நிலை திரும்பும் தேர் (3)

"பாவா… பாவா…" என்ற அவள் புலம்பலில் தன்னை மறந்து அப்படியே நெகிழ்ந்து, கரைந்து போனார் நாயுடு. பிறகுதான் சமாளித்துக்கொண்டு விஷயத்தைக் கேட்டபோது, விழுந்து விழுந்து சிரித்தார்.

"அட, என்ன புள்ளே நீ? எம்புட்டுச் சினிமா பார்த்திருக்கே… அத்தனையும் வெறும் நடிப்புத்தானே? இதுக்கெல்லாம் போயா கலங்குறது?" என்றார்.

"அது இல்ல பாவா… இதுவரைக்கும் ஒரு படத்தில்கூட நீங்க துன்பப்படுற மாதிரி, துயரப்படுற மாதிரி பார்த்ததில்லேல்ல… அதான் பயந்துட்டேன்… ராவுல அதே மாதிரி ஒரு கனா வேறே கண்டுட்டனா… ஒரே கலக்கம்…." என்று குழந்தைபோல் அவள் அழுதது நாயுடுவைக் கலங்கடித்துவிட்டது. இவரது கால்களையும், கைகளையும் தடவித் தடவிப் பார்த்தவாறே நம்புவதற்குத் தலைப்பட்டாள் பஞ்சவர்ணம்.

சமஸ்தானத்தின் பணிபுரியும் சேவகர்களுக்கெல்லாம் தலைமையாக முன் நின்று அரண்மனை வாசலில் கூட்டத்தைக் கூட்டி கூலி உயர்வு கேட்பதுபோல் ஒரு காட்ஷி. ஆத்திரமும், ஆவேசமும் கட்டி மீறிப் போக, கலகம் ஏற்படும் சூழலில் சமதானத்தின் பெருமைக்குத் தீனி போட்டு வளர்க்கப்படும் உயர்ஜாதி நாய்கள், இவர்களை நோக்கி ஏவி விடப்படுகின்றன. நாய்கள் கூலியாட்களை நோக்கிப் பாய்ந்துவரும் காட்ஷி. விரட்டி விரட்டியடிக்க, தலைகுப்புற விழுந்து தட்டுத் தடுமாறிய நிலையில் கொழு கொழு மலைஜாதி நாய்கள் காலிலும், கையிலும் விழுந்து பிடுங்க, தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று கூட்டம் தரிகெட்டு சிதறி ஓடுகிறது.

"பூராவுமே பழக்கின நாய்கள் புள்ளே… சொல்லப் போனா ஒரே சமயத்துல எடுத்த காட்ஷிகளே இல்லை அது… நாய்கள் எல்லாம் கூட்டமா ஓடி வர்றது தனி… நாங்க விழுந்து புரள்றது தனி…. எல்லாத்தையும் ஒண்ணாச் சேர்த்துக் காண்பிக்கிற போது ஒனக்கு அப்டித் தெரியுது. அம்புடுதே… அப்படியெல்லாம் கடிக்கவிட்டு எங்கயாச்சம் எடுப்பாகளா? புரியாத புள்ளையா இருக்கியே?"

"இருந்தாலும் மேலே விழுந்து லபக் லபக்குன்னு புதுங்கிற மாதிரியே இருக்குதே…. லேசுல நம்ப முடியுதா… போங்க பாவா…." என்று செல்லமாக அவர் மடியில் விழுந்து சிணுங்கினாள் பஞ்சவர்ணம். அவர் காலிலோ, கையிலோ பொட்டுக் காயமில்லை என்பது ஒன்றுதான் அவளை நம்ப வைத்தது.

சின்னச் சின்ன வேஷமானாலும், "எம்புருஷன் வராருல்ல…" என்று நீட்டி முழக்கிக் கொண்டு ஓடி ஓடிப் பார்த்தாள்.

"அடி என்னாடி இது இந்த ஓட்டம் ஓடற…?" என்று அக்கம்பக்கத்தில் வாய் கிழிந்தால்….

"ம்க்கும்…. கட்டின புருஷன் பக்கத்திலே இல்லன்னாத் தெரியும்….?" என்று பதிலிறுத்தி அடக்குவாள். இருந்திருந்தாற்போல் படங்கள் வருவது நின்று போகையில் கடுதாசி எழுதி மகிழ்ந்து கொண்டாள். அதுதான் அவளுக்குப் பெருத்த ஆறுதல், ஆரம்பத்தில் "இப்படி போயிட்டாகளே…" என்று நினைத்தவள், நாட்களும் மாதமும் செல்லச் செல்ல அந்த மனபாரம் குறைவதாய் உணர்ந்தாள்.

"என்னப் பத்திக் கவலையே படாதீக பாவா… நா எப்படியும் சமாளிச்சுக்குவேன்… நீங்க உன்னமனசுக்குப் பிடிச்ச தொழில்ல மேல வரப் பாருங்க… அதான் என்னோட பிரார்த்தனை…" என்று தைரியம் சொல்லிப் பதில் எழுதுவாள்.

இது நாயுடுவை எந்த அளவுக்கு மேலே உயர்த்திற்றோ தெரியாது. ஒரு கட்டத்தில் அவரிடமிருந்து கடிதம் வருவது அறவே நின்று போனது. அதுமட்டுமில்லாமல் படங்கள் வருவதும் நின்று போயிருந்ததுதான் அவளை மிகவும் கலங்கடித்தது. என்னவாயிற்று பாவாவுக்கு? ஏதோ ஒன்றிரண்டு என்று ஆகிப் போனதே! ஏன்?அவற்றிலும் வந்து போவதே தெரியவில்லயே? வசனமுள்ள காட்சிகளே இல்லையே? கூட்டத்தோடு கூட்டமாக அல்லவா நிற்கிறார்?

பிழைப்புக்கு என்ன செய்கிறார்? சோற்றுக்குத் திண்டாடுகிறாரோ? உடல் நலமில்லையோ?

இப்படி அவள் கலங்கி நின்ற வேளையில்தான் ஊர்த் திருவிழாவும் நெருங்கிற்று.

"என்னப்பா ராசு…. நாயுடு நின்னாரே…. எங்கே?…." தூரத்தில் நின்றபோது கண்ணுக்குத் தெரிந்தவர் அருகில் வந்ததும் காணாமல் போனதுபோல் இருந்தது.

"இப்படித்தானே போறாரு…." – டீக்கடை ராசு அலட்டிக் கொள்ளாமல் கூறினான்.

"இன்னா விஷயமாம்…. திருவிழாவுக்கு வந்திருக்காராக்கும்…"

"அப்படித்தான் சொன்னாரு… ஆனா மனுஷங்கிட்ட மின்னமாடிரி சுரத்தில்லையே….?"

"சுரத்தில்லையா… ஏன்யா நீயெல்லாம் கண்டுக்கிறமாதிரியாவா நடந்துக்குவாரு? சாதாரணப்பட்ட ஆளாய்யா அவரு? அத்தனை லேசாப் போச்சா உனக்கு?"

"அட, அதுக்கில்லண்ணே… எப்பவும் வந்தருன்னா சுத்தியிருக்கிற அத்தனை பேப்பரையும் ஆஞ்சுபிட்டு? சவடாலா எங்ககிட்டல்லாம் பேசி அளந்திட்டுல்ல போவாரு. அதக் காணலியேன்னு சொன்னேன்…. யாருகிட்டயும் ஒத்த வார்த்தை பேசலண்ணே…"

உண்மைதான். நாயுடுவின் பேச்சும் கலகல்ப்பும் ஊர் அறிந்த ஒன்று. என்ன ஆகியிருக்கும் இந்த மனுஷனுக்கு? மனசு சங்கடப்பட்டது. கதை கதையாய்ச் சொல்வாரே தன் சினிமா அனுபவங்களையெல்லாம்? நாயுடு ஊருக்கு வரும் மாதம் என்று பலரும் எதிர்பார்த்திருப்பாரே? எல்லோருக்கும் நல்லவராய், எல்லோரின் நலம் விரும்பியாய், சினிமாத் துக்கிரி எதுவுமில்லாமல், போனது போலவே வந்து வந்து போகும் நாயுடுவா இப்படி? என்னவாயிற்று அவருக்கு?

ஊரில் அனேகமாக எல்லோரின் கேள்வியும் இதுவாகவே இருந்தது. நேற்றுத்தான் வந்து இறங்கியிருக்கும் மனுஷன் என்னதான் செய்கிறார் பார்க்கலாமே? திருவிழாவுக்கு இன்னும் நாள் கிடக்கிறதே? கோயில் கொடிக்கம்பம் கூட இன்னும் நாட்டவில்லையே? அவ்வளவு அட்வான்சாக அல்லவா வந்திருக்கிறார் நாயுடு. இனிப் போய்விட்டுத் திரும்புவது என்பதுகூட அத்தனை சாத்தியமில்லையே? இல்லை, அப்படி ஏதேனும் எண்ண வைத்திருக்கிறாரா? எப்படியும் அவர்ன் கோயில் கொடை இல்லாமல் போகாது. பார்த்து விடுவோமே…!

காத்திருந்தனர் எல்லோரும்.

இரண்டொரு நாளில் நாயுடு வரத்தான் செய்தார் பார்க்க! எல்லோரும் அதிசயிக்க!

இதென்ன கொலம்? நம்ம நாயுடுவா இது?

பளிச்சென்று விபூதிப்பட்டை, பெரிய சந்தனப்பொட்டு, அதன் நடுவே வட்டமாய் குங்குமம், பளபளக்க, இரண்டு மூன்று கருகம்ணி மாலைகளோடு, அந்தக் கருப்புக் கோட்டைப் பழையபடி எடுத்து மாட்டிக்கொண்டு, ஜதை ஜதையாக வளையல் சரங்கள் தொங்க, கால்களை வீசிப் போட்டபடி வந்து கொண்டிருக்கும் நம்ம கோகுல் நாயுடுவா இது?

நாயுடு சொன்னார் ஒரு நாள்.

"எத்தன ராத்திரி பகலுக்குப்பா செத்துச் செத்துப் பிழைக்குறது? ஒரு நிரந்தரமில்லாம? அதான் இப்டி வந்திட்டேன்… பழையபடி… உங்க எல்லார்கூடவும் இருந்து கழிச்சிடலாமுன்னு… இதான் நிரந்தரம்… கண்ணு முன்னால இருக்குற நிதர்சனம்… இந்த முடிவுக்கு வர இத்தன நாள் ஆகிப்போச்சு… பாழாப்போன மனசு… என்ன பண்ணட்டும்…."

யாரையும் பார்க்கப் பிடிக்காததுபோல், அதே சமயம் சொல்லியே தீர வேண்டும் என்ற ஆதங்க மேலீட்டில், எல்லோருக்கும் கேட்பதுபோல், சத்தமாக, வாய்விட்டு, மனம் விட்டு தன் பாட்டுக்குச் சொல்லிக்கொண்டே போய்க் கொண்டிருந்தார் நாயுடு. 

(‘திரை விலகல்’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author

1 Comment

Comments are closed.