வில்லு – இசை விமர்சனம்

‘போக்கிரி’யின் வெற்றிக்குப் பின் இயக்குனர் பிரபுதேவாவுடன் விஜய் மீண்டும் இணையும் படமிது. சென்ற வாரம் படம் வெளியானது. தேவிஸ்ரீபிரசாத் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். மொத்தம் எட்டு பாடல்கள்! விஜய்யின் அதிரடி ஆக்ஷன் படங்கள் என்றாலே பாடல்களும் அதிரடி, குத்து ரகங்களாகத்தானே இருக்க வேண்டும்!

ஹே ராமா ராமா

இசைத்தட்டின் முதல் பாடல், விஜய்யின் அறிமுகப் பாடல். அறிவுரை சொல்கிறார் கபிலனின் வரிகளில்!! கருத்து சொல்வதை நிறுத்திக்கொண்டால் மனிதரைப் பாராட்டலாம். மிகவும் அதிவேக பீட்.. – தமிழில் சொன்னால் டப்பாங்குத்து! பாடகர் அமல்ராஜ், தன் வேலையை கச்சிதமாக செய்துள்ளார்! இன்னும் கொஞ்ச நல்ல பாடல்கள் கிடைத்தால் பரவாயில்லை.

நீ கோபப்பட்டால்

சண்டை – பாடல் – காதல் – பாடல் – இது தானே விஜய் படங்களின் ஃபார்முலா! இது ஒரு காதல் பாடல். காதலிக்காக ஏங்கும் காதலன் பாடுகிறார். பாடகர் சாகருக்கு வேலை அதிகம் இல்லை. பா.விஜய் ஏதோ வித்தியாசமாக எழுத முயற்சித்துள்ளார். ஆங்காங்கே கொஞ்சம் அபத்தமாக உள்ளது.இசையைப் பற்றி பெரிதாக சொல்வதற்கு எதுவும் கிடையாது. ஏதோ சிறுவர் பாடலைக் கேட்பது போன்ற உணர்வுதான் ஏற்படுகின்றது.

டாடி மம்மி

அழகாய் வயலினில் பாடலை ஆரம்பித்ததற்கு தேவிஸ்ரீ பிரசாத்தைப் பாராட்டலாம் என்று நினைத்தால், தப்பட்டை சீக்கிரமே தொற்றிக் கொள்கிறது. ஜாலியான வரிகளை எழுதியிருக்கிறார் விவேகா. குரல் – நடிகை மம்தா மோஹன்தாஸ்! இவர் பாடுவாரா! இது தமிழில் இரண்டாம் பாடலாம்! காளை என்ற திரைப்படத்திலும் பாடியிருக்கிறார் போல! பரவாயில்லை, நன்றாகவே பாடுகின்றார். மற்றபடி, இன்னுமொரு அதிவேகப் பாடல்.

ஆர் யூ க்ரேசி

ஆங்கில வரிகளில் நாற்பத்தியாரு நொடிகளுக்கு ஒரு பாடல். இதை எழுதுவதற்கு மூன்று பேர்கள் – பிரபுதேவா உள்பட! ஆங்கில வார்த்தைகளில் கண்டபடியெல்லாம் திட்டுகிறார்கள். அடுத்த பாடல் ப்ளீஸ்!

ஜல்சா ஜல்சா

ஸ்பானிஷ் வார்த்தைகளில் பாடல் ஆரம்பிக்கிறது. அதற்குப் பிறகும் ‘சுந்தர’த் தமிழ்தான் "ஜல்சா-ரவுசா-நைசா"! எதுகை என்ற நினைப்பு போல! இது தமிழே இல்லை ஐயா! வரிகள் ரோஹிணி. குரல் பாபு ஸேஹ்கல் மற்றும் ரீடா! எல்லாரும் டான்ஸ் ஆட வேண்டும் என்று இசையமைத்தார் போல. வேறொன்றும் பெரிதாக இல்லை! விஜய்தான் இளைய தளபதி என்று ஒவ்வொரு படத்திலும் ஏதோ ஒரு பாடலில் சொல்லிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லையே!

வாடா மாப்ளே

இல்லை – இது சிலோன் மனோகர் பாடல் இல்லை! ஆனால், அதே குதூகலம் பாடல் முழுவதும். காரணம் – கபிலனின் வரிகளும் திப்புவின் குரலும்! பெண் குரல் ரீட்டா! "சோலீ கே பீச்சே" என்று பாடுவதும், ‘தமிழில் பாடேன்’ என்று சொல்வதும், "விண்ணோடும் முகிலோடும்" என்று மாறுவதும் நிஜமாகவே சிரிப்பை ஏற்படுத்துகிறது. அங்கங்கு வடிவேலுவும் பாடுகின்றார் – அதாவது, பேசுகிறார்! பாடலுக்கு வலு சேர்க்கின்றன நாதஸ்வரமும், தவிலும்! மெலடிகள் எல்லாம் தேவையில்லை! இது போன்ற வித்தியாசமான முயற்சிகளை செய்தாலே, ரசிக்கத் தோன்றுகிறது!

தீம்தனக்க தில்லானா

மீண்டும் ஆங்கில ராப்! மீண்டும் அதிவேகம்! போதும் என்று எடுத்த எடுப்பிலேயே தோன்றிவிடுகின்றது! தேவிஸ்ரீ பிரசாதே பாடுகிறார். பெண் குரல் திவ்யா. உபயோகப்படுத்தியிருக்கும் அத்தனை வாத்தியங்களும் அடங்கிப் போய்விடுகின்றன காதை அடைக்கும் ட்ரம்ஸ் சத்தத்தில். கொஞ்சம் காது கொடுத்துக் கேட்டால் சினேகனின் வரிகளைக் கொஞ்சம் ரசிக்கலாம்.

ஜல்சா ஜல்சா (ரீமிக்ஸ்)

முதல் "ஜல்சா"விலேயே வாத்தியங்கள் எல்லாம் காதுகளை அடைத்தனவே! மீண்டும் ஏன் ஒரு ரீமிக்ஸ்! தேவிஸ்ரீபிரசாத், பாபு ஸேஹ்கல், ரீட்டா எல்லாரும் சேர்ந்து பாடுகிறார்கள் – அத்தனை வாத்தியங்களுக்கு நடுவில்! இன்னும் ஜாஸ்தி சத்தம்! இன்னும் ஜாஸ்தி ராப்! போதும் போதும்!

முன்னொரு காலத்தில், விஜய் படம் என்றால் ஒரேயொரு மெலடியாவது இருக்கும்! இன்னும் கூட "அழகூரில் பூத்தவளே" என் காதுகளில் ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது! ஏன் இப்பொழுதெல்லாம் அப்படி ஒன்றுமே அவர் செய்வதில்லை? வெரைட்டி என்றொன்று வேண்டாமா! ஏன் எல்லா பாடல்களும் அதிவேகமாகவே அமைந்திருக்க வேண்டும்! ஏன்? ஏன்?

About The Author

5 Comments

  1. Rishi

    நரேன்.. எனக்கென்னமோ பாட்டெல்லாம் நல்லாத்தான் இருக்கறமாதிரி ஒரு ஃபீலிங். வரிகளைச் சொல்லலை. நல்லா வகை குத்து குத்தறாங்க.. இயர்போன்ல கேட்க கேட்க… ஆடணும் போலத் தோணுது. நீங்க ஒரு மெலோடியஸ் பிரியர் போலத் தெரியுது!

  2. Rishi

    ரூ.27.50க்கு பிரிண்ட் அடிச்ச டிக்கட்டை கவுண்டர்லயே 80 ரூபா கொடுத்து போனோம். ஒண்ணும் வெளங்கல.. வடிவேலு படா பேஜாரு! டி.பி.கஜேந்திரன் காமெடி கூட நல்லாருந்துச்சு.. ஹலோ.. ஹலோ..

  3. muthu

    அது ஒரு படமே இல்லை.அதுக்கு இசை வேற. அது விமர்சனம் வேற. ஏப்பா இப்படி பன்னறீன்க

  4. a.vignesh

    விஜய கதைய கேக்க சொல்லுங. இயக்குனரை பாக்க சொல்லாதிக

Comments are closed.