மேளா (3)

ஜீ.டி. எக்ஸ்பிரசில் தில்லி வரை டிக்கெட் எடுத்தார்கள். மூணு டிக்கெட். மூணு பேரில் ஒருத்தனுக்கும் ஹிந்தி தெரியாது. அதில் சிவசைலம் பாஷையே அற்றவன்! கூட வந்தவனில் யாரும் தமிழ் பேசுகிறவன் இல்லை. வடக்கத்தியான் எல்லாவனும் ரயில் நகர நகர தின்கிறான்கள், அப்படித் தின்கிறான்கள். கிளம்பும்போதே எடுத்துக் கொண்டு கிளம்பியிருந்தார்கள். ரசிக்க முடியாமல் பாட்டும் கூச்சலும்…

ஆனால் இப்படி அடையாளமற்று இருப்பதை ரமணியும் அப்பாவும் விரும்பித்தான் கிளம்பியிருந்தார்கள். எங்கே போவது, எங்கே இறங்குவது ஒரு யோசனை கிடையாது. ஸ்டேஷன் ஸ்டேஷனாய் எது கிடைத்தாலும், ஸீட்லெஸ், வாழைப்பழம், முறுக்கு… அப்பா சிவசைலத்துக்கு வஞ்சனையில்லாமல் வாங்கிக் கொடுத்தார். ”சாப்பிடட்டும் சாப்பிடட்டும்” என்றார். ”கடைசிச் சாப்பாடு” என்று முடிக்குமுன் கண் கலங்கினார். ”ஷ்” என்றான் ரமணி அவர் கையை அழுத்தி.

ஒரு ராத்திரிப் போல தெரியாத ஊரில் நின்றது ரயில். மூவருக்குமே அந்த ஊர் தெரியாது. ஆனால் நாலைந்து ஊர் முன்னாலிருந்தே திபுதிபுவென்று கூட்டம் ஏறியமணியமாய் இருந்தது. எல்லாரும் சந்தோஷமாய் இருந்தார்கள். அந்த ஊரில் எல்லாரும் இறங்கிக் கொண்டதைப் பார்த்ததும் என்ன தோணியதோ ”ரமணி இங்க இறங்கிக்கலாம்…” என்றார் அப்பா. ஊரில் எதோ திருவிழா போலிருந்தது. அபாரமான கூட்டம். மேளா நாளைக்கு என்று தோணியது, ரயில் நிலையத்திலேயே ஏராளமான பேர் தங்கியிருந்தார்கள். இந்தச் சின்ன ஊரில் இத்தனை கூட்டமா… ஆயிரக் கணக்கில்… மனிதக் கடல்.

ரமணி அவரைப் பார்த்து பாராட்டும் புன்னகை செய்தான். சிவசைலமும் ஊரை ரசித்தாப் போலத்தான் இருந்தது. சின்ன ஊர். திருவிழா இல்லைன்னா அந்த ரயில் அங்கே நிற்குமா என்றே சந்தேகம். ஊருக்குள் இறங்கிப் போனார்கள். கூட்டங் கூட்டமாய் பக்தகோடிகள். மீசையும் தாடியும் கையில் கழியும். சாமிகள், ஆண்டிகள், பிச்சைக்காரர்கள்… எல்லாரும் ஒரே மாதிரிதான் தெரிந்தது. நெற்றி நிறைய விபூதி பூசி பம் பம் மகதேவ்… என்று அடிக்கடி உருமினார்கள். பயமாய் இருந்தது.

வெட்டவெளிப் பொட்டல் எல்லாம் தாண்டி நாலைந்து கிலோ கடந்து ஊர்க்கோவில். சிவன் கோவில் போலிருந்தது. திருநாவுக்கரசர் இருந்தால், டியெம்மெஸ் குரலில் எதும் தேவாரம் பாடியிருக்கலாம்.

நெட்டித் தள்ளிக் கொண்டு கூட்டம். வா வா, என்கிறார் அப்பா. சிவசைலம் தயங்கி அங்கங்கே நின்றான். ரமணி கையைப் பிடித்துக்கொண்டு விறுவிறுவென்று முன்னால் போனார் அப்பா. நேர் எதிர்த் திசையில் இருவருமாய் வேகவேகமாய்ப் போனார்கள். மனிதக் கடலில் எங்கேயோ பின்தங்கியிருந்தான் சிவசைலம்.

ஒரு மணி நடந்திருப்பார்கள். நல்ல இருட்டு. எந்த ஊர் தெரியாது. திருவிழாக் கூட்டமெல்லாம் கடந்து வந்திருந்தார்கள். ஒருவித புது நாற்றம். ஆட்டுக் கொட்டில் நிறைய இருக்கிற ஊரோ தெரியாது. எல்லாம் கூரை வீடுகள். வந்த வழியே திரும்பப் போகக் கூட அவர்களுக்குத் தெரியாது.

ஆசுவாசமாய் ஒரு மரத்தடியில் உட்கார்ந்தார்கள். ரெண்டு பக்கமும் கோதுமை வயல். சிலுசிலுவென்று காற்று. கால் வலி கண்டிருந்தது. ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளவில்லை. காலை நீட்டி உட்கார்ந்தார்கள். வந்த வழியே, சிவசைலம் இருந்த ஊர் வழியே, போகக் கூடாது என்று ரெண்டுபேரும் நினைத்துக் கொண்டார்கள். பேசிக் கொள்ளவில்லை.

”அத்திம்பேர்…” என்றான் ரமணி பதறி.

”என்னடா?” என்று திரும்பிப் பார்த்தார்.

அவர்கள் பை கிழிந்திருந்தது. கைத்துட்டை அதில் பத்திரப்படுத்தி வைத்திருந்தது. திருவிழாக் கூட்டத்தில் எவனோ பிளேடு போட்டிருந்தான். தோடுடைய செவியனையே காதறுக்கிற ஆட்கள் சுற்றி வளையவரும் பிரதேசம் அது…

மரத்தடியிலும் திண்ணைகளிலும் சிவசைலம் எப்படி பொழுதைக் கழிப்பான் தெரியவில்லை. தெரியாத ஊர். யார் சாப்பாடு தருவார்கள் தெரியாது… அதைப் பற்றிக் கவலைப்பட முடியாது. எல்லாவற்றுக்கும் முடிவு வேண்டும்.

யாருக்கும் அவர்கள் பேசும் பாஷையே புரியவில்லை. ஆவ், என்றால் வா. ஜாவ், என்றால் போ. முதல்நாள் யாரிடமும் எதும் கேட்காமல் ஊரைச் சுற்றி வந்தார்கள். கிழிந்த பை வழியே வேட்டி துணிமணிகள் வெளியே பிதுங்கித் தெரிந்தன. யாராவது பெரிய மனிதன் போலிருந்தால் நின்று பேசுவார்கள். ஆவ், அல்ல – ஜாவ், என்றான் அவன். பத்து பேரைப் பார்த்து தயங்கி ஒருத்தனிடம் பேசினார்கள். ஒருநாள் பூராவும் அலைந்தார்கள். பசியானால் குடலைப் பிடுங்கியது. யாரிடமும் கையேந்த மனசில்லை. ஏந்தினாலும், ஜாவ்! –

சிவசைலம், நாம – ரெண்டு பேருக்கும் ஒரே நிலைமைதான், என்றிருந்தது.

ஒரு மரத்தடியில் வந்து படுத்துக் கொண்டார்கள். இருட்டில் தப்பித்தால் போதும் என்று ஓடி வந்தது. திரும்பும் வழி தெரியவில்லை. திருவிழா முடிந்திருக்கலாம். ரெண்டு நாளாய்க் குளிக்கவில்லை….

ஊர் திரும்பவும் வழி தெரியவில்லை. திருட்டு ரயில் ஏறலாம். எந்த ரயில் எந்த ஊர் போகும் தெரியவில்லை. நாம ஏறும் ரயில் நேர் எதிர்த்திசையில் போனால்?… மீசையும் தாடியுமாய் ஆகியிருந்தார்கள் மூணுநாளில். பம் பம் மகதேவ், என்று அதிராத குறை. சாமியாராக இருந்தால் கூட சோறு கிடைத்துவிடும்.

இன்ன கஷ்டம் என்றில்லை. ஒரே தத்தளிப்பாகி விட்டது. நாலைந்து நாள் சிரமப்பட்டு, யாரையோ பிடித்து ஆங்கிலம் பேசி, ஊருக்குப் போய்ப் பணம் அனுப்புகிறோம், என்று உறுதி தந்து, நீங்க பணம் தர வேணாம், டிக்கெட் எடுத்துக் குடுத்துருங்க, என்று பேசி…

வீடு திரும்ப ஒரு வாரம் ஆகி விட்டது.

கதவைத் தட்டும்போது மலையை இறக்கி வைத்த ஆசுவாசம்.

கதவைத் திறந்தான் சிவசைலம்.

(நன்றி : கல்கி வார இதழ் -27.07.08)

About The Author

1 Comment

Comments are closed.