கார் வித்த காசு (3)

ந‎ன்றி : ஆனந்த விகடன், 28.04.2002 (காரும் காதலியும்)

காலேஜ் பொண்ணுங்கற மாதிரியான பொண்ணு.
சிகப்பா, சாந்தமா துப்பட்டாவாலத் தலையக் கவர் பண்ணிண்டு.
நெத்தியில பொட்டு இல்லை.
முஸ்லிம் பொண்ணு?
மனசுக்குள்ள ஒரு குறுகுறுப்பு ஷேப் எடுக்கறது.

"யெஸ்?"

"மிஸ்டர் ஸ்ரீநிவாசன்?"

"யெஸ்?"

இந்த ரெண்டாவது எஸ்ஸை நா உச்சரிச்சவொடனே, பூப்பூத்தது மாதிரி இந்தப் பொண்ணு முகத்துல சந்தோஷம்.

"அங்க்கிள் நா உள்ள வரலாமா?"

"யூ ஆர் மோஸ்ட் வெல்கம்."

எதிர்த்த எதிர்த்த ஸோஃபால உட்கார்றோம்.

"அங்க்கிள், என் பேர் யாஸ்மின்."

"முஸ்லிம் பேர். குறுகுறுப்பு கூடிண்டே போறது."

"என்னை ஒங்களுக்குத் தெரியாது அங்க்கிள். ஆனா எங்க அம்மாவை ஒங்களுக்கு நல்லாவே தெரியும்."

பரீக்ஷை ரிஸல்ட்டைப் பேப்பர்ல பாக்கப்போற ஸ்டூடன்ட் மாதிரி மனசு டிரம்ஸ் அடிக்கிறது.
அந்தப் படபடப்பை ஒதுக்கி ஓவர்டேக் பண்ணிண்டு உதடு முணுமுணுக்கிறது:

"பீபி ஜான்?"

"நீங்க கண்டு புடிச்சிருவீங்கன்னு தெரியும் அங்க்கிள்! அம்மா சொன்னது கரெக்ட்!"
உணர்ச்சிங்க ஜலரூபத்துல கண்ணு ரெண்டுலயும் ரெடியா நிக்கிறது.
எட்டி, அவொ கை ரெண்டையும் புடிச்சிக்கறேன்.

"பீபி ஜான்ஸ் டாட்டர்? என்னால நம்பவே முடியலம்மா!"

"கண்ணத் தொடச்சிக்கிங்க அங்க்கிள். நீங்க இப்படித்தான் ரியாக்ட் பண்ணுவீங்கன்னு அப்படியே அம்மா சொன்னாங்க. வீட்ல வேற யாருமே இல்லியா அங்க்கிள்?"

"இல்லம்மா, ஓய்ஃப் டாட்டர்ட்ட போயிருக்கா, அமெரிக்காவுக்கு. சரி அத விடு. அம்மா எங்க இருக்காங்க, எப்படியிருக்காங்க, சொல்லு, சொல்லு."

"ஏதோ இருக்காங்க அங்க்கிள், நாங்க பெங்களுர்ல இருக்கோம்."

"தமிழ் நல்லா பேசிறியே?"

"கன்டோன்மென்ட் ஏரியா தமிழ்தானே அங்க்கிள்? ஆனா தமிழ் எனக்குப் பேச மட்டுந்தான் வரும். எழுத்துக் கூட்டிக் கூட்டிக் கொஞ்சம் படிப்பேன். நீங்க கூட உர்து பேசுவீங்கன்னு அம்மா சொன்னாங்க?"

"ஒங்கம்மா சொல்லிக் குடுத்ததுதான். எத்தனை வருஷமாச்சு! அது ஒரு காலம்! இப்ப டச் விட்டுப் போச்சு. அது சரி, என்னைப் பத்தி ஒங்கம்மா வேற என்னம்மா சொன்னாங்க?"

"எனக்கு எல்லாமே தெரியும் அங்க்கிள். எங்கம்மாவுக்கு நா ஒன்லி டாட்டர் மட்டுமில்ல, ஃப்ரண்டுங்கூட. அதுவும், அப்பா செத்துப் போனதுக்கப்புறம் நாங்க ரொம்ப க்ளோஸ்."

"அடடே, அப்பா இல்லியாம்மா இப்ப!"

"அஞ்சு வருஷம் ஆச்சி அங்க்கிள். வயசாச்சில்ல. எங்கம்மா அப்பாவுக்கு ஸெகண்ட் ஒய்ஃப் தெரியுமா? நாங்கூட ரொம்ப லேட்டாத்தான் பொறந்தேனாம். அம்மாவோட சோகக்கதையைச் சொன்னா நீங்க ரொம்ப வருத்தப்படுவீங்க அங்க்கிள். அது வேணாம். ஒங்களை எப்படிக் கண்டுப்பிடிச்சேன்னு சொல்லவா?"

"ஷுட் பி இன்ட்ரஸ்ட்டிங். சொல்லு சொல்லு."

"அம்மா, ஷெல்ஃப்ல பழைய தமிழ்ப் பத்திரிகை யெல்லாம் நிறைய அடுக்கி வச்சிருப்பாங்க. எனக்குத்தான் தமிழ் படிக்கத் தெரியாதே. ஸோ, அதப்பத்திக் கண்டுக்கல. ஒரு நாள் அம்மா அதுல ஒரு மாகஸீனை எடுத்துப் பிரிச்சுப் பாத்துட்டிருக்காங்க, கன்னங்கள்ள கண்ணீர் வழியுது. எனக்கு ஒண்ணும் புரியல, என்னை அம்மா பாக்கல. நா பின்னாடி போய் படக்குன்னு அந்தப் புஸ்தகத்தப் புடுங்கிட்டேன். ரெண்டு கையினாலயும் மொகத்த மூடிகிட்டு அம்மா தேம்பித் தேம்பி அழறாங்க. அந்தப் புஸ்தகத்துல அம்மா பேர் ப்ரின்ட் ஆயிருக்கிற மாதிரியிருக்கு. எழுத்துக் கூட்டி வாசிச்சிப் பாத்தா, பீபி ஜான். அப்புறந்தான் அம்மா ஒங்க கதையச் சொன்னாங்க."

"சொன்னாங்களா?"

"சொன்னாங்க அங்க்கிள். ஒங்க ரெண்டு பேர் கதயையும் சொன்னாங்க. எங்க காலேஜ்லயிருந்து மெட்ராஸ் தூர்தர்ஷன்ல ஒரு ப்ரோக்ராம் தர்றோம் அங்க்கிள். அந்த ஷூட்டிங்க்காக நாங்க ஆறு கேர்ள்ஸ் வந்தோம். ரிக்கார்டிங் ஓவர். காலைல ஒரு பத்திரிகை ஆஃபீஸ்க்கு ஃபோன் பண்ணி ஒங்க அட்ரஸை வாங்கினேன். ஈவ்னிங் நேரா வந்துட்டேன். அங்க்கிள், நீங்க எப்ப பெங்களூர் வர்றீங்க? ஒங்களப் பாத்தா அம்மா எவ்ளவு சந்தோஷப் படுவாங்க!"

"ஒங்கம்மாவப் பாக்க எனக்கு மட்டும் ஆசை இல்லியாம்மா! அது என்னோட டியூட்டி கூட. இப்ப எனக்கு டைம் சரியில்லம்மா. நா நொடிஞ்சி போய் ஒடுங்கிப்போய் உக்காந்திருக்கேன். கூடிய சீக்கிரம் பகவான் அருளால எல்லாம் சரியாயிரும். சரியானதும் ஒன்னையும் ஒங்கம்மாவையும் பாக்க வருவேன். கட்டாயம் வருவேன். இன்ஷா அல்லா."

"அப்ப நா கெளம்பட்டா அங்க்கிள்?"

"தனியாப் போயிருவியாம்மா?"

"தனியாத்தானே வந்தேன் அங்க்கிள்?"

"நம்ம கார் இருந்திருந்தா ஒன்னை டிராப் பண்ணி யிருந்திருப்பேன். இப்ப அரை மணி நேரந்தான் ஆகுது கார் கையை விட்டுப் போய். அட, அதுகூட ஒரு நல்லதுக்குத் தான் போல. யாஸ்மின், இந்தக் கவரை அம்மாட்ட குடு."

"என்ன அங்க்கிள் இது?"

"வாழ்க்கையில ஒங்கம்மா எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்காங்க, ஒங்கம்மாவுக்காக நா ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போடலை. அதை ஓரளவுக்குக் காம்ப்பன்ஸேட் பண்ற மாதிரி இது ஒரு சின்ன கிஃப்ட். பிரிச்சுப்பாக்காம பத்திரமாக் கொண்டு போ."

"ஓக்கே அங்க்கிள், நா வறேன்."

அவொ போறா.

என்னோட செகண்ட் டாட்டர் போறா.
நா பார்த்துண்டே நிக்கிறேன்.

என்னோட பீபி ஜானுக்கு இன்னிக்கி ஒரு சின்ன ஹெல்ப் பண்ண முடிஞ்ச திருப்தியோட அவொ போறதைப் பார்த்துண்டே நிக்கிறேன்.

சரி, பாங்க்ல இன்ட்ரஸ்ட் கட்றதுக்குன்னு காரை டிஸ்ப்போஸ் பண்ணி இந்தப் பணத்தை ஏற்பாடு பண்ணினேன். இப்ப இன்ட்ரஸ்ட் கட்ட என்ன பண்றது?

கட்டலாம், சித்த லேட்டாக் கட்டலாம்.
முழுசா இல்லாட்டியும் ஒரு சின்ன அமெளன்ட் டாச்சும் கட்டலாம்.
இந்தக் கதைக்கி ஒரு ப்ரைஸ் கிடைச்சுடுத்துன்னா பேஷாக் கட்டலாம்.

(முடிந்தது)

About The Author

1 Comment

  1. SSS

    என்ன சொஉக்கியமா? ரொம்ப நல்ல இருக்கு

Comments are closed.