கரிசல் காட்டுக் கதை சொல்லி (2)

சரி, நம்ம கதாநாயகனுடைய உண்மையான வயது இப்போது வாசகர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டு விட்டதால், இதுவரை அவன் இவன் என்று குறிப்பிடப்பட்ட கதாநாயகனை, கதாநாயகரை, அவருடைய முதிர்ந்த வயதுக்கு மரியாதை தந்து அவர் இவர் என்று குறிப்பிடுவதுதான் நாகரீகம் என்பதால், இனி நாம் மரியாதை காப்போம்.

எங்கே விட்டோம்?

ஏற்புரைக்கு எழுத்தாளரை அழைத்த போது, அவர் மிகுந்த சிரமத்துடன் ஆசனத்தை விட்டு எழுந்தார்.

தான் ஒரு எண்பத்தஞ்சு வயது முதியவன், இந்த மன்றத்திலிருக்கிற எல்லாரையும் விட வயதில் மூத்தவன். இங்கிருக்கிற அனைவரையும் உள்ளடக்கி, ஸீனியாரிட்டி லிஸ்ட் ஒன்று தயாரித்தால் அதில் முதல் பெயர் தன்னுடையதாயிருக்கும், அதாவது இந்த எல்லாரையும் விட தனக்குத்தான் மரணத்துக்கு முன்னுரிமை என்பது தெள்ளத் தெளிவாய்த் தனக்கு உணர்த்தப் பட்டிருக்கிறது என்பதை உணர்ந்த போது இவருடைய எக்ஸஸ்ஸைஸ் பாடி வலுவிழந்து போனது போலிருந்தது.

எண்பத்தி நாலு வருஷங்கள் 364 நாட்கள் இல்லாத சோர்வு இன்றைக்கு மனசை ஆக்கிரமித்துக் கொண்டது. அவரால் மைக்கில் பேச முடியவில்லை.

”இந்த விழாவை ஏற்பாடு செய்தவர்களுக்கு நன்றி. என்னை வாழ்த்திப் பேசிய அத்தனை இளைஞர்களுக்கும் மனமார்ந்த நன்றி” என்கிற ரண்டே வாக்கியங்களில் தன்னுடைய ஏற்புரையை முடித்துக் கொண்டார்.

இரவு உணவுக்கு விழா அமைப்பாளர்கள் அழைத்த போது, பசியில்லை என்ற மறுத்து விட்டார். இரவு, சென்னையில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது அவருக்கு சொல்லப்பட்ட போது, அதை மறுத்து, இரவோடு இரவாய்ப் பாண்டிச்சேரி போய்ச் சேர்ந்துவிட வேண்டுமென்றும், அதற்கு ஏற்பாடு செய்யும்படியும் கோரிக்கை வைத்தார்.

கார் ஒன்று ஏற்பாடாகி, எம்பத்தஞ்சி வயசு எழுத்தாளரும் அவருடைய எழுபத்தஞ்சி வயசுத் துணைவியாரும் நள்ளிரவில் மெட்ராஸ் ட்டு பாண்டிச்சேரி பயணமானார்கள்.

நிலா வெளிச்சத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையின் ரம்மியம் இப்போது அவர்களுக்கு அந்நியமாயிருந்தது. பிரயாணம் முழுக்க ஓர் அசாதாரணமான அமைதி வியாபித்திருந்தது.

வீட்டையடைந்த பின்னால் துணைவியார் மெல்லக் கேட்டார்கள். ”திருஷ்டி சுத்திப் போடணும்னீங்களே….”

மனைவியைப் பார்த்து விரக்தியாய்ச் சிரித்தார் கரிசல் காட்டுக் கதை சொல்லி. ”என்னத்துக்கும்மா திருஷ்டி சுத்திப் போடணும், யார் கண்ணுமே நம்ம மேலப் படல. நாக்குதான் பட்டிருக்கு. ஆளாளுக்கு நாக்கால போட்டு விளாசிட்டாங்க. எனக்கு எம்பத்தஞ்சு வயசு ஆயிருச்சு தெரியுமோ? இன்னிக்கித்தான் சொன்னாக! ரொம்ப டயர்டா இருக்கும்மா எனக்கு. எம்பத்தஞ்சு வயசுக்காரனுக்கு நியாயமா இருக்க வேண்டிய சோர்வு இப்பத்தான் மெல்லத் தல காட்டுது.”

கணவனை இழுத்துத் துணைவியார் தன்னுடைய மார்பில் சாத்திக் கொண்டார்கள். ”அப்படியெல்லாம் பேசாதீக. அங்க மேடையில பேசின வசனங்கள யெல்லாம் மறந்துருங்க. நாம மெட்ராஸ்க்குப் போய்ட்டு வந்ததையே மறந்துருங்க. நீங்க சொல்ற இந்த சோர்வு ஒரு மனப் பிரமைதான். அந்த விழாவுல பேசினவங்க எல்லாம் சேந்து இந்த சோர்வை வலிய ஒங்க மேல திணிக்க ட்ரை பண்ணியிருக்காங்க. அவங்கெல்லாம் தோத்துத்தான் போவாங்க. ஒங்க ஒடம்பு எப்படி! நீங்க ஒரு ஸ்டீல் மேன்! எந்தக் கொம்பனும் ஒங்கள எதுவும் செஞ்சிருக்கிற முடியாது. என் ராஜா, நெஜம்மாவே நீங்க ஹீரோதான்.”

அடுத்த நாள் காலையில் துயிலெழுந்தவர், எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டு உடற்பயிற்சி செய்யலாமா வேண்டாமா என்கிற யோசனையிலிருந்த போது, அறைக்குள் பிரவேசித்த மனைவி,

”இனிமே நா வாக் போகப் போறதில்லீங்க” என்றார்கள்.

”அட, எனக்கு புத்திமதி சொல்லி எங்க்கரேஜ் பண்ணிட்டு, நீ சோர்ந்து போய்ட்டியா” என்று சிரித்தார் எழுத்தாளர்.

”அதில்லீங்க, நீங்க எனக்கு ஸிம்ப்பிள் எக்ஸஸ்ஸைஸ் சொல்லித் தர்றேன்னீங்களே, அத சொல்லித்தாங்க. இனி நானும் ஒங்க கூட சேந்து எக்ஸஸ்ஸைஸ் செய்யப் போறேன். எந்திரிங்க.”

எழுத்தாளர் படுக்கையிலிருந்து துள்ளி எழுந்து, ”அடி என் ராணீ” யென்று மனைவியைக் கட்ட்ட்டிக் கொண்டார். அந்த அதிகாலையில் அவர் இளைஞனாகவும் அவள் ஒரு இளம் பெண்ணாகவும் பிறவியெடுத்தார்கள், திரும்பவும்.

*******

கதையை எழுதி முடித்து விட்டு, பஸ் பிடித்துப் பாண்டிச்சேரிக்குப் பயணமானேன். கரிசல் காட்டு எழுத்தாளர் வீட்டையடைந்து கதவைத் தட்டினேன். கதவைத் திறந்த எழுத்தாளர், சிக்கனமான உடையில் வேர்க்க விறுவிறுக்க நின்றிருந்தார்.

”வணக்கம் ஐயா, நான் ஒரு எழுத்தாளன். ஒங்களப் போலவே கரிசல் காட்டுக்காரன்” என்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டவுடன், ”அடடே, அப்படியா? வாங்க வாங்க” என்று உள்ளே அழைத்து நாற்காலியில் அமரச் செய்தார்.

அம்மையாரும் வேர்வை துளிர்த்த முகத்தோடு இருந்தார்கள். ரெண்டு பேரும் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்திருக்கும் போது, நான் குறுக்கே புகுந்து விட்டதையுணர்ந்து, அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டேன்.

”பரவாயில்ல தம்பி, கிட்டத்தட்ட முடிஞ்சு போச்சு” என்றார் பெருந்தன்மையோடு.

”தம்பியோட மொகம் சமீபத்ல பாத்த மொகம் மாதிரியிருக்கே?”

”பாத்த மொகம் தாங்கய்யா, ஞாயித்துக்கெழம நீங்க மெட்ராஸ்க்குப் போனபோதும், திரும்பி வந்த போதும் நாந்தான் ஒங்கக் கார் டிரைவராயிருந்தேன்.”

”டிரைவர் கம் எழுத்தாளர்!”

”ஆமாங்கய்யா, அந்த விழா முழுக்க நா அங்க தான் இருந்தேன். எல்லார் பேசினதையும் கேட்டேன். நீங்க சங்கடப்பட்டதயும் கவனிச்சேன். ஒங்கள ஸ்டடி பண்ணினேன். இத ஒரு கதையா எழுதணும்னு எனக்குத் தோணிச்சு. எழுதிட்டு வந்திருக்கேன். ஐயா வாசிச்சிப் பாக்கணும். ஐயா ஓக்கே பண்ணீங்கன்னா பத்திரிகைக்கு அனுப்பலாம்னு இருக்கேன். கத ஐயாவுக்குப் புடிக்கும்னு நம்பிக்கையிருக்கு. பாதி நெஜம், பாதி கற்பனை.”

வாசித்துப் பார்த்துவிட்டு, ”கற்பனையே இல்ல தம்பி, முழுக்க முழுக்க நெஜம்” என்று என்னுடைய கைகளைப் பற்றிக் கொண்டார்.

பக்கத்திலிருந்த மனைவியிடம் கதையை வாசிக்கக் கொடுத்து விட்டு, ”கத, படிக்க சொகம்மாயிருக்கு தம்பி” என்றார்.

”ஆனா, ஒண்ணே ஒண்ணு. ஆரம்பத்ல கதாநாயகனோட வயசு தெரியாம ஸஸ்பென்ஸ்ல இருக்கும்போது அவன் இவன்னு எழுதியிருக்கீங்க. அவனுக்கு எம்பத்தஞ்சு வயசுங்கறது தெரிய வர்றப்ப அவர் இவர்ன்னு வயசுக்குரிய மரியாதை குடுக்க ஆரம்பிக்கிறீங்க. அதான் கொஞ்சம் சங்கடப்படுத்துது. இந்தக் கதாநாயகன் என்னிக்குமே இளைஞன்தான். எல்லாத்தயும் அவன் இவன்னே மாத்திருங்க” என்று உற்சாகமானார் அந்தக் கரிசல் காட்டு இளவரசர்… அல்ல.. கரிசல் நாட்டு இளவரசன்.

(சமநிலைச் சமுதாயம், ஜூலை 2008)

About The Author

1 Comment

Comments are closed.