன்பே அறிந்த’ நிலை. ஒருமுறை அந்த வாசனையை நுகர்ந்து விட்டால், பிறகு அதை மறப்பது என்பது இல்லை. பிறகு அந்த வாசனை கமழும் போதெல்லாம் அது அடையாளப்பட்டு விடும், துல்லியமாக. அந்தக் குரல், என்ன குரல் அது? மௌனம் பேசுமா? ஒருவேளை… ஆம் அதுவேதான். அந்த நபர், என்னுடன் கூடவே வரும் அந்த நபரின் குரல். பரிச்சயப்பட்ட பாவனை கொண்டாடும் குரல் தான் அது. எனக்கு அதை இப்போது நன்றாக அடையாளம் புரிகிறது.

யார் நீ?

நீயே சொல்…

நான் அறிந்தேன், என்றாள் நெஞ்சு நிமிர்த்தி. நீ காலம்… என்றாள். காலமே, நான் ஒரு கழைக் கூத்தாடி கம்பிமேல் நடக்கிறதைப்போல, உன்னில் பாதம் பதித்து நடக்கிறேன்.

நல்லது, என்றது காலம். நான் ஓடிக்கொண்டே யிருக்கிறேன். ஓடிக்கொண்டேயிருப்பது என் இயல்பு. நாய்ப் பிறவி நான். ஏன் ஓடுகிறேன் தெரியாது. ஏன் ஓடுகிறாய் என்று நாயிடம் கேட்டால் தெரியாது. அதனால் சும்மா இருக்க முடியாது.

ஆனால் நான் நிற்கிறேன். உன்னோடு நான் கூட வரவில்லை, என்றாள் மாதங்கி. நீ ஓடிக்கொண்டிருக்கிறாய். நான் உன்னோடு கூட வரவில்லை. என் அம்மா இறந்து விட்டாள். நான் அப்படியே நிற்கிறேன்…

இது ஒரு நிலை, என்றது காலம். பொருள்களுக்கு மூன்று பௌதிக நிலைகள் இருக்கிறது என்று புரிந்து கொண்டவர் தாமே நீங்கள்… மனிதர்கள்? இது ஆன்மிகத்தின் பௌதிக நிலை. திரவப்பொருள் ஒரு தட்பத்தில் உறைவு காண்கிறது. அதுபோன்ற நிலை இப்போது உனக்கு, என்றது காலம். நீ மீண்டும் உருகிக் கரைவாய். ஓடுவாய். இது நியதி என்று புன்னகைத்தது.

ஆம், சம்பவங்களின் முடிச்சுகள், தாமே இறுகி, கட்டுகள் தாமே அவிழவும் செய்கின்றன…. என்றாள் அவள். எல்லாமே பாவனைகள், ம்… சரிதான், என்று தலையாட்டினாள்.

மீண்டும் வேலைக்குப் போக ஆரம்பித்திருந்தாள். அம்மாவின் கண்ணி விடுபட்டதும், எப்படியோ தாமே வேறு கண்ணிகள் உற்பத்தியாகி பிணைப்பு கொண்டாடி விடுகின்றன. கொடிகள் சுருள் சுருளான தாவரக் கம்பிகளை நீட்டி, கிடைத்ததைப் பற்றிக் கொள்கின்றன.

மகா அலுப்பு கண்ட கணங்கள், அவையே மறு எல்லையைக் காட்டித் தருகின்றன. முடிவு என்பது இல்லை. முடிவு என்கிற நிலைக்கு மனம் வரும்போது புதிய வாசல்கள், கதவுகள் கண்ணில் படுகின்றன. அதுவரை அந்த வாசல்களை, கதவுகளை அறிந்தவர் எவரும் இலர். ஹா, சாகும்போது வாழ்க்கையின் வாசலும், வாழ்கையில் மரணத்தின் வாசலும் கண்ணில் படுகிற விந்தை. மனிதனுக்கும், ஒன்று இருக்கும்போது இல்லாததில் கவனம் போவது ஏன் தெரியவில்லை.

உறவினர் வீட்டுக்கு அம்மா போனால், மாதங்கி வரலையா, என்று கேட்பார்கள். மாதங்கி போனால் கட்டாயம் கேட்பார்கள். அம்மா வரலையா?

மறுகரையில் வாழ்கிறார்கள் எல்லாரும். காலடி பூமி தெரிகிறதே இல்லை… என்று ஆச்சர்யத்துடன் மாதங்கி நினைத்துக் கொண்டாள்.

பையில் இருந்து செலவாகிப் போன பணத்தை யாரும் நினைத்துக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் நினைத்துப் பார்க்கிறதும் இல்லை. கையிருப்பில் உள்ள பணத்தைக் கணக்குப் பார்த்து அவர்கள் வாழ ஆரம்பித்து வீடுகிறார்கள்.

வாழ அலுத்தவர்களை காலம் நெட்டித் தள்ளி முன்னே விடுகிறது. கூட ஓடுவதே பெரும்பாலும் நடக்கிறது. ஆனால் உணர்ச்சிகள், அவையே காலத்தைக் கண்டுகொண்டன. காலம் எப்போது மனித மனத்தில் அடையாளப் பட்டது? மரணம் என்பது அறியப்பட்ட போது, மரணத்தை மனிதன் கண்டுகொண்ட போது காலம் என்கிற அம்சத்தை அவன் புதிதாய் அறிய நேர்ந்தது. காலில் தட்டிய மூலிகை.

மரணத்துக்கு முன், மரணத்துக்குப் பின்… பிறப்பின் நேர் எதிர்வாசல் மரணம். வாழ்க்கை என்பது என்ன? இந்த ஜனனத்துக்கும் மரணத்துக்கும் இடைப்பட்ட கால அளவு… என்னென்ன வியாக்யானங்கள்.

மாற்றங்களின் அடிப்படையில் நிர்ணயம் கொள்கிறது காலம். இது அல்ல காலம். அதுவும் அல்ல. இதற்கும் அதற்கும் இடைப்பட்டது காலம். அதற்குத் தனியே விளக்கம் கிடையாது. இரட்டைக் கிளவி என்று சிறு வயசில் இலக்கணம் வாசித்திருக்கிறாள். அது ஞாபகம் வந்தது.

அவள் ஜெயராமனைத் திருமணம் செய்துகொண்டாள். சிவப்பான, மீசையில்லாத ஜெயராமன். காலத்தின் அலையடிப்பில் அவள் பக்கமாக ஜெயராமன் ஒதுங்கினான். பைக் ஓட்டாமல் ஸ்கூட்டர் ஓட்டும் ஜெயராமன். அரைக்கை சட்டை தவிர்த்து உடம்பை முழுக்க மூடிய முழுக்கை சட்டைகள் அணிந்தான். நீறில்லா நெற்றி பாழ், என விபூதி பூசினான். கோவிலுக்குப் போய் தவறாமல் வெள்ளிக்கிழமைகளை அலங்காரம் பண்ணினான். வயசில் பெரியவர் பேசினால் பவ்யமாய்க் கேட்டுக்கொண்டான். ஆரவாரங்கள் தெரியாத ஜெயராமனை அவள் கல்யாணம் செய்துகொண்டாள். சாத்விக ஜெயராமன். ரௌத்திரம் பழகறதா, ஐயையோ, பாரதியார்… என்ன ஸ்வாமி இது, என்று பதறினான்.

அத்தோடு அவளை மதிக்கத் தெரிந்த ஜெயராமன். நீ அழகா இருக்கே, என்று அவள் நெற்றியில் முத்தமிட்ட ஜெயராமன். என்னைப் பிடிச்சிருக்கா, என்று கேட்கிற ஆம்பளையை அவளுக்குப் பிடிக்காமல் என்ன? அழகு முக்கியமா, என்று அவள் கேட்டாள். அவன் ஒரு விநாடி அவளைப் பார்த்தான். பின் ஆமாம், என்கிறான் எளிமையாய். அழகு முக்கியம்தான், என்றாள். ஆனால் எல்லாவற்றிலும் அழகு இருக்கிறதே, என்றாள். உலகில் அழகற்றது எது சொல்லுங்கள், என்றும் கேட்டாள் மாதங்கி.

நீ அழகானவள் என்றான் அவள் மார்பில் சாய்ந்து. உன்னைப் பார்த்தபின் உலகைப் பார்க்கிறேன், உலகம் அழகாய் இருக்கிறது, என்கிற ஆம்பளையை அவளுக்குப் பிடிக்காமல் என்ன? ரட்சிப்பு மனோபாவத்தை தன்னில் இருந்து அவள் கழற்றியெறிய விரும்பினாள். அப்போது அம்மா. இப்போது ஜெயராமன். பெண்களே ரட்சகர்களா என்ன? அவளுக்குத் தெரியவில்லை.

சற்றே கால் பாவாமல் பறந்த காலங்கள் அவை. வாசல் கோலமாய்ப் பொழுதுகள் அலங்கரித்துக் கொண்டன. சோழிகள் சிதறினாப்போல அவள் சிதறிச் சிரித்தாள். வாழ்க்கை அழகாய் இருந்தது. அம்மா, நான் சந்தோஷமா இருக்கேம்மா, என்றாள் மனசுக்குள். ஒருவேளை அம்மா இருந்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பாள். இந்த ஜெயராமன், நான் அம்மாவைக் கூட வைத்துக் கொள்ளவேண்டும் என்று சொன்னால் மறுத்திருப்பானா? மாட்டான் என்றுதான் நம்ப வேண்டும். நம்பாமல் முடியாது. ஒருவேளை என் அம்மாவின் பக்கத்தில் நானும் இவனிடம் வந்திருந்தால், அவன் வாழ்க்கையை இத்தனை அழகாய் உணர்வானா, அதுவும் தெரியவில்லை. அட, நானே அதை எப்படி உணர்வேனோ, அதுக்கே உத்திரவாதம் இல்லை. புதிர்களை விடுவித்தபடி, புதிர்களைப் போட்டபடி நகர்கிறது காலம். புதிரே வாழ்க்கையின் சுவாரஸ்யம், இன்னும் மிச்சம் இருக்கிற பாவனையே சுவாரஸ்யம்,
என்று நினைத்துக்கொண்டாள்.

காலம் அவளைப் பார்த்துப் புன்னகைத்தது. அன்றைக்கு, திகைத்த ஒரு பொழுதில், உனது உறைவு நிலையில், கையறு நிலையில் நான் உன்னைச் சந்தித்தேன். இது கடந்துவிடும் என்றேன்… என்றது காலம். கடக்க வேண்டுமாய் நீ காத்திருந்தாய் என்றது.

இப்போது இந்தப் பொழுதுகளை நீ போஷிக்கிறாய். இந்த உறைவு, இது கடக்க வேண்டாமாய் நீ அவாவுறுகிறாய்…. ஆனால், ஆனால் இதுவும் கடந்து விடும், என்றது காலம். பயமாய் இருக்கிறதா?

இல்லை, என்றவள், வேறு வழியில்லை அல்லவா, என்றாள் மாதங்கி.

காலப் பிரக்ஞை இல்லாமல் நாம் வாழ்ந்திருக்கலாம். இப்போதே கூட அது நம்மிடம்தான் இருக்கிறது. சாத்தியம்தான் அது. ஆனால் நடைமுறையில் நாம் பின்னிக்கொண்ட சிக்கல்கள், அதை அனுமதிக்குமா என்ன? எப்பவாவது வெயிலில் இருந்து நிழலைக் கண்டதும் ஒதுங்குவது போல நிகழ்கிறது இந்த உறைதல். மகா ஓட்டம் ஓடி அலுத்தால் ஓய்வில் கிடைக்கிறது இந்த உறைவு.

ஹா, காலமே, என நெஞ்சு நிமிர்த்தினாள். நான் உன்னோடு கூட ஓடி, ஆனால் அதேசமயம் நின்று சுவாசிக்க வல்லமை கொண்டவள். அவ்வகையில் நான் உன்னைக் கடக்க முயல்கிறவள்.

நல்லது, மானுடத்தின் யத்தனம் அது, என்றது காலம்.

உணர்வு ரீதியான கடத்தல்கள் மங்கி பிற்பாடு மத்தாப்பூக்களாய் கரிக்கட்டையாகிப் போகும். ஆனால் நான் ஹா.. கலையை நான் கண்டேன். மனிதன் கண்டான். காலத்தைச் சிறை வைத்தான். காலத்தை உறையச் செய்தான் மனிதன். கலை என்பது பெட்டகம், என்று நினைத்துக்கொண்டாள்.

ஓவியம், சங்கீதம். புகைப்படம். ஆ, எழுத்து.
காலமே நான் உன்னை வென்றேன், என்றாள்.
சிறிய அளவு, என்றது காலம். புன்னகையுடன்.

கையில் கடிகாரத்தை மாட்டிக்கொண்டு விடுவிடுவென்று வாசலுக்கு வந்தாள். ஒன்பது பஸ் போயிருக்குமா, தெரியவில்லை. தெருவில் நடக்கும்போது தன்னைப்போல நடையின் தாளகதி கூடியிருந்தது.

(முடிந்தது)

About The Author