சில்லுனு ஒரு அரட்டை

ஹலோ ஃபிரெண்ட்ஸ்,

எல்லோரும் எப்படி இருக்கீங்க?

போன வாரம் எத்தனை பேர் உங்களுடைய பள்ளி காலங்களை நினைத்து பார்த்தீங்க? உங்கள்ல எத்தனைப் பேருக்குத் தங்களுடைய பள்ளி தோழி/தோழர்களுடைய முகமும் பெயரும் நினைவிற்கு வந்தது? எனக்கு தோழர்கள், தோழிகளுடைய பெயர்கள் மட்டுமில்லாம அவங்களோட கழித்த அருமையான நாட்களும் நினைவுக்கு வந்தது. போன வாரம் முழுக்க நான் இந்த வகுப்பு படிக்கும் போது இது நடந்தது, அந்த வகுப்பு படிக்கும் போது அது நடந்ததுன்னு சொல்லியே எங்க வீட்டிலிருக்கும் எல்லோரையும் ஒரு வழி செய்துட்டேன்.

போன வாரம், ‘என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே…’ அப்படீன்னு எதிர்வீடு, பக்கத்து வீடுன்னில்லாம தமிழ்நாட்டின் பல இடங்கள்ல இருந்தும் ஏகப்பட்ட பேர் சோகமா குரல் குடுத்தாங்க. எல்லாம் நம்ம முதலமைச்சரின் தயவால் அமலுக்கு வந்த ‘தமிழ் நாடு அரசு கேபிளி’னால் வந்த வினை. நிறைய பேர் அரசியல் பத்தி பேசிட்டிருக்கிறதாலே நாமும் அதையே பேசுவானேன்.

சன் நிறுவனத்தைப் போல மெகா டீவி நிறுவனத்திலும் மெகா மியூஸிக், மெகா 24 (திரைப்படங்களுக்கான சேனல்) சேனல்கள் இருப்பது ‘அரசு கேபிளி’ன் அமுலுக்குப் பிறகே எனக்கு தெரியவந்தது. ரூபாய் 70க்கு 70 சேனல்களாமே, சரி என்னதான் இருக்குன்னு பார்த்தா, அறிமுகமே இல்லாத நிறைய சேனல்கள் அதுல இருந்தது. தூர்தர்ஷனிலிருந்து மட்டும் 21 சேனல்கள். நிறைய புது சேனல்களுக்கு எல்லோருமே பழகிட்ட இந்த நிலையில இந்த மாற்றம் மக்களை ரொம்பவே கஷ்டப்படுத்திடுச்சு. இதோட உச்சக்கட்டம் என்ன தெரியுமா? "திருமதி செல்வம் என்ன ஆச்சுன்னு தெரியலையே!", "செல்லம்மாவில ராதிகாவுக்கு என்ன நடந்துதோ"ன்னு ஏகப்பட்டப் புலம்பல்கள். (இதுவரை தொடர் மற்றும் நெடுந்தொடர் நாடகங்கள் எதுவும் பார்க்கமலிருக்கக் காரணமான என்னுடைய பொறுமையின்மையை ரொம்பவும் நன்றியுடன் நினைச்சுக்கிட்டேன்.) நான் இதுவரை பார்த்து வந்த சேனல்கள் ஒளிபரப்பலில் இல்லாதப்போது எனக்கும் கொஞ்சம் ஏமாற்றமாதான் இருந்தது. மாற்று வழி கிடைக்கும் வரை இப்போ ஒளிபரப்பாகும் சேனல்கள் நம்மளோட விருப்பத்திற்கேற்ற மாதிரி ஏதாவது தேருமான்னு தேடி ஒரு வழியா ‘ஆஸ்தா’ சேனலைக் கண்டுபிடிச்சேன். வாழ்க்கை தத்துவங்கள் சம்பந்தமான சில சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நல்லாயிருந்தது.

பொதுவா நம் வாழ்க்கையில தினம் தினம் நிறைய புதிய விஷயங்களை (சின்னது, பெரியதுன்னு பாகுபாடில்லாம) நாம கத்துக்கிட்டிருக்கோம். அதே மாதிரிதான் நான் நிலாச்சாரல்ல அரட்டை எழுத ஆரம்பிச்சு சில வாரங்களுக்குப் பிறகு நடந்த ஒரு விஷயம். ஒரு முறை என்னுடைய அரட்டையை எழுதி முடித்து ஆசிரியரின் (நிலாவின்) பரிசீலனைக்கு அனுப்பியபோது, "இந்த முறை அரட்டையில் சில கனமான விஷயங்களை சொல்லியிருக்கேன். இது எந்தளவிற்கு வாசகர்களுக்குப் பிடிக்கும்னு தெரியலை"ன்னு சொன்னேன். அதுக்கு நிலா சொன்னாங்க "நீ சொல்லும் விஷயங்களை விட அது சொல்லப்படும் முறைதான் கவனத்திலிருக்கணும். அதாவது யாரையும் காயப்படுத்தாத வகையில் விஷயங்களை சொல்லுவதே முக்கியம்"னு சொன்னாங்க. அதுவும் சரிதானேன்னு எனக்கு தோணித்து. அதிலிருந்து எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் விமர்சனமோ, கருத்தோ தெரிவிப்பதற்கு முன்பு யாரையும் நான் காயப்படுத்தலையேன்னு உறுதி செய்வதுண்டு. இதையே என்னுடைய தோழி ரூபா மற்றொரு சமயத்துல சொன்னது நினைவுக்கு வந்தது. "எப்பவும் எங்கேயும் சரி, தப்பு என்பதற்கு சரியான விளக்கம் கிடையாது. என்னுடைய பார்வையில சரியா இருக்கும் ஒரு விஷயம் உனக்கு சரியாகவே தோன்றணும்னு அவசியமில்லை. உனக்கு தவறாக தெரிய வாய்ப்பிருக்கு. உனக்கு சரின்னு தோன்றும் ஒரு விஷயம் எனக்கு தவறாகத் தோன்ற வாய்ப்பிருக்கு. இந்த உண்மையை நாம புரிஞ்சுக்கிட்டாலே, மனிதர்களுக்கிடையே ஏற்படக்கூடிய பல பிரச்சனைகள் குறையும்"ன்னு சொன்னாள்.

போன வாரம் வந்த ஆசிரியர் தின சம்பந்தமான அரட்டையை படிச்சுட்டு என்னுடைய தோழி ரமா போன் செய்திருந்தா. அவளுக்கு ஸ்ரீராம், ஸ்ரீ கிருஷ்ணான்னு ரெட்டைக் குழந்தைகள். ரெண்டும் ரொம்ப சுட்டி. இந்த வருஷம்தான் ரெண்டு பேரையும் பள்ளியில சேர்த்திருந்தாங்க. பள்ளிக்கு ஒழுங்கா போயிட்டு வற்ராங்களான்னு விசாரிச்சப்போதான் அந்த குழங்தைகளுக்கு மிட் டேர்ம் (mid-term) தேர்வு நடப்பதாக சொன்னா. எனக்கு ரொம்பவே கஷ்டமாப் போச்சு. எல்.கே.ஜீ (LKG) படிக்கும் குழந்தைகளுக்கு மிட் டேர்ம் தேர்வு கொஞ்சம் அதிகமோன்னு தோணித்து. தேர்வுக்கான பாடங்கள் என்னன்னு விசாரிச்சேன். எண்கள் 1 முதல் 10 வரை, தமிழ் உயிர் எழுத்துக்கள் ‘அ’ முதல் ‘ஊ’ வரை, ஆங்கில எழுத்துக்கள் (alphabets) ‘a’ முதல் ‘i’ வரை சொல்லி எழுத வேண்டுமாம். குட்டீஸை நினைச்சா ரொம்பவே பாவமாயிருக்கு. இந்த வயசுல, இந்த வகுப்புல, இந்த அளவு பாடச்சுமை தேவையாங்குற என்னுடைய கேள்விக்கு யார்கிட்டே பதில் கிடைக்கும்னு தெரியலை. ஹூம்…

இன்னும் இரண்டு வாரங்கள்ல நவராத்திரி வந்திடும். போன முறை கோவைக்கு வந்து ஒரு சில மாதங்கள் மட்டுமே முடிந்திருந்ததால பொம்மைகளை சரியான முறையில அடுக்கி அழகுபடுத்த முடியலை. இருந்தாலும் முடிந்தவரை பொம்மைகள் வைத்து, ஒரு சின்ன மிருகக்காட்சிசாலை, பக்கத்துல மலைன்னு சின்ன அளவுல கொலு பொம்மைகளைத் தயார் செய்தேன். இந்த முறை தேவையான நேரம் இருந்ததால பொம்மைகள் வைத்திட தேவையான படிகள் தயார் செய்தாச்சு. வரும் வாரங்கள்ல ‘காதி’க்கோ (அ) ‘சர்வோதயா சங்க’த்திற்கோ போய் தேவையான பொம்மைகளை வாங்கலாம்னு இருக்கேன்.

கடைசி கட்டி மாம்பழத்திற்கு வருவோம். பார்ன்வில்லே சாக்லேட் விளம்பரத்தை மொழிபெயர்க்காம அரட்டையை முடிக்க முடியுமா?

காட்பரி நிறுவனத்தின் பார்ன்வில்லே சாக்லேட் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கானா நாட்டின் கொக்கோவினால் தயாரிக்கப்படுகிறது. அந்நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி பார்ன்வில்லே சாக்லேட்டின் உற்பத்திக்குத் தேவையான கொக்கோவினை வாங்கிட கானாவிற்கு செல்கிறார். அங்கேயுள்ள கொக்கோக்களை அதிகாரி பரிசோதித்துக் கொண்டிருக்கும்போது ஒரு கொக்கோவை பார்ன்வில்லே சாக்லெட்டின் உற்பத்திக்கு உதவுமென்றும் மற்றொரு கொக்கோவை சாக்லெட்டின் உற்பத்திக்கு உபயோகப்படாதென்றும் ஒதுக்குகிறார். திடீரென்று ஒரு அழுகுரல் கேட்கிறது. அனைவரும் ஆச்சர்யத்துடனும் அதிர்ச்சியுடனும் பார்க்கும் போது நிராகரிக்கப்பட்ட கொக்கோ பார்ன்வில்லே சாக்லெட்டின் தயாரிப்பில் தன்னால் இடம் பெற முடியவில்லை என்பதால் ஒரு சிறு குழந்தையைப் போல அழுகிறது. கொக்கோவின் வருத்தத்தைக் கண்ட அதிகாரி அதனிடம் தன்னுடைய வருத்தத்தைத் தெரிவிக்கும்படி கூறுகிறார். அதற்குள் அங்கிருக்கும் ஒருவர், பார்ன்வில்லே சாக்லேட்டின் உற்பத்திக்கு பயன்படாத அந்த கொக்கோ வீணானதென்று அதனை தூக்கியெறிந்துவிடுகிறார். இதுவே, அவ்விளம்பரத்தின் சாராம்சம்.

http://www.youtube.com/watch?v=ak_yDVFqRwk

சரிங்க.. நம்பளுடைய அரட்டையை அடுத்த வாரம் தொடரும் வரை டா டா… பை பை… ஸீயூ…

About The Author

2 Comments

  1. கலையரசி

    அன்பு யஷ்!
    தொலைக்காட்சி சீரியல்கள் போதை மருந்து போல நம் இல்லத்தரசிகளை மயக்கி வைச்சிருக்கு. என்னிக்காவது பார்க்க முடியாமப் போயிட்டா அவங்க புலம்பல்களைக் கேட்கணுமே. நல்ல வேளையா எனக்கும் இந்த மாதிரி தொடர் பார்க்கிறதில பொறுமையோ ஆர்வமோ இல்லை.
    ”எப்பவும் எங்கேயும் சரி, தப்பு என்பதற்கு சரியான விளக்கம் கிடையாது. என்னுடைய பார்வையில சரியா இருக்கும் ஒரு விஷயம் உனக்கு சரியாகவே தோன்றணும்னு அவசியமில்லை. உனக்கு தவறாக தெரிய வாய்ப்பிருக்கு. உனக்கு சரின்னு தோன்றும் ஒரு விஷயம் எனக்கு தவறாகத் தோன்ற வாய்ப்பிருக்கு. இந்த உண்மையை நாம புரிஞ்சுக்கிட்டாலே, மனிதர்களுக்கிடையே ஏற்படக்கூடிய பல பிரச்சனைகள் குறையும்,” ஒங்க தோழி ரூபா சொன்னது ரொம்ப அருமையான கருத்து.

  2. Yash

    கலை,

    யதார்த்தமான பல விஷயங்களை நாம சரிவர புரிந்து கொள்ளாதது மட்டுமில்லாம அதை புரிந்துகொள்ளும் முயற்சியிலும் ஈடுபடுவதில்லையோன்னு பலமுறை நினைத்து வருத்தப்பட்டதுண்டு.

Comments are closed.