சினி சிப்ஸ் – கொறிக்க, சுவைக்க (7)

வசூல் மழை!

‘குருவி’ படத்தின் கேரள விநியோக உரிமம் ஒன்றரைக் கோடிக்கு விற்பனையில் சாதனை படைத்தது நாம் அறிந்ததே. ஆனால் சுசி.கணேசனின் ‘கந்தசாமி’யின் கேரள உரிமை 2 கோடிக்கு விற்பனையை எட்டி குருவியின் சாதனையை முறியடித்துள்ளதாகத் தெரிவிக்கிறது கோடம்பாக்கத்து வட்டாரம். சபாஷ் சரியான போட்டி!

*****

அயனில் சூர்யா மற்றும் தமன்னா

ஏவிஎம்மின் தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கவிருக்கும் ‘அயன்’ படத்தில் சூர்யா, தமன்னா மற்றும் பிரபு நடிக்கவுள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை மார்ச் 24ஆம் தேதி நடைபெற்றது. அயன் என்றால் எந்தவிதக் குறையுமில்லாத என்று அர்த்தமாம்.

*****

ரகுவரனுக்கு அஞ்சலி

ரகுவரன் ‘யாரடி நீ மோகினி’ படத்தில் தன்னுடைய பகுதியை நடித்து முடித்துவிட்டார். படக்குழுவினர் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இயக்குனர் ஜவஹர் மிகவும் வருந்தி அழுதாராம். திரையரங்குகளில் படம் போடுவதற்கு முன்பு ரகுவரனின் சில புகைப்படங்களை குறும்படமாக திரையிடவுள்ளனர்.

*****

அஜீத்துடன் சுமன் மோதல்

ராஜூ சுந்தரத்தின் ‘ஏகனி’ல் அஜீத்துடன் வில்லனாக சுமன் மோதுவது உறுதியாகிவிட்டது. ‘சிவாஜி’யின் வெற்றிக்குப் பிறகு பல வாய்ப்புகள் சுமனைத் தேடி வந்த போதிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களுக்காக காத்திருந்தார். காத்திருப்பு வீணாகவில்லை!

*****

வாரிசுகளின் ‘சக்கரைக்கட்டி’

கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் அவருடைய மகன் இயக்கும் படம் ‘சக்கரைக்கட்டி’. இப்படத்தின் மற்றெரு சிறப்பம்சம் பாக்கியராஜின் மகன் சாந்தனு இதன் கதாநாயகன். இப்படத்தினை பார்த்த பாக்கியராஜ் தாணுவிடம், "என் மகன் நடித்த படத்தைப் பார்க்க வந்தேன். இப்போது உங்கள் மகனின் படம் பார்த்த திருப்தியுடன் செல்கிறேன்" என்றாராம்.

*****

குழந்தைகளுக்கான ‘பப்பரமிட்டாய்’

சென்னையைச் சேர்ந்த அரசு சாரா நிறுவனமான ‘களஞ்சியம்’, குழந்தைகளுக்கான ஆல்பம் ஓன்றை வெளியிட்டுள்ளது. குழந்தைகளுக்கான கதைகளை பாடல்கள் வடிவில் சொல்லவருகிறது ‘பப்பரமிட்டாய்’. தனுஷ் இந்த ஆல்பத்தை வெளியிட இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் பெற்றுக்கொண்டார். பள்ளிகளிலும், குழந்தைகள் சார்ந்த நிறுவனங்களிலும் இலவசமாக வழங்கவுள்ளனர். சென்னை தி.நகரில் உள்ள ‘மைத்ரி கல்வி அறக்கட்டளை’ இதற்கு உதவ முன்வந்துள்ளது.

*****

த்ரிஷாவுக்கு மா தொலைக்காட்சியின் விருது

2007க்கான சிறந்த நடிகைக்கான விருதினை மா தெலைக்காட்சி, ‘ஆடவாரி மாட்டலுக்கு அர்தலே வேறலே’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததற்காக த்ரிஷாவிற்கு வழங்கியுள்ளனர். இப்படத்தின் இயக்குனர் செல்வராகவன். தமிழில் ‘யாரடி நீ மோகினி’யாக இது வெளிவரவுள்ளது. இதில் தனுஷ் மற்றும் நயன்தாரா நடிக்கின்றனர்.

*****

குசேலனின் வளர்ச்சி

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்கிறது குசேலன் திரைப்படம். சில செய்தித் துளிகள்:

  • ஓரு பாடலில் 5 கதாநாயகிகள் பங்கேற்க உள்ளனர்
  • பிரபு முக்கியமான வேடத்தில் நடிக்கவுள்ளார்
  • கமலஹாசன், அஜீத், விஜய், விக்ரம், மாதவன், தபு, நமீதா ஆகியவர்களை ஓரு பாடலில் நடிக்க வைப்பதற்கான முயற்சிகள் நடக்கின்றன.

*****

About The Author