ஒளிந்திருப்பவனின் நிழல்

அம்மாவுக்கு மாதங்கியுடன் போய் இருக்க ஆசைதான். இவருக்கு இங்கேதான் ஒட்டுதலாய் இருந்தது. சின்ன ஊர் என்றாலும் மனசுநிறைவான வாழ்க்கை அவருக்கு இங்கேதான் கிடைத்தது.

வேலை, வேலையே வாழ்க்கையான மும்பை. பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசமே இல்லாமல் போய்விட்டது அங்கே. இரவு என்பது அரிதாரம் பூசிய பகல். கேட்டால் மாதங்கி புன்னகைக்கிறாள். ”நான் வேலை செய்யறது அமெரிக்கன் கம்பெனியப்பா. நமக்கு ராத்திரிவேளை அவங்களுக்கு பகல். அவங்களை அனுசரித்து நாங்க வேலைசெய்கிறோம்…. எங்க விடுமுறைகளே அமெரிக்க விடுமுறைகளைச் சார்ந்துதான். வாராந்தர விடுமுறை எங்களுக்கு திங்கள்கிழமைதான்… அலுவலக கடிகாரமே எங்க அமெரிக்க அலுவலக நேரம்தான் காட்டும்!”

தோப்பூர்க்காரிக்கு எப்படி அந்த கலாச்சார அவசரம் பழகிக்கொண்டது என்பதே சௌதாமினிக்கு ஆச்சர்யம். பிளஸ் டூ முடிந்ததுமே, கல்லூரி, பிறகு மேற்படிப்பு, பிறகு வேலை என்று அவள் கொஞ்ச கொஞ்சமாய் ஊரைவிட்டு தள்ளியே போய்விட்டாப் போலிருந்தது. தாவணியில் இருந்து சுரிதார்கலாச்சாரத்துக்கு மாறினாள். புடவைகட்டலே எப்பவாவது தான். நாள் கிழமை விசேஷம் என்றுதான்…. என்றாகிப் போனது. வீட்டில் இருக்கையில் கூட பாதிரி அங்கிபோல் நைட்டிதான் உடை. அதனால் எப்பவாவது புடவைகட்டி தலைநிறைய பூவைத்துக்கொண்டு மகள் முன்னேவந்து நின்றால் மனம் பொங்கியது சௌதாமினிக்கு.

இவர் உலகம் வேறு. ஊர்ப் பள்ளிக்கூடத்தில் தலைமையாசிரியர் என்பதில் ஒழுக்கம் சார்ந்த கண்டிப்பு அவரிடம் இருந்தது. என்றாலும் ஒரே பெண்ணை தைரியமாய் மேல்படிப்பு, வேலை என்று வெளியே அனுப்பியதைச் சொல்லவேண்டும். அவரது கடைசி சம்பளத்தைவிட, அவளது முதல் சம்பளம் அதிகம்!

வயதாக ஆக அவரது பக்தி ஆசார அனுஷ்டானங்கள் அதிகரித்து விட்டன. நல்ல மூச்சுப்பயிற்சி என்று காயத்ரி தினசரி 1008 சொல்லியாகிறது. ருத்ரம், கவசம் என்று எப்பவும் மனமும் வாயும் சதா துதித்தபடி யிருக்கும். தலையும் புருவமுங்கூட நரைத்து தனி கம்பீரத்தைத் தந்திருந்தன. உட்கார்கையிலும் திரும்ப எழுந்துகொள்கையிலும் தன்னைப்போல ஸ்ஸப்பா…. ஈஸ்வரா, என்று கூப்பிடுவார். தினசரி கோவில் சந்திகால பூஜைக்கு ஆஜர். கோவிலுக்கு நல்ல நாதஸ்வர வித்வான் அமைந்தது ஆச்சர்யம்தான். அவனிடம் எதையாவது வாசிக்கச்சொல்லி ரசிப்பார். பல்லக்கு புறப்பாடு என்றாலோ, மார்கழி பஜனை என்றோ சந்தர்ப்பங்களில் கூட ஊர்உலா வருவது பிடிக்கும்.

மாதங்கிக்கு பெங்களூருவில் வேலை கிடைத்தபோதும், கல்யாணத்துக்குப் பின் மும்பைக்கு கணவருடன் இருக்கிறாப் போல மாற்றமும் கிடைத்தது. கணவர் பிஸ்வாஸ் வங்கி அதிகாரி. மூணு வருஷமானால் இடமாற்றம். வேலைக்குப் போகும்நேரம் உண்டு. திரும்பி வீடுவரும் நேரம் தெரியாது.

தானே, வர்த்தக் நகரின் அஞ்சாவது மாடியில் மாதங்கி. எப்படி அப்பாவுக்கு அங்கே ஒட்டும். சிவன் தலையில் கங்காதேவி குடியிருக்கிறதாக ஐதிகம். அந்தக்காலத்லியே ‘ஃப்ளாட் சிஸ்டம்’ வந்துட்டாப் போலருக்கு… எப்பவாவது போனால் நாலுநாள் ஐந்துநாள் என்று தங்குவார்கள். பிறகு எப்படா ஊர் திரும்பலாம் என்று அவர் தவிக்கிறதைப் பார்த்து சௌதாமினியே கிளம்பிவிடுவாள்.

வீட்டின் பூஜையறை பெரியது. அம்மாவின் ராஜ்ஜியம் அது. தினசரி காலை பால்வைத்து நமஸ்கரிப்பது முதல், வீட்டில் இருக்கிற மூதாதையர் படங்களுக்கும் ஒரு சுற்று கற்பூரம் காட்டியாகிறது. வயதானதும் தனிமையும் அத்தனை உறுத்தலாக இல்லாதது இதனால்தான். முந்தின்னாள் மோர் மீந்து மறுநாள் வெந்தசாரோ, மோர்க்குழம்போ வைக்கையில், மாமியாருக்குப் பிடிக்குமே, என்று ஞாபகம் வருவது சுகமாய்த்தான் இருக்கிறது. ஆசுவாசமாய் வாசல் திண்ணையில் அவள் அமர்ந்தால் வெளிச்சம் மெல்ல படத்தைக் கீழே போட்டாப்போல அடங்குவதும் எதிர்ப் பூவரசமரம் கருமைபூசி உருவம் கரைத்துக்கொள்வதும் பார்க்க அழகு. மாதங்கி சைக்கிள் கற்றுக் கொண்டது, போன்ற மனசின் அலையடிப்புகளுக்குப் பஞ்சமில்லை. இளமைப் பருவத்தில் வாழ்க்கை முட்டிமோதி நுரைத்துப் பெருகுவதைப் பார்க்கிறதே பெரியவர்களுக்குத் தெம்புதான்.

வாரத்தில் ரெண்டுமூணு முறை மாதங்கி மும்பையில் இருந்து தொலைபேசியில் பேசினாள். அவளுக்கு ஒரே பிள்ளை. வேதவியாஸ். அவனும் கம்பியூட்டரில் கேம்ஸ் என்றோ, பள்ளிக்கூட மைதானத்தில் கிரிக்கெட் என்றோ விளையாட கிளையாட போகாமல் இருந்தால் ரெண்டுவார்த்தை தாத்தா பாட்டியுடன் பேசுவான். ”நீங்க இங்க வந்துருங்கோ தாத்தா….” என்று தவறாமல் பேசுவான் வியாஸ். அம்மா சொல்லித்தந்து பேசுகிறானாய் இருக்கும். ”ஆகட்டுண்டா வரேன் வரேன்… உனக்கு எப்ப முடியுதோ நீயும் இங்க வாயேன்?” என்பார் பார்த்தசாரதி.

மாதங்கி வேலைமாறி வேறு கம்பெனியில் பணியமர்கிற இடைவேளை. இருவாரம் இருந்தது. சரி என்று கிளம்பி வருகிறதாக தொலைபேசியில் மாதங்கி சொன்னது இருவருக்கும் கிளர்ச்சியாய் இருந்தது. எப்பவும் வேலைமும்முரத்தில், நினைத்தபடி கிளம்பி வரமுடியாமல் இருந்தாள் மாதங்கி. உறவுசனத்தின் கல்யாணம், கார்த்திகை என்று அவள் வராதது குறையாக ஒருவார்த்தை, பந்தல்பேச்சாய் சுற்றி வந்தது. அவசரகதியான இன்றைய உலகம். சுதாரிக்குமுன் இழந்தவை அநேகம். தீபாவளியோ பொங்கலோ, புதுத்துணி விருந்து என்கிற அளவில் அவள்வாழ்க்கையில் ஒளிமங்கி ஒடுங்கிவிட்டன.

ஊரிலானால் நவராத்திரி ஒன்பதுநாளும் வீட்டில் கொலு. கன்னிப்பெண்களின் பாட்டும் கலகலப்புமாய் அமர்க்களப்படும். பட்டுப்பாவாடை சரசரப்பு, கொலுசுகளின் ணிக் ணிக், கேட்டபடி யிருக்கும். இளமைக்குத் திருவிழா. எல்லாவீடுகளுக்கும் போய்வருவார்கள். கோவிலில் அம்மனுக்கு தினசரி ஒரு அலங்காரம். கலாச்சாரமே காலத்தை அழகு செய்கிற சமாச்சாரம் தானே?

எப்பவும் சென்னைவரை விமானம், பிறகு ரயில் என்று வருவதும், ஓடுவதுமான பெண் இப்போது அவளே மனதுவைத்து ஒருவாரம் தங்கியிருக்கிற சந்தோஷத்தில் பெற்றவர்கள் மனம் குளிர்ந்தார்கள். முகம் மந்தகாசப்பட்டு ஒருத்தரை ஒருத்தர் புன்னகை பரிமாறிக்கொண்டார்கள். நிதானமாய் நடக்கிற சௌதாமினியிடமே ஒரு விறுவிறுப்பு கண்டது. மொட்டைமாடியில் வானொலியருகே அமர்ந்தபடி மகாராஜபுரத்துடன் கூடவே அப்பா சேர்ந்துபாடியது கேட்டது.

இன்னும் பள்ளிக்கூட மும்முரங்கள் எதுவும் இல்லாமல் இருந்தான் வேதவியாஸ். வரும் வருடம்தான் முதல் வகுப்பு. என்றாலும் கின்டர் கார்டன் அது இதுவென்று ரெண்டு வயசிலேயே பள்ளிக்கூட அமர்க்களம் ஆரம்பித்து விடுகிறார்கள். ஆங்கிலம் கற்றுக்கொள்ள, பேச அவசரம். வீட்டிலேயே அம்மா, அப்பா இல்லை – மம்மி டாடி தான். நாளடைவில் நகரத்துக் கன்னுக்குட்டிகளே மம்மி… என்று ஆரம்பித்துவிடும் போலிருக்கிறது. ஆனால், குழந்தையுடன் மாதங்கி வீட்டில் தமிழில்தான் பேசுகிறாள், என்கிறதுதான் சிறு ஆறுதல்.

பிரசவம் என்று மும்பைக்குப் போய்வந்தார்கள். அவர் பத்துநாள் இருந்துவிட்டு தோப்பூர் திரும்பிவிட்டார். அம்மாமாத்திரம் ஆறுமாசம் கூடஇருந்தாள். மாப்பிள்ளையின் அம்மா வந்து பிறகு கூட இருந்தாள். முதல் பிறந்தநாள் என்று மும்பை போய்வந்தார்கள். ரெண்டாவது பிறந்த நாளன்று வியாஸ் அமெரிக்காவில் இருந்தான். தொலைபேசியில் பேரனுடன் பேசி வாழ்த்துசொல்ல வேண்டியிருந்தது.

சூட்டிகையான, அதேசமயம் அமைதியான பையன் வியாஸ். கறந்த பால்போல் அவனைப் பார்க்க மனசை அள்ளும். அவன் சிரிப்பே மயக்கும் எளிமையான அழகு. குர்தாவும் பைஜாமாவும் அணிவான் எப்பவும். பார்த்து ஒரு வருஷம் ஒண்ணரை வருஷம் ஆகிவிட்டதே… இந்நேரம் உசரங் குடுத்திருப்பான் என்று இருந்தது. கூடத்தில் அவன், அவன்அப்பா அம்மா, என்று சேர்ந்து எடுத்துக்கொண்ட குடும்பப் புகைப்படம் இருக்கிறது. அவனது புன்னகை எப்பவுமே இதமாய் தாத்தா பாட்டியை வருடவல்லதாய் இருந்தது.

வாசலில் சாய்வுநாற்காலி போட்டு இந்து வாசித்தும் பொழுது நகர்கிறதாய் இல்லை. எப்படியும் வர மாலை மூணு மூணரை ஆகிவிடும். காலையில் மதுரை வந்திறங்கினாலும் கார்வைத்துக்கொண்டு தோப்பூர் வரவேண்டும். மதுரைக்கே போய் அழைத்து வந்திருக்கலாம் என்றுகூட இருந்தது.

ரொம்ப பதவிசாக நடந்துகொள்ள வியாஸைப் பயிற்றுவித்திருந்தாள் மாதங்கி. காரில் இருந்து இறங்கியவுடன் கிடுகிடுவென்று தாத்தா பாட்டியிடம் ஓடாமல் அம்மா கூடவர என்று காத்திருந்தான். டிக்கி அருகே அம்மாபோய் பெட்டியை எடுத்துக் கொண்டதும் தன்னால் எதும் உதவமுடியுமா என்று பார்த்தான். உள்ளே வந்ததும் தாத்தா பாட்டியைப் பார்த்து கரங் குவித்து வணக்கம் சொன்னபோது, கைகளுக்குள் தாமரைமொட்டு தெரிந்தது… பெரியவர்களுக்கு சிலிர்த்தது. தலைமையாசிரியர் தாத்தா, பேரனின் ஒழுக்கத்தில் பரவசப்பட்டார்..

இந்த வயசில் இந்த நிதானம் ஆச்சர்யம்தான். புது ஊர் பார்க்கிற உற்சாகம் இல்லை என்று சொல்லிவிட முடியாது. அவன் முகம் பொங்கி கண்களில் சிரிப்பு நிறைந்திருந்தது. வெகுநாட்கள் கழித்து தாத்தாபாட்டியை பார்க்கவந்ததின் சந்தோஷம். என்றாலும் பரபரப்படையவில்லை அவன். மகிழ்ச்சி என்கிற ஆரம்ப நிலைதாண்டி ஆனந்தம் என்கிற பரிமாண வளர்ச்சி கண்டவனா, என்றிருந்தது. தளும்பும் மௌனம்.

நகரத்தின் பரபரப்புகளின் நரநரப்பில், பல்லுக்கிடையில் போல அவன் சிக்கியவனாய் இல்லை. ஒருவேளை அம்மையின் வளர்ப்பு அப்படி இருந்திருக்கலாம். நகரமானால் என்ன அஞ்சாவது மாடியானால் என்ன, பூமிக்கு உயரே வாழ்வதில் வானத்துக்குக் கிட்டே என்று அர்த்தப்படுத்திக் கொண்டால் ஆச்சு…. என்று புதுசாய்த் தோன்றியது அவருக்கு.பயண அலுப்புடன் தாத்தா மடியில் படுத்தபடி அப்படியே உறங்கிப்போனான் வியாஸ். எதற்கும் முரண்டோ பிடிவாதமோ இல்லாத குழந்தை. மாதங்கியிடம் கூட அந்தக்காலத்தில் கொஞ்சம் முரண்டும் முகச் சுளிப்பும் கண்டிருக்கிறார். இளமை உள்ளே கட்டற்று ஒரு பூபோல விரிகையில், மூத்தோரின் கண்டிப்பு சார்ந்த சிறு ஆதங்கம் அது. என்றாலும் அது பட்டத்துக்கு நூல் போல என அவள் பிறகு உணர்ந்து கொண்டாள்… அல்லது அவள் உணர்ந்து கொண்டதாக அவர் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஒழுக்கங்கள் என திணிக்கப்படாத, இயல்பான எளிமையான வாழ்க்கை இவனுக்கு அருளப்பட்டிருக்கிறது. காரணம் பிறர் சார்ந்த, சமூகம் சார்ந்த உயர்ந்த நற்பண்புகளுடன் என்மகளை நான்வளர்க்கிற வேள்வி பிரமை எனக்கு, அப்போது, இவளது சிறுபிள்ளைப் பருவத்தில் இருந்தது. அவளுக்குப் போலவே, எனக்கும் கனவுகள் இருந்தன. அவளுக்குத் தன்னைப்பற்றிய கனவுகள், மனசின் விழிப்பு அது. எனக்கு அவளைப்பற்றிய கனவுகள். சூட்சுமத்தின் ரீங்காரம்…

வியாஸ் கறந்த பாலாய் இருந்தான். சமூகம் சார்ந்த எந்த திணிப்பும் இன்றி, ஆனால் அதை இதமாய் எதிர்கொள்ள ஒரு இறுக்கந் தளர்ந்த ஆதுரம் அவனுக்கு அவனது பெற்றோர்களிடம் கிடைத்தது. நாங்கள்…. என நினைத்துக்கொண்டார் பார்த்தசாரதி. நாங்கள் எங்கள் குழந்தைகளை, அதுவும் பெண்குழந்தையைப் பிடித்த பிடி இன்னும் இறுக்கமானது தான்…. என நினைத்து புன்னகை செய்துகொண்டார். நகரவாழ்க்கைச் சூழலும், வசதியான குடும்ப எடுப்பும் அவனுக்கு பிறப்பிலேயே கொடையளிக்கப் பட்டவை. அவனது நல்லூழ் அது, என்று கூட சொல்லலாம்.

ஆகா, இந்தக் குழந்தைக்கு சகல ஐஸ்வர்யங்களும் சித்திக்கட்டும். சகல சௌபாக்கியங்களும், தேக ஆரோக்கியமும் அருளப்படட்டும்…. என மனம் தன்னைப்போல ஒரு பரவசத்துடன் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தது…

மாலை மயங்க லேசாய் உள்நுழையும் இரவில் காற்றாட பேரனை வெளியே அழைத்துப் போகலாம் என்று அவன்கையைப் பற்றிக்கொண்டு கிளம்பினார். மாதங்கியும் சௌதாமினியும் வீட்டில் தங்கிவிட்டார்கள். பெண்கள் கால இடைவெளியில் தங்களுக்குள் பேசிக்கொள்ள நிறைய விஷயங்கள் வைத்திருந்தாப் போலிருந்தது. என்னிடம் மொட்டைமாடியில் பக்கத்தில் அமர்ந்தபடி என்னதான் பேசிக்கொண்டிருந்தாலும், பெண்ணிடம் மனசைத் திறந்து எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்வதைப் போல பேசிக்கொள்வது அவளுக்கு வேண்டியிருந்தது போலும்… மனக்காட்டில் எதோ மூங்கில் சிறு ஸ்வரம் ஒன்றை இசைத்து அடங்கினாப்போல.

சடார் சடாரென்று கைத்தறிக் கண்டுகளில் இருந்து துணியில் டிசைன் உருவாவதைப்போல வாழ்க்கை எப்பவும் சிந்தனைகளை உருவாக்கித் தரவல்லதாய் இருக்கிறது.

தன்னைப்போல கால்கள் கோவிலை எட்டியிருந்தன. ஆளரவமற்ற கோவில். பிராகார எடுப்பில் பஞ்சாட்சரம் நாதஸ்வரத்தை துணிப்பையில் இருந்து வெளியே எடுத்துக்கொண்டிருந்தான். யாருமே சந்திகால பூஜைக்கு வராவிட்டாலும், சுவாமிக்கு நாதாபிஷேகம் செய்கிற அவனது சிரத்தை அவருக்குப் பிடிக்கும். ஒருவன் தனக்குப் பிடித்த ஒரு காரியத்தைச் செய்வதைப் பார்ப்பதே அழகு அல்லவா?

பேரன் கையைப் பற்றியபடி கோவிலுக்குள் நுழைய மனம் சின்னதாய் தளும்புகிறது. சந்ததி சார்ந்த சரடுகளால் அவனும் அவரும் பிணைப்பு கண்டிருந்த பாவனையைத் தவிர்க்கத்தான் முடியவில்லை. வீட்டுக் கூடத்தின் மூதாதையர் படங்களுடனேயே வாழ்கிறவர் அவர். அத்தனை மூதாதையர் படங்களுடன் நடுவே சாய்வுநாற்காலி போட்டு அமர்கையில் கருவறைக்குள் தான் ஒடுங்கிக்கிடக்கிறதாக ஒரு கதகதப்பான இதமும் வாய்த்தது அவருக்கு. இதெல்லாம் இவனுக்குப் புரியுமா, என்றுகூட ஒரு புன்னகையுடன் நினைத்துக் கொண்டார் பார்த்தசாரதி.

கோவில் படியேற ரெண்டுபக்கமுமான யானைக் கடைசலில் வசிகரப்பட்டு, சட்டென அவர்கையை விட்டுவிட்டு ஒருவிநாடி அப்படியே நின்றான் வியாஸ். அவருக்கு ஏனோ கல்யானைக்கு கரும்புதந்த திருவிளையாடல் புராணம் நினைவுக்கு வந்தது. ஒரு சிரிப்புடன் அவர் அவனை மெல்ல தூக்கி அந்தக் கல்யானையில் உட்கார்த்தி விட்டார். என்ன அழகாய் புன்னகைக்கிறான். சின்ன வயசில் இவன்அம்மா ஆடுகுதிரை வாங்கித் தந்தாளா தெரியவில்லை. குழந்தைகள் சட்டென கற்பனையை உசுப்பிவிட்டுக் கொள்கின்றன.

”தாத்தா நான் இங்கயே இருக்கட்டா?”

அவர் அவனை அழைத்துக்கொண்டு போய், சுவாமி சந்நிதியில் அவனை நமஸ்கரிக்கச் சொல்லி, அவனுக்காக, அவன் நலனுக்காக, அவன் வெற்றிகளுக்காக என்றெல்லாம் பிரார்த்தனைகள் செய்கிறதாக வந்திருந்தார்.

”ஏய் உள்ளபோயி நாம ஸ்வாமி பார்ப்பம்…. வா” என்று அழைத்தார் புன்னகையுடன்.

”நீங்க போயிட்டு வாங்க….” என்றபடி அந்த யானையின் காதுகளைத் தொட்டுப் பார்த்தான் வியாஸ்.

அவருக்கு என்ன சொல்ல தெரியவில்லை. ”எங்கயும் ஓடாம இதுலயே விளையாடிண்டிருப்பியா வியாஸ்?”

”ம்” என்றது குழந்தை. ”டிங்….. டாங்….” என்று அவன் வாயில் சத்தம். யானைமேல் அம்பாரி போகிற பாவனையில் அவன் தன்னை மறந்திருந்தான் போல.

அவர்மாத்திரம் உள்ளே போகிறார். மோகனத்தை சந்தனக் கரைசலாய் இழைக்கிறான் பஞ்சு. புராதனமான பெரிய கோவில் அது. ரெண்டு பக்கமும் சாரிசாரியான தூண்களின் வரிசையில், யாளிகள் முன்கால் தூக்கி நின்றன. இரவின் மெல்லிருளில் அந்த யாளிகள் மூர்க்கம் அதிகரித்தாப் போல அவருக்குத் தோன்றும் சில சமயம். இப்போதைய மனநிலையில் முன்நீண்ட கரங்களில் நாதசுரம் பிடித்து வாசிக்கும் பஞ்சு அவனே யாளிபோல் தெரிந்தான். ஒருவேளை அவனது நாதத்தை தினசரி அந்த யாளிகள் முன் அரங்கேற்றுகிற பாவனை அவனுக்கும் இருக்கலாம். தனிமை என்பது கூட ஒரு செயற்கையான பாவனைதான்… இயற்கை, தன் பிரம்மாண்டத்தில், ஒத்திசைவில் யாரையும் தனிமைப்படுத்துவது இல்லை.

சந்திகால பூஜைகள் துவங்கிவிட்டன. திரை விலக, பளீரென்ற சந்நிதிக்குள் சிவலிங்கம். சந்தனக்காப்பு அலங்காரம். இடது கையால் மணி அடித்தபடி வலதுகையை அசக்காமல் கற்பூர வித்தை. குருக்கள் நாம் அன்றாடம் பார்க்கிற அதிசயம் தான். ப்ரபோ, ஈஸ்வரா…. என் பேரனைக் காப்பாற்று…. என மனம் தன்னைப்போல உருகி பிரார்த்தனையில் ஈடுபட்டது.

இந்தக் கல் – இதில் நான் கடவுளைக் காண்கிறேன். வியாஸ் வாசல் கல்லில் யானையைக் கண்டான், என்றால்…. இருவர் தரிசனமும். ஒன்றுதானோ என்று திடீரென்று அவருக்குத் தோன்றியது. எதிர்காலம் பற்றிய கவலையில், அன்புசார்ந்த என் சுயநலமான உள்சுருக்கத்தில் நான் அவனது நலன் சார்ந்து பயம், அல்லது கவனம் கொள்கிறேன். பிரார்த்தனை செய்கிறேன்….

அவனுக்கு எதிரிகள் இல்லை. எதிரி என்கிற அம்சம் அவன் வாழ்க்கையில் இல்லை. பயம் இல்லை. அவநம்பிக்கை இல்லை. பொய் இல்லை. கறந்த பால் போல வியாஸ்….. மாசுமருவற்ற, கறையற்ற, கள்ளமற்ற பிள்ளை… என நினைத்துக்கொண்டார்.

அவன் மாத்திரம் அல்ல. எந்த சாதியானாலும், பிறந்த அத்தனை குழந்தையுமே கபடமற்றவை… பின் நாம் வளர்க்கிறதில் இருக்கிறது அவர்கள் தேறிவரும் முறை…. என்று யோசனை ஓடியது.

நூற்றாண்டு பழைமையான கோவில் அது. காலத்தின் அசையாநிலை. காலத்தைப் பிடித்து நிறுத்த மனிதனின் யத்தனம் அது. மன்னர்களும், சமயக்குரவர்களும், எத்தனையோ ஜனங்களும் தினசரி வந்து வழிபட்ட ஸ்தலம் அல்லவா அது…

வெளியே வருகையில் புராதனமான அந்த யாளிகளின் வரிசை…. இறந்த கால அடையாளமாய் அவற்றின் இருப்பு. அதைக் கடந்துவரும் அவர், எதோ நிகழ்காலத் தொடர்ச்சி போன்ற பிரமைகளை அளித்தன. இங்கிருந்து பார்க்கையில் அந்தச் சரடு அப்படியே நீண்டு போகிறாப் போலப் பட்டது.

வாசல் கல்யானையில் அவர் பேரனைப் பார்த்தார்.

About The Author

2 Comments

  1. Sri

    The author has deep thoughts for sure. But sounds like an essay except for the last cpl of paragraphs..a difficult thought to convey, but relative done nicely

Comments are closed.